Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜயகாந்த் அறிவிப்பால் இப்படியும் கவலை வந்துவிட்டது!

சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன், தேமுதிக கூட்டணி சேரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், விஜயகாந்த்தின் தனித்து போட்டி அறிவிப்பால் கடும் அதிருப்தியிலும், கவலையிலும் இருப்பதாக கூறப்படுகிறது.
 

விரைவில்  நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில்,  கூட்டணி தொடர்பாக ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு முடிவுகளை எடுத்து வருகிறது. வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் இணைந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி விட்டனர். கடந்த கால தேர்தல்களில் திமுக கூட்டணியில் இருந்த திருமாவளவன், தற்போது மக்கள் நலக்கூட்டணிக்கு சென்றது திமுக தலைமைக்கு ஏமாற்றமே.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த அதிமுக, தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதால் கூட்டணி கட்சிகளை உதறி தள்ளியது. இந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க எந்த கட்சியும் முன்வரவில்லை.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் முதலில் இடம் பிடித்து விட்டது. அடுத்து தேமுதிகவுக்கு வலைவீசியது திமுக. கருணாநிதியும், தேமுதிகவுக்கு பகிரங்கமாகவே அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பால் தேமுதிகவினர் மகிழ்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து தேமுதிகவில் விருப்ப மனு அளித்தவர்களிடம் விஜயகாந்த் நேர்காணல் நடத்தினார். அப்போது, திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். கட்சியில் உள்ள 59 மாவட்டச் செயலாளர்களின் விருப்பமும் அதுவாகவே இருந்துள்ளது.

கடந்த 11 ஆண்டுகளாக பொதுக் கூட்டங்கள், மாநாடுகள், நலத்திட்ட உதவி நிகழ்ச்சிகளுக்கு மாவட்டச் செயலாளர்கள் அதிக அளவில் செலவழித்துள்ளனர். தேமுதிக தனித்து போட்டியிட்டபோதும் தேர்தல் செலவுகளையும் இவர்களே கவனித்துள்ளனர். தற்போது, பல மாவட்டச் செயலாளர்கள் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து இப்பிரச்னையில் இருந்து மீளலாம் என்று அவர்கள் கணக்கு போட்டனர். தற்போது அவர்களின் கனவுகளை தவிடுபொடியாக்கிவிட்டார் விஜயகாந்த். தேமுதிக தனித்து போட்டியிடும் என்ற அறிவிப்பை வெளியிட்டு விட்டார். அதோடு, 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளார். இதனால் மீண்டும் செலவு ஏற்படும் என்ற கவலையில் மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர்.

காஞ்சிபுரத்தில் அண்மையில் நடந்த கட்சி மாநாட்டுக்கு முன்,  மாவட்டச் செயலர்களை அழைத்து கூட்டணி குறித்து விஜயகாந்த் கருத்து கேட்டார். அப்போது, திமுகவுடன் கூட்டணி அமைக்கவே விருப்பம் தெரிவித்தனர். ஆனால், விஜயகாந்த் அதை புறந்தள்ளிவிட்டார். இதனால் விஜயகாந்த், பிரேமலதா மீது மாவட்டச் செயலாளர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் வேறு முடிவு எடுப்பதற்கு முன் அழைத்து சரிகட்டும் முயற்சியில் தேமுதிக தலைமை ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

இதனிடையே, விஜயகாந்த்தின் தனித்து போட்டி அறிவிப்பால் தேர்தலில் போட்டியிட விரும்பிய கட்சி நிர்வாகிகளுக்கு தற்போது போட்டியிட விருப்பமில்லையாம். இதனால், தாங்கள் செலுத்திய முன்பணத்தை திரும்ப கேட்டு நேற்று காலை முதல் மாநில நிர்வாகிகள் நச்சரிக்க தொடங்கியுள்ளனர். பிரச்னை ஏற்படுவதற்கு முன்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தின் முன்பக்க நுழைவாயில் நேற்று மூடப்பட்டது. யாரும் கட்சி அலுவலக வளாகத்திற்குள் நுழைந்துவிடாதபடி நூறடி சாலையை ஓட்டி இரும்பு தடுப்புகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளதோடு, காவலர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். விஜயகாந்த் மற்றும் மாநில நிர்வாகிகள் கட்சியின் முன்பக்க நுழைவாயிலை பயன்படுத்தாமல் பின்பக்க நுழைவாயில் வழியாகவே கட்சி அலுவலகத்திற்குள் நேற்று சென்றனர்.

தேமுதிக தனித்து போட்டி என்ற அறிவிப்பால் மாவட்டச் செயலாளர்கள் முதல் நிர்வாகிகள் வரை ஏற்பட்டுள்ள சலசலப்பை விஜயகாந்த் எப்படி சமாளிக்க போகிறார் என்பது தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close