Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அன்புமணி ஆகிய நான்' பிடிவாதக்காரன்...!

தருமபுரி மக்களின் நீண்ட வருட கோரிக்கையான மொரப்பூர்-தருமபுரி இணைப்பு ரயில் பாதை திட்டத்திற்கு கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த திட்டத்திற்கு நாங்கள்தான் காரணம் என்று தருமபுரி அ.தி.மு.க,  தி.மு.க.வினர் வாய்ப்பேச்சாக சொல்லிவந்தாலும் 'பா.ம.க.தான் காரணம், நான்தான் காரணம்'  என்று அன்புமணி மைக் பிடித்து சொல்லி வருகிறார். தருமபுரி எங்கும் 'வருங்கால முதல்வரே... சாதனை படைத்தீர்...!' என இந்த ரயில் திட்டத்திற்காக கட்அவுட்டுகள் களைகட்டுகின்றன.
 

இதற்காக நேற்று மாலை அன்புமணிக்கு தருமபுரி மாவட்ட எல்லை காரிமங்கலத்தில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அங்கிருந்து பிரச்சார வேனில் வந்த அன்புமணி, ஆங்காங்கே இறங்கி மக்களுக்கு ஸ்வீட் கொடுத்து கொண்டாடினார். எதற்காக ஸ்வீட் கொடுக்கிறார் என்று தெரியாமல் சிலர் முழிக்க,  "உங்கள் நீண்ட வருட கோரிக்கையை சின்ன அய்யா நிறைவேற்றிவிட்டார். மறக்காமல் மாம்பழத்துக்கு ஓட்டுப்போட்டுங்க !" என்று விளக்கம் கொடுத்துக்கொண்டே வந்தார்கள் அன்புமணியின் அசிஸ்டெண்ட்கள்.

தருமபுரி பேருந்து நிலையத்தில் பேசிய அன்புமணி, "உங்களுக்கு போக்குவரத்து இடையூறாக நிற்பதற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மிகவும் சந்தோஷமாக இங்கு வந்திருக்கிறேன். நீண்ட வருட கோரிக்கையை நான் நிறைவேற்றியிருக்கிறேன். தி.மு.க, அ.தி.மு.க.வினர் நாங்கள்தான் நிறைவேற்றினோம் என்று சொல்லி வருகிறார்கள். ஆனால் மொரப்பூர்-தருமபுரி இணைப்பு ரயில் பாதை திட்டத்திற்காக இதுவரை அமைச்சர்களையும் அதிகாரிகளையும் 11 முறை சந்தித்து தொந்தரவு செய்து கொண்டே இருந்தேன். நீங்கள் இந்த திட்டத்தை அறிவிக்கும் வரை உங்களிடம் வந்து கொண்டே இருப்பேன் என்று சொன்னேன். 'இவன் பிடிவாதக்காரன், விடமாட்டான்' என்று சொல்லி நிறைவேற்றிவிட்டார்கள். ஆம்... நான் பிடிவாதக்காரன்தான், மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற பிடிவாதம் பிடித்துக்கொண்டே இருப்பேன்.
 

மது மக்களை ஆட்டிப்படைக்கிறது. பச்சக்குழந்தைகளெல்லாம் சாராயத்திற்கு அடிமையாகிறார்கள். இதை தடுத்தே ஆக வேண்டும். அது என்னால் மட்டும்தான் முடியும். இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை. நம்பிக்கையில் சொல்கிறேன். எத்தனை போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியிருக்கிறோம், ஜெயலலிதா கண்டுகொண்டாரா...? இல்லை. இன்னும் இரண்டு மாசம் பொறுத்துக் கொள்ளுங்கள். அதற்குப்பிறகு யார் முதலமைச்சர்..? என்று கேட்டு நிறுத்த... கூட்டம்,  'எங்க சின்ன ஐய...'என்று குரல் எழுப்பியது. முதல் கையெழுத்து எது...? மதுவிலக்கு. சாராயக்கடைகளை மூடணும். நாம் செய்வது விஞ்ஞான அரசியல்.  மாநாட்டில் பார்த்திருப்பீர்கள் அதுதான் மாற்றம்.  நான் உங்கள் கையில் எந்த இலவசத்தையும் கொடுக்கமாட்டேன். இலவச கல்வியை கொடுப்பேன், வேலைவாய்ப்பை கொடுப்பேன், சுகாதாரத்தை கொடுப்பேன். உங்கள் ஒவ்வொருவரையும் தன்மானத்தோடு வாழவைப்பேன். இரண்டு மாதம் பொறுத்திருங்கள்" என்று முடித்தார்.

-எம்.புண்ணியமூர்த்தி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ