Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமைச்சர்களுக்கு கொடுத்த பயிற்சி 'வேஸ்ட்': மனம் திறந்த பொன்ராஜ்!

கோவை: அப்துல்காலாமோடு பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில், அ.தி.மு.க. அரசு அமைந்தவுடன் முதலமைச்சர், அமைச்சர்கள் அரசு செயலர்களுக்கு, வளமான தமிழகம் உருவாக்க 54 தலைப்புகளில் 5 நாட்கள் பயிற்சி கொடுத்தோம். அந்த பயிற்சியோடு சரி. எதுவுமே நிறைவேறவில்லை, என அப்துல்கலாம் விஷன் இந்தியா கட்சியின் தலைவர் பொன்ராஜ் பரபரப்பு புகாரினை தெரிவித்துள்ளார்.

அப்துல்கலாம் விஷன் இந்தியா பார்ட்டி எனும் பெயரில் கடந்த மாதம் புதிய கட்சியை துவங்கினார் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ். கட்சி துவங்கியபோது மற்ற கட்சிகளை குறை சொல்லி அரசியல் நடத்த விரும்பவில்லை என்றவர், தற்போது லேசாக அரசியல் கட்சிகளை விமர்சிக்க துவங்கியுள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன்னர் அ.தி.மு.க. அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தவர் பொன்ராஜ். அந்த பயிற்சி எந்த பலனும் அளிக்காமல் வீணானதாக அவர் தற்போது தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பொன்ராஜ், ''அ.தி.மு.க. ஆட்சியை மிக நம்பிக்கையோடு எதிர்பார்த்தேன். ஆனால் முடிவில் மக்களின் எந்த நம்பிக்கைகளையும் இந்த ஆட்சி பூர்த்தி செய்யவில்லை. தரமான சேவையைக் கொடுத்தால் நல்ல ஆட்சி. கட்டடங்களை கட்டுவதற்கு ஒரு ஆட்சி தேவையா? அப்துல்காலாமோடு பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் அ.தி.மு.க. அரசு அமைந்தவுடன் முதலமைச்சர், அமைச்சர்கள் அரசு செயலர்களுக்கு, வளமான தமிழகம் உருவாக்க 54 தலைப்புகளில் 5 நாட்கள் பயிற்சி கொடுத்தோம். அந்த பயிற்சியோடு சரி. எதுவுமே நிறைவேறவில்லை" என அ.தி.மு.க. அரசின் கடந்த 5 ஆண்டு ஆட்சியை விமர்சித்தார்.

மேலும் அவர் தொடர்ந்து, ''அப்துல்கலாமுக்கு குடும்பம் இல்லை; அவர் ஒரு பொதுமுகம். காந்தி, பெரியார், அம்பேத்கர், எம்.ஜி.ஆர். பெயரில் கட்சிகள் இருப்பதுபோல, காலாமின் கனவுகளை நிறைவேற்ற, அவர் பெயரில் கட்சி ஆரம்பித்தோம். கலாமின் சகோதரர் வேறொரு கட்சியில் இருப்பதால் எங்களை எதிர்கிறார்; அது அவரது பேரனுக்கான அரசியல். ஆனால் நாங்கள் ஆரம்பித்தது, கலாமின் ஆயிரக்கணக்கான பேரன்களுக்கான அரசியல். கலாம் ஒன்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஒவ்வொரு இளைஞரும் அரசியலுக்கு வரவேண்டுமென்று புத்தகமும் எழுதி, வளர்ச்சிக்கான அரசியல் தேவை என்றவர். சிரஞ்சீவி, விஜயகாந்த், சரத்குமாருக்கு அறிவுரை கூறி வழிகாட்டியவர். அவர் பெயரில் கட்சி ஆரம்பித்ததில் தவறே இல்லை, 100 சதவீதம் சரியானது தான்.

மார்ச் 15-ம் தேதியில் இருந்து 23-ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செல்கிறோம். இதேபோல உறுப்பினர் சேர்க்கையும் நடக்கிறது. ஏப்ரல் மாதம் 2-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 10-ம் தேதி வரை அரசியல் மாற்றத்துக்கான சாசனப் பயிற்சி நடத்துகிறோம். தொகுதிக்கு தலா 10 பேரை தேர்வு செய்து, பயிற்சிகள் கொடுத்து, தேர்தலில் நிறுத்த உள்ளோம். ஒரு எம்எல்ஏ எப்படி உருவாகிறார் என்பதை மக்கள் பார்க்க முடியும். தொகுதி  வாரியாக தனித் தனியாகவும், மாநிலத்துக்கு தனி தேர்தல் அறிக்கையும் தயார் செய்யப்படும். பின்னர் மாநாடு மூலம் வேட்பாளரையும், தேர்தல் அறிக்கையையும் வெளியிடுவோம்.

தமிழருவி மணியன் அப்பழுக்கற்ற நேர்மையானவர். அதனாலேயே அவர் தனித்து விடப்பட்டுள்ளார். அவரது ஆதரவை வரவேற்கிறோம். கெயில் திட்டம் வேண்டாம் என கூறவில்லை. அதை செயல்படுத்தும் விதத்தில் உள்ள ஆணவம் மக்களின் நலன் புதைக்கப்படுகிறது" என்றார்.

- ச.ஜெ.ரவி

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ