Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாஜகவோடு அணி சேர வேண்டும் என்ற அவசியம் கிடையாது:அன்புமணி தடாலடி!

தேர்தல் தேதி அறிவிப்புக்கு தேர்தல் ஆணையம் தயாராக இருக்கும் நேரத்தில், கோவையில் அகில இந்திய பேட்மிட்டன் போட்டி பரிசளிப்பு விழாவில் பங்கேற்றிருந்தார் பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்.

தேர்தல் பரபரப்புல இந்த நிகழ்ச்சியிலா என கேட்டால், தமிழக பேட்மிட்டன் தலைவர்ங்கற முறையில இந்த நிகழ்ச்சியில கலந்துகிட்டு இருக்கேன். மத்தபடி தேர்தல் வேலைகளும் நடந்துட்டு தான் இருக்கு என்றவர்,  சில கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்க தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறதே?


இது தமிழக அரசின் நாடகம். தேர்தலின் போதெல்லாம் இப்படி நாடகமாடுவதை ஜெயலலிதா வாடிக்கையாக வைத்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, 2014 பிப்ரவரி மாதம் இதேபோன்று நாடகமாடினார். சட்டமன்ற தேர்தலுக்காக இப்போதும் நாடகமாடுகிறார். சட்டப்பிரிவு 161ன் கீழ் 7 பேரை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரமிருக்கிறது. அதை செய்யாமல் நாடகமாடுகிறார் ஜெயலலிதா. இந்த நாடகத்தால் எந்த பலனும் இல்லை. மூன்று பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்ததற்கே எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசிடம் 7 பேரை விடுவிக்க கோருவதை நாடகம் என சொல்லாமல் என்னவென்று சொல்வது.

ஏழு பேரை விடுவிப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அது நியாயமான கோரிக்கை. இதற்காக தானே நாங்கள் போராடி இருக்கிறோம். எங்கள் கோரிக்கை மட்டுமல்ல. தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கை இது தான்.

ஏழு பேரை பி.ஜே.பி. அரசு விடுவிக்கும் என கருதுகிறீர்களா?

உச்சநீதிமன்றம் மரண தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட போதே காங்கிரஸ் தலைமையிலான அரசும் எதிர்த்தது. பி.ஜே.பி. தலைமையிலான அரசும் எதிர்த்தது. எனவே அந்த நம்பிக்கை இல்லை.

பா.ம.க. தலைமையில் தனி அணி என அறிவித்து விட்டீர்கள். உங்கள் தலைமையில் யாரெல்லாம் இருப்பார்கள்?

அதை இப்போது சொல்ல முடியாது. காலம் இருக்கிறது. உரிய நேரத்தில் அறிவிப்போம்'
பி.ஜே.பி.யுடன் கூட்டணி என தகவல்கள் வெளியாகிறதே?
அது தொடர்பாக பி.ஜே.பி.யில் இருந்து எங்களிடம் யாரும் இன்னும் பேசவில்லை.

இரு முறை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்த ஜவடேகர் உங்களை சந்தித்து பேசவில்லை என்பதை சொல்கிறீர்களா?

நிச்சயம் இல்லை. பி.ஜே.பி.யோடு அணி சேர்ந்து போட்டியிட வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு கிடையாது. நாங்கள் மிகுந்த பலத்தோடு இருக்கிறோம். எனவே எங்களுக்கு யாருடைய ஆதரவும் தேவை இல்லை. தனித்து தேர்தலை சந்திக்கும் நம்பிக்கையும், பலமும் எங்களுக்கு நிறையவே இருக்கிறது.

திமுக, தேமுதிக அணி உறுதியாகி விட்டது என்கிறார்கள் அது... (கேள்வியை முடிக்கும் முன்னர் குறுக்கிட்டு)

திமுக ஒரு முழுகுகின்ற கப்பல். அதில் யார் ஏறினாலும் முழுகப்போகிறார்கள். அதேபோல் தேமுதிக ஒரு கரைந்து விட்ட கட்சி. அவரது கட்சி மாநாட்டில் அவர் என்ன பேசினார் என்பது யாருக்கும் புரியவில்லை. தேர்தலிலும் அப்படித்தான் இருக்கப்போகிறது. மக்கள் அவரது நடைமுறையை பார்த்து வருத்தத்தில் இருக்கிறார்கள். ஒரு கட்சிக்கு கொள்கை, கோட்பாடு, தெளிவான சிந்தனை இருக்க வேண்டும். இதில் எதுவுமே இல்லாதவர் விஜயகாந்த். திமுக, அதிமுகவுடன் சேரமாட்டோம் என்ற கொள்கை எங்களுக்கு இருக்கிறது. ஆனால் எந்த கொள்கையும் இல்லாமல். காங்கிரசுடன் பேரம் பேசினார். பிஜேபியுடன், திமுகவுடன், வைகோவுடன் என எல்லோரிடமும் பேரம் பேசிக்கொண்டே இருக்கிறார். இவர்கள் இருவரும் இணைவதால் எதுவும் நடக்கப்போவதில்லை.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் பெரிய அணி சேர்ந்து போட்டியிட்டீர்கள். ஆனால் உங்கள் கட்சியில் உங்களால் மட்டுமே வெல்ல முடிந்தது. இப்போது தனித்து போட்டி என்கிறீர்கள். கடந்த இரு ஆண்டுகளில் அப்படி என்ன மாற்றத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்?

நாடாளுமன்ற தேர்தல் வேறு. சட்டமன்ற தேர்தல் வேறு. அது தேசிய தேர்தல். நாங்கள் பி.ஜே.பி.யை விட பெரிய கட்சி. இருந்தாலும் நல்ல மாற்றம் வர வேண்டும் என்பதற்காக அவர்களோடு சென்றோம். அந்த தேர்தலில் 66 வயதுடைய திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. 7 இடங்களில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இப்போது நிலைமை வேறு. தமிழகத்துக்கு இளைய முதல்வர் வேண்டும், படித்த முதல்வர் வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அதிகளவில் இளைஞர்கள் வாக்களிக்கிறார்கள். மூன்றில் ஒரு பங்கு இளைஞர்கள். இவர்கள் திமுக, அதிமுகவை வேண்டாம் என நினைப்பவர்கள். நாங்கள் வித்தியாசமான அணுகுமுறையை பின்பற்றுகிறோம். விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்து கொண்டிருக்க, நாங்கள் விஞ்ஞான ரீதியில் அரசியல் செய்கிறோம். எங்களை மக்கள் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் திமுக, அதிமுகவுக்கு மாற்று என நீங்கள் மட்டுமில்லையே? மக்கள் நலக்கூட்டணி, பி.ஜே.பி. எல்லாம் இருக்கிறதே?

நாங்கள் தான் மாற்று. அதையெல்லாம் நீங்கள் பார்க்கத்தான் போகிறிர்கள்.

அதிமுக ஆட்சி பற்றி?

மிக மோசமான ஊழல் ஆட்சி. ஜெயலலிதா வீட்டை விட்டு வெளியில் வர முடியவில்லை. ஓய்வு பெற்ற அதிகாரிகளை வைத்து ஆட்சியை நடத்துகிறார். அமைச்சர்கள் எதற்கு மாற்றப்படுகிறார்கள் என்பதே யாருக்கும் தெரியவில்லை. இதுவரை 60 அமைச்சர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். 110 விதியின் கீழ் 185 அறிவிப்புகள், 700 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு தேவையான நிதி 1.49 லட்சம் கோடி. ஆனால் ஒதுக்கப்பட்டது வெறும் 7,500 கோடி தான். எல்லாமே வெற்று அறிவிப்புகள். அதிமுக மீது மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். அதேநேரத்தில் திமுக மீதான நம்பிக்கையையும் அரசு இழந்திருக்கிறார்கள். கலைஞர் கெஞ்சுவதிலேயே அது தெரிகிறது.

நீங்களும் திமுகவும் கோடிகளை செலவழித்து பக்கம் பக்கமாய் விளம்பரம் கொடுக்கிறீர்களே? இது சரியான வழிமுறை தானா?

நாங்கள் நாகரீகமாக செய்கிறோம். திமுக என்ன செய்வது என தெரியாமல் தரம் இல்லாத விளம்பரத்தை செய்து வருகிறது. என்னமா இப்படி பண்றீங்களேம்மா என சோப்பு விளம்பரத்தை போல செய்து விளம்பரம் செய்கிறது திமுக. நாங்கள் பாசிட்டிவ் பிரசாரத்தை செய்கிறோம். மக்களிடம் கொண்டு சேர்க்கத்தான் இந்த விளம்பரங்கள். எங்கள் விளம்பரங்களை மக்கள் ஏற்கிறார்கள்.

தமிழகத்தில் தேர்தல் ஒரே கட்டமாக நடக்க வேண்டுமா? பல கட்டமாகவா?

எனக்கு அறிவிக்க கூடிய அதிகாரம் இல்லை. எனக்கு அந்த அதிகாரம் இருந்தால் ஒரே கட்டமாக நடத்தப்படும் என்று தான் அறிவிப்பேன்.

இன்னும் சாதி முத்திரை உங்களை விட்டு விலகாமல் இருக்கிறதே?

அந்த முத்திரையை எங்கள் மீது போடுவதே ஊடகங்கள் தான். அதில் இருந்து நாங்கள் என்றோ விடுபட்டு விட்டோம். நாங்கள் இப்போது வளர்ச்சி அரசியல் செய்து வருகிறோம்," என்றார் அன்புமணி ராமதாஸ்.

- ச.ஜெ.ரவி.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close