Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேர்தல் நேர மொய்விருந்து... 'அலர்ட்' ஆன அதிகாரிகள்!

“ இவ்வளவு பேர்தானா வந்தாங்க... ? என்னப்பா இது... 'என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா' போஸ்டரை மட்டுமே ஐநூறு மாடல்களில் அடித்து ஸ்டேட் முழுதும் விட்டிருக்காங்க... சரியா 'செக்' பண்ணுங்க. மொத்த பிரிண்டர்களும் இங்கே, இன்னைக்கு, இப்பவே எனக்கு வந்தாகணும்"- 'இப்ப ராமசாமி' ஸ்டைலில் இப்படி ஒரு உத்தரவு பறந்ததும், வேக வேகமாக ஒரு மீட்டிங் சென்னை மாநகராட்சியில் சத்தமில்லாமல் நடந்து முடிந்திருக்கிறது.

சென்னை மாநகராட்சி உயர் அதிகாரியின் அத்தனை அழுத்தத்திற்கு பிறகும்,  மாநகராட்சி ஊழியர்களால் சுமார் நூறு என்ற அளவிலேயே தனியார் பிரிண்டர்களை அழைத்து வந்து அந்த மீட்டிங்கில் அமர வைக்க முடிந்திருக்கிறது.

ஏன், எதற்கு, எப்படி...? என அந்த மீட்டிங்கிற்கு சென்று திரும்பிய பிரிண்டர்கள் சிலரிடம் பேசினோம்.

மாநகராட்சி அறிவுரை


"பெரிய பிரிண்டிங் பிரஸ் நிறுவனங்கள் சார்பாக யாரும் கலந்து கொள்ளவில்லை. திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, சிந்தாதரிப் பேட்டை ஏரியாக்களில் மட்டுமே முறைப்படி அரசு அங்கீகாரம் பெற்ற பிரிண்டர்கள் ஐயாயிரம் பேர் இருப்பார்கள். ஆனால் நூற்றுச் சொச்சம் பேர்தான் கூட்டத்திற்கு வந்தனர்" என்றார், ஒரு பிரிண்டர்.

உள்ளே நடந்தது பற்றி ஒரு பிரிண்டர் முழுமையாக நம்மிடம் பகிர்ந்து கொண்டார். " அம்மாவை அங்கே பார்த்திருப்பீங்க, இங்கே பார்த்திருப்பீங்க... ஆனா, இங்கே (?!) பாத்திருக்கீங்களான்னு டிசைன் , டிசைனா பிரிண்டர் பெயரையே போடாத போஸ்டர்களை உங்களில் யார் பிரிண்ட் பண்ணீங்கன்னு தெரியாது. அதுமாதிரி நிறைய பேப்பர்ல வந்திருக்கிறது. தனித்தனியா 'வால்-போஸ்ட்' போட்டும் வந்திருக்கிறது. முதலமைச்சர் மட்டுமல்ல,  கருணாநிதி, விஜயகாந்த், ராமதாஸ், வைகோ என்று அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் இப்படி வால் போஸ்ட் போட்டும்,  மீம்ஸ் ரெடி பண்ணியும், டிசைன்ஸ் வெளியே வருவதற்கு பிரிண்டர்களாகிய நீங்கள்தான் காரணம்" னு எகிறினார் அந்த உயர் அதிகாரி.

"இதுவரை நீங்கள் வெளியில் விட்ட போஸ்டர்கள் குறித்த  விஷயத்தை மன்னித்து விடுகிறோம். இனி அப்படி நடந்தால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, தனிமனித சுதந்திர உரிமைச் சட்டப்படி கடுமையான நடவடிக்கையை உங்கள் மீது எடுக்கத் தயங்க மாட்டோம்" னு அப்படி, இப்படி நிறையவே அந்த மீட்டிங்கில் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. நாங்க பாதி பேர் நல்லாவே தூங்கிட்டோம்.
 
மொட்டை போஸ்டர்கள்


பொதுவாக, இதுபோன்ற முகவரியில்லாத போஸ்டர்களை பிரிண்டர்கள் அடித்துக் கொடுப்பதில்லை என்பதுதான் உண்மை. அது கார்ப்பரேஷனுக்கும் தெரியும், போலீசுக்கும் தெரியும். அவர்களும்  பேருக்காக இப்படி ஒரு மீட்டிங்கை போட்டு,  எங்களை தேர்தல் நேரங்களில் மிரட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். நாங்களும் தவறாமல் அவர்கள் போடும் மீட்டிங்கில் போய்  கலந்து கொள்கிறோம்" என்று சொல்லி முடித்தார்.

'வேறு என்னென்ன சொன்னார்கள்?' என்று கேட்டோம்.

போஸ்டருக்கு கணக்கு?

"முகவரியைச் சொல்லி போஸ்டர் அடித்தாலும், யார், யார் எத்தனை போஸ்டர்களை அடிக்கிறார்கள் என்ற விபரத்தை எங்களுக்கு கொடுத்து விடவேண்டும். குறிப்பாக, 50 ஆயிரம் போஸ்டர்களுக்கு மேல் பிரிண்டிங் ஆர்டர் கொடுத்தால் உடனே அந்தத் தகவலை எங்களுக்கு கொடுத்தாக வேண்டும் என்றெல்லாம் மீட்டிங்கில் சொல்லியிருக்கிறார்கள்"  என்றார் இன்னொரு நண்பர்.

மொய்விருந்து

போஸ்டர்கள் தவிர, இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த விஷயமும் சென்னை மாநகராட்சியில் தனிக்கூட்டம் போட்டு அதிகாரிகள் மட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. அது தேர்தல் காலங்களில் அரசியல்கட்சிகள் நடத்தும் மொய்விருந்து பற்றியது. இந்த மொய் விருந்து மூலம் ஆட்கள் சேர்க்கும் யுக்தி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்துதான் சென்னையில் அறிமுகமாகி உள்ளது.

எனவே வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் இது அரங்கேறி விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த 'அலர்ட்' மீட்டிங்கிற்கு,  திருமண மண்டப உரிமையாளர்களை வரவழைத்து, 'செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்' என இரண்டு அறிவுரைகளை அதிகாரிகள் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

திருமண மண்டபம் குறித்து அதிகாரிகள் மத்தியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், "காது குத்து, மொய்விருந்து போன்ற விழாக்களை சென்னையில் அந்தளவுக்கு கொண்டாட மாட்டார்கள். வீடுகளிலேயே எளிமையாக முடித்துக் கொள்வார்கள். திருமணம், மஞ்சள் நீராட்டுவிழா போன்றவைகள்தான் திருமண மண்டபங்களில் வைத்து நடக்கும். மொய்விருந்து, காதுகுத்து போன்ற விழாக்கள் நடத்த சென்னையில் உள்ள உறவினர்கள், கட்சிக்காரர்கள் பெயரில் பல மாதங்களுக்கு முன்னரே அட்வான்ஸ் கொடுத்து மண்டபங்களை பிடித்து வைத்திருந்தால்,  அந்த விபரங்களை துல்லியமாக சேகரித்துக் கொள்ளவேண்டும்.

கள்ள ஓட்டும், பணப் பட்டுவாடாவும்...

ஒவ்வொரு தேர்தல் சமயத்தின் போதும், ' திருமண மண்டபங்களில் வெளியூர் ஆட்கள் தங்கியுள்ளனர், அவர்கள் மூலமாக பணப் பட்டுவாடா மற்றும் கள்ள ஓட்டு போடும் வேலைகள் நடக்கிறது' என்ற குற்றச் சாட்டுகள் வந்து விடுகிறது. இந்த முறை, அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

எல்லாம் சரி... கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது முறைகேடுகள் குறித்து புகார் செய்ய, அதிகாரிகளின் செல்போன் எண்கள் என்று சென்னை மாநகராட்சியில் பத்து எண்களைக் கொடுத்தார்கள்,  பறக்கும் படை எண்கள் என்று அதே பத்து எண்களைக் கொடுத்தார்கள்... அதில் பல எண்கள் "தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தன" என்பதை இன்னமும் மறக்க முடியவில்லை...

இப்போது கொடுத்திருக்கும் எண்கள் தொடர்பு எல்லைக்குள் இருந்தால் மிக நல்லது...

- ந.பா.சேதுராமன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ