Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திமுகவுக்கு விஜயகாந்த் தண்ணி காட்ட இதுதான் காரணம்- மநகூ தலைவர்களின் அட்ரா சக்க பேச்சு!

மக்கள் நலக்கூட்டணி உருவானதாலேயே மற்ற கட்சிகளால் கூட்டணி அமைக்க முடியவில்லை. மக்கள் நலக்கூட்டணி, பாஜக என்று திமுகவுக்கு விஜயகாந்த் தண்ணி காட்டி வருகிறார் என்று மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் பிரச்சார கூட்டத்தில் பேசி கலகலப்பை ஏற்படுத்தினர்.
 

மக்கள் நலக் கூட்டணி தலைவர்களின் 3வது கட்ட பிரச்சாரம் சென்னை ஆவடியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மதிமுக மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், தொல்.திருமாவளவன் மற்றும் மதிமுக நிர்வாகிகள் மல்லை சத்யா, அந்திரிதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர்  சுந்தர்ராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கண்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் குமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் முதலில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், " இந்த அணி வெளிப்படையானது. இந்த அணியில் யாரையெல்லாம் சேர்ப்போம், யாரையெல்லாம் சேர்க்க மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்து உள்ளோம். கூட்டணிக்காக மற்ற கட்சிகளை போல கதவை திறந்து வைக்கவில்லை. குறிப்பாக பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, பாமக ஆகியவற்றை எங்கள் அணியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம். மற்ற கட்சிகள் மாட்டுச் சந்தை போல துண்டு போட்டு ரகசியமாக கூட்டணி பேசுகிறார்கள். ராஜாவீட்டு கன்னுக்குட்டியாக ஸ்டாலின் செயல்படுகிறார். இதுவரை ஆட்சியில் இல்லாததுபோல இப்போது பரப்புரை செய்கிறார். அவரது குடும்பமே ஊழலில் சிக்கி தவிக்கிறது. அதேபோல் அதிமுகவின் அன்பு சகோதரி ஜெயலலிதாவுக்கும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு நடந்து வருகிறது. ஊழல் பணத்தில் திமுக கோடிக்கணக்கில் விளம்பரம் செய்து வருகிறது. 

நான்தான் முதலமைச்சர் என்று இதற்கு ஈடு கொடுக்கும் வகையில்,  இன்னொரு கட்சித் தலைவரும் (அன்புமணி) விளம்பரம் செய்கிறார். அவரும் ராஜாவீட்டு கன்னுக்குட்டிதான். பூரண மதுவிலக்கு அமல்படுத்த முதல் கையெழுத்து போடுவேன் என்கிறார். ஆனால் அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது போட்ட கையெழுத்துக்காகவே வழக்கு நடக்கிறது. ஊழல் பற்றி பேச எங்கள் அணிக்குதான் தகுதி இருக்கிறது. மற்றவர்களுக்கு இல்லை. எங்கள் அணியில் உள்ளவர்களை விரல் நீட்டி யாரும் குற்றம் சொல்ல முடியாது.

வெளிப்படையான, நேர்மையான ஊழல் இல்லாத, மது இல்லாத தமிழகம் உருவாக வேண்டும். திமுக, அதிமுக இல்லாத ஆட்சி தமிழகத்தில் ஏற்பட வேண்டும். கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ் ஆகியோர் மீது எனக்கு தனிப்பட்ட வெறுப்போ, கோபமோ கிடையாது. நாங்கள் 234 தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்படுகிறது மக்கள் நலக் கூட்டணி" என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், "தமிழகத்தில் இன்னும் எங்கள் மக்கள் நலக் கூட்டணியை தவிர மற்ற கட்சிகள் கூட்டணி அமைக்க முடியாமல் திணறி வருகிறது. இதற்கு காரணம் விஜயகாந்த் முடிவு செய்யவில்லை என்று கூறுகிறார்கள். அது உண்மையான காரணம் அல்ல. மக்கள் நலக்கூட்டணி உருவானதாலேயே மற்ற கட்சிகளால் கூட்டணி அமைக்க முடியவில்லை. மக்கள் நலக்கூட்டணி, பாஜக என்று திமுகவுக்கு விஜயகாந்த் தண்ணி காட்டி வருகிறார். இவர்களுக்குகெல்லாம் அச்சுறுத்தும் கட்சியாக மாறி இருக்கிறது மக்கள் நலக் கூட்டணி. கட்சி சாராத மக்கள் எங்கள் கூட்டணியை ஆதரிக்க தொடங்கி இருக்கிறார்கள். இந்த தேர்தலில் மதுவும், ஊழல்தான் முக்கிய பிரச்னையாக இருக்கிறது. அதனால்நான் மக்கள் நலக் கூட்டணி உருவானது. கூட்டணி குறித்து தேர்தல் நெருங்க நெருக்க கட்டுக்கதைகள் சொல்லப்படும். அந்த வதந்திகளை நம்ப வேண்டாம்.
 

ஒபாமாவை காப்பி அடிக்கிறார்கள். எம்பிபிஎஸ் படிக்கும்போது காப்பி அடிக்கலாம். இப்போது தேர்தல் நேரத்தில் ஒபாமாவை பார்த்து காப்பி அடிக்க வேண்டாம். 1992ல் நான் எழுதிய 'ஒருநாள் நிச்சயம் விடியும் அது உன்னால் மட்டும் முடியும்' என்பதை விளம்பரமாக காப்பி அடித்து இருக்கிறார்கள்" என்று முடித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், "மக்கள் நலக்கூட்டணி ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும். கருணாநிதி ஐந்து முறையும், ஜெயலலிதா மூன்று முறையும் ஆட்சி செய்ததை மக்கள் பார்த்திருக்கிறார்கள். இந்த முறை மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். கலைஞர் மலைப்பிடுங்கி மகாதேவன், ஜெயலலிதா மலைப்பிடுங்கி மகாதேவி. கடந்த தேர்தல்களில் நாங்கள் திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்ததை மறுக்கவில்லை. அவர்களை திருத்த முடிவு செய்தோம். அவர்கள் திருந்தவில்லை. அதனால் தோற்கடிக்க முடிவு செய்துவிட்டோம். இந்த கூட்டணி தேர்தலுக்காக அல்ல. மக்களுக்காகதான் கூட்டணி சேர்ந்தோம்" என்றார்.

கடைசியாக பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, "தமிழகத்தில்தான் அபூர்வமான காட்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. கருணாநிதியும், காங்கிரசும் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். நாட்டு மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள். ஒரு குற்றவாளி கூண்டில் ஜெயலலிதா நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் கருணாநிதி எந்த கூண்டிலும் நிற்க மாட்டார். அதே சமயம் கனிமொழி, தயாளு அம்மாள் குற்றவாளி கூண்டில் நிற்கிறார்கள். அண்ணா மறைவுக்கு பிறகு தமிழகம் நாசமாவதற்கு திமுக, அதிமுகவே காரணம்.

கருணாநிதிக்கு எதற்கு முதலமைச்சர் ஆசை? 1970ல் திருச்சியில் நடந்து பொதுக்கூட்டத்தில் 67 வயதான காமராஜர் ஆட்சிக்கு வர வேண்டும் என துடிக்கிறார் என்றார் கருணாநிதி. இது எல்லாம் எனக்கு தெரியும். அவரிடம் நான் குமாஸ்தா வேலை பார்த்தேன். இதுபோன்று பல தகவல்களை தேர்தல் நேரத்தில் வெளியிடுவேன். ஒபாமா போலவே ஒருவர் மாறி விட்டார். 67க்கு பிறகு 2016ல் அதிசயம் நடக்கப்போகிறது. மலைபோல் இருக்கிற ராட்சத கட்சிகளை வீழ்த்தி மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைக்கும். நாங்கள் இளைய தலைமுறையை நம்பித்தான் இருக்கிறோம்" என்று முடித்தார்.

செய்தி, படங்கள்:
எஸ்.மகேஷ்



 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close