Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணலை தொடங்கினார் ஜெயலலிதா!

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் நேற்று அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத்திற்கு வருகின்ற மே மாதம் 16-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, நேர்க்காணல், தேர்தல் வாக்குறுதிகள் தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி முதல் பிப்ரவரி 6-ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் போட்டியிட மொத்தம் 26 ஆயிரத்து 174 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, தனது போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று திடீரென அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணலை நடத்தி உள்ளார்.

நூர்ஜகான்-தலைமை கழக பேச்சாளர், பெஞ்சமின்-துணை மேயர், மனோரஞ்சிதம்-ஊத்தங்கரை எம்எல்ஏ., சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன் (காஞ்சி கிழக்கு மத்திய மாவட்ட செயலாளர்), வெற்றிவேல்-முன்னாள் எம்எல்ஏ. ஆகியோரிடம் ஜெயலலிதா நேர்காணல் நடத்தி உள்ளார்.

இந்த நேர்காணலின்போது, அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் உடன் இருந்துள்ளார். மேலும், வருகின்ற 10-ம் தேதி அல்லது 11-ம் தேதியில் வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

இது குறித்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ''அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா முன்னிலையில் 6-3-2016 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்கள் 16-5-2016 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு வேண்டி விருப்ப மனு செய்திருந்த கட்சி தொண்டர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது" என்று கூறப்பட்டு உள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ