Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆணாதிக்கக் கட்சிகளா?

மகளிர் தினத்தன்று ஒரு 'சிறப்பு வீடியோ'வைக் காண நேர்ந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசிய வீடியோதான் அது.

பொதுவாக திராவிடக் கட்சித் தலைவர்களைப்போல "எதிர்க்கட்சியினரைப் பார்த்து ஒன்று கேட்கிறேன்" என்று கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மேடைகளில் சவால் விட்டுப் பேசுவதில்லை. தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான் போல இரட்டை அர்த்த வார்த்தைகளையும் பேசுவதில்லை. ஆனால் இந்த வீடியோவிலோ முத்தரசன் ஆவேசமாகச் சவால் விட்டுப் பேசியிருந்தார். ஆனால் அது பிரச்னையில்லை. அவர் பேச்சில் தொனித்த ஆணாதிக்கப் போக்குதான் அதிர்ச்சியளித்தது.

முத்தரசன் பேசியது இதுதான்...

"கலைஞர் குடும்பம் குற்றவாளி என்கிறோம். ஜெயலலிதா குற்றவாளி என்கிறோம். பா.ம.க. குற்றவாளி என்கிறோம்.விரலை நீட்டிச் சொல்கிறோம். பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன்.  இதை நூறு கூட்டத்தில் பேசிவிட்டேன். நூற்றி ஒன்றாவது கூட்டத்திலும் பேசுகிறேன். நீ ஆம்பளையா இருந்தா, வேட்டி கட்டின ஆம்பளையா இருந்தா விரலை நீட்டி எங்களைக் குற்றவாளினு சொல்லுங்கடா பார்ப்போம்".


ஆதிப்பொதுவுடைமைச் சமுதாயம், ஆணாதிக்கத்துக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான தொடர்பு ஆகியவை குறித்தெல்லாம் விரிவாகப் பேசிய மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சியைச் சேர்ந்த ஒருவர், அதுவும் மாநிலப் பொறுப்பாளர் இப்படி ஆணாதிக்கத்தோடு பேசினால் அதிர்ச்சியாக இருக்காதா என்ன?

தஞ்சை மாவட்டத்தில் பண்ணையார்களால் பெண் விவசாயத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எதிர்த்து வீரச்சமர் புரிந்த வரலாறு, சிதம்பரம் பத்மினி, வாச்சாத்தி தொடங்கி சமீபத்தில் சிம்புவின் பீப் சாங் வரை எதிர்த்துப் போராடிய பாரம்பர்யம் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர், 'ஆம்பளையா இருந்தா....', அதுவும் 'வேட்டி கட்டுன ஆம்பளையா இருந்தா...' என்று பேசுவதன் அர்த்தம்தான் என்ன?

யோசித்துப் பார்த்தால் இது முத்தரசனின் பிரச்னை மட்டுமல்ல. நமது ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தின் பிரச்னை என்றே தோன்றுகிறது.

"காசு கொடுத்துப் படம் பார்க்க வர்றவன் மூணுமணி நேரம் சந்தோஷமா இருக்கணும். அதுக்காகத்தான் சார் படம் எடுக்கிறோம்" என்கிற இயக்குனர்களின் பேட்டிகளை நாம் வழக்கமாகப் படிக்கிறோம். "இந்தியக் குடிமகன் என்ன நினைக்கிறான்னா...", "இந்திய வாக்காளனோட கனவுகள்", "தமிழன் ஏன் அடிமைப்பட்டுக் கிடக்கிறான்" என்று மீண்டும் மீண்டும் நாம் ஆண்களை முன்னிறுத்தியே பேசத் தொடங்குகிறோம். நமது மொழியே, நமது வார்த்தைகளே ஆண் மைய மொழியாகவும் ஆண் மைய வார்த்தைகளாகவுமே இருக்கிறது.

மொழியில் ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் நீண்ட நெடியது. 'கற்பழிப்பு' என்ற வார்த்தை பெண்களை இழிவுபடுத்துகிறது என்று 'பாலியல் பலாத்காரம்', 'பாலியல் வன்முறை', 'பாலியல் வல்லுறவு' என்றெல்லாம் குறிக்கத் தொடங்கினோம். ஆனால் இன்னமும் பெரும்பாலான  நாளிதழ்களில் 'கற்பழிப்பு' என்ற வார்த்தைதான் இடம் பெறுகிறது. 'விபச்சாரி' என்ற வார்த்தை பெண்களை மட்டும்தான் குறிக்கிறது, இழிவுபடுத்துகிறது என்பதற்காக 'பாலியல் தொழிலாளர்' என்ற வார்த்தையை உருவாக்கிப் புழக்கத்துக்குக் கொண்டுவந்தோம். ஆனால், யோசித்துப் பாருங்கள், அதுவும் பாலியல் தொழிலில் ஈடுபடும் அந்தப் பெண்ணைக் குறிக்கத்தான் பயன்படுகிறதே தவிர, பாலியல் நாட்டத்தோடு அந்தப் பெண்ணிடம் வரும், பாலுறவு கொள்ளும் ஆணைக் குறிப்பதற்கு என்ன வார்த்தை இருக்கிறது நம்மிடம்?

 

சரியான ஆம்பிளையா இருந்தா, வேட்டி கட்டுன ஆம்பிளையா இருந்தா, கை நீட்டி பேசுங்க பார்க்கலாம் - முத்தரசன் இது என்னங்க பஞ்ச் டயலாக்...?

Posted by மகிழ்நன் பா.ம on Tuesday, March 8, 2016


தமிழகத்தில் அடிக்கடி நினைவுகூரப்படும் சுவையான சம்பவம் ஒன்று உண்டு. ஒரு கவியரங்கத்தில் "விதவை என்ற வார்த்தைக்குக்கூட பொட்டு இல்லையே" என்று கவிதை வாசித்தாராம் கவிஞர் ஒருவர். கவியரங்கத் தலைமை தாங்கிய கருணாநிதி "விதவை என்பது வடமொழி வார்த்தை. 'கைம்பெண்' என்று தமிழில் அழைத்துப் பாருங்கள். ஒன்றுக்குப் பதிலாக இரண்டு பொட்டுகள் கிடைக்கும்" என்றாராம். கருணாநியின் மொழி லாவகத்தைக் குறிப்பதற்காக அடிக்கடி சிலாகிக்கப்படும் சம்பவம் இது. சரி, இந்த மொழி விளையாட்டால்  என்ன நடந்தது? கணவனை இழந்த பெண்ணுக்கு விதவை, கைம்பெண் என்ற இரண்டு வார்த்தைகள் கிடைத்தன. மனைவியை இழந்த கணவனைக் குறிப்பிடுவதற்கு என்ன வார்த்தை இருக்கிறது தமிழில்?

விதவை, விபச்சாரி, அபலை, வாழாவெட்டி ஆகிய வார்த்தைகளுக்கு ஆண்பால் வார்த்தைகள் இல்லை. கலைஞன், ஓவியன், எழுத்தாளன், வாக்காளன் ஆகியவற்றுக்குப் பெண்பால் வார்த்தைகள் இல்லை. நமது மொழியே ஆண்களுக்கான மொழிதானா?

நமது கடவுள் நம்பிக்கையையே எடுத்துக்கொள்வோம். ஆதியில் இருந்தே தாய்த் தெய்வ வழிபாடு, அம்மன் வழிபாடு, சக்தி வழிபாடு எல்லாம் இருந்து வந்தாலும் பொதுவாகக் கடவுளைக் குறிப்பிட வேண்டுமானால் 'கடவுள் இருக்கான் குமாரு' என்கிறோம். 'எல்லாத்தையும் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்', 'அவன் மேலே பாரத்தைப் போட்டுட்டு வேலையைப் பார்ப்போம்', 'அவனன்றி ஓர் அணுவும் அசையாது' என்று எல்லாமே 'அவன்'தான். 'கடவுள்'கூட ஆணாகத்தான் இருப்பார் என்பதில்தான் நமக்கு எவ்வளவு அசைக்கமுடியாத நம்பிக்கை!

அதுசரி, 'அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும்' என்பதற்கே நாம் நாற்பது ஆண்டுகளாகப் போராடிவருகிறோம். 'பெண்களும் அர்ச்சகர் ஆகவேண்டும்' என்று குரல் எழுப்ப முடியுமா என்ன? கோயில்களில் பெண்களை அர்ச்சகர் ஆக்கவோ, பள்ளிவாசலில் பெண்களை இமாம் ஆக்கவோ, தேவாலயங்களில் பெண்களை பாதிரியார் ஆக்கவோ தயாராக இல்லாத நாம் கடவுளையும் ஆணாகத்தானே யோசிப்போம்!

நமது மொழியில் நீக்கமற நிறைந்திருக்கும் ஆணாதிக்கம் குறித்ததுதான் இந்தக் கட்டுரை என்றாலும்,  அரசியல் அதிகாரம் குறித்தும் சில வார்த்தைகள். உள்ளாட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 33 சதவிகிதத்தை அறிவித்தார் கருணாநிதி. ஆட்சி முடியும் தருவாயில் இப்போது உள்ளாட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 50 சதவிகிதத்தை அறிவித்திருக்கிறார் ஜெயலலிதா. வரவேற்கத்தக்கதுதான். ஆனால் இந்த இட ஒதுக்கீடு எல்லாம் வெறும் உள்ளாட்சிப் பதவிகளில் மட்டும்தானா? இந்த 33 சதவீதம், 50 சதவீத இட ஒதுக்கீடு எல்லாம் கட்சிப் பதவிகளில் கிடையாதா? தி.மு.க.விலும் அ.தி.மு.க.விலும் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் பொறுப்பில் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள்?

சரி, கம்யூனிஸ்ட்களின் வார்த்தைகளில் சொல்லப்போனால் தி.மு.க, அ.தி.மு.க. எல்லாம் 'முதலாளித்துவ, ஆணாதிக்கக் கட்சி'கள். கம்யூனிஸ்ட் கட்சிகளில்.....?

சுதந்திரத்துக்கு முன்பிருந்தே கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் இயங்குகிறது. 1964ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உடைந்து சி.பி.எம் எனப்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்படுகிறது. இதுவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலோ,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலோ ஒரு பெண் தமிழ் மாநிலச் செயலாளராக வந்ததில்லை. ஏன்? தலைமைக்குத் தகுதியான பெண்களே கம்யூனிஸ்ட் கட்சிகளில் இல்லையா?

முத்தரசனின் இடத்தில் ஒரு பெண் இருந்திருந்தால் 'வேட்டி கட்டுன ஆம்பளையா இருந்தா...?' என்ற வீர வசனம் வந்திருக்குமா? யோசியுங்கள் தோழர்களே...!

- ரீ.சிவக்குமார்
படம்: பா.காளிமுத்து

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close