Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெல்லியில் தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை?: விளக்கும் ஜவடேகர்!

புதுடெல்லி: தேர்தல் கூட்டணியை இறுதி செய்வதற்காக பா.ஜ.க. மேலிட தலைவர்களை தே.மு.தி.க. குழுவினர் சந்தித்ததாக வெளியான தகவல் வெறும் வதந்தி என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக, கூட்டணி குறித்து விஜயகாந்திடம் பேச்சுவார்த்தை நடத்த தமிழக பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் இரண்டு முறை சென்னை வந்து சென்றார். ஆனாலும், தே.மு.தி.க. இதுவரை பிடி கொடுக்காமல் இருந்து வருகிறது.

மேலும், தே.மு.தி.க.வை தங்கள் கூட்டணியில் இழுக்க தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வலைவீசி வருகிறது. இந்நிலையில், பா.ஜ.க.வுடன் கூட்டணியை முடிவு செய்வதற்காக பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷ் அடங்கிய தே.மு.தி.க. நிர்வாகிகள், டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இவர்கள் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், பியூஸ் கோயல், பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்து கூட்டணியை முடிவு செய்ய பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் செய்திகள் கசிந்தன.

இந்நிலையில், இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர், ''தே.மு.தி.க.-பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சந்திப்பு என வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பான வீண் வதந்தி. மேலும், தே.மு.தி.க. தலைவர்களிடமிருந்து எந்த அழைப்புகளும் இதுவரை வரவில்லை. இதுபோன்ற வதந்திகளுக்கு பதிலளிக்க முடியாது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்கனவே இடம்பெற்ற கட்சிகள் பா.ஜ.க.வுடன் உள்ளன. மேலும் புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்ததும் தமிழகம் செல்வேன். அங்கு கூட்டணி பற்றி மேலும் விரிவான ஆலோசனைகள் நடத்தப்படும்" என்று கூறினார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ