Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிரிமினல்களுக்கு இந்த கட்சியில் 'சீட்' கிடையாதாம்!

கிரிமினல் வழக்கு இருந்தால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடையாது என்று பா.ஜ.க. நேர்காணலில் பங்கேற்றவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் மற்ற கட்சிகளைப்போன்று தேர்தலில் எவ்வளவு செலவு செய்வீர்கள் என்ற கேள்வி  யாரிடமும் கேட்கப்படவில்லை என்பது ஆச்சர்யமான விஷயம்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட சுமார் 3 ஆயிரம் பேர் மனு கொடுத்துள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் கட்சி ரீதியாக உள்ள 13 மண்டலங்களில் நேற்று தொடங்கியது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிக்கான நேர்காணல்,  கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்தது. இந்த நேர்காணலை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நடத்தினார். காலையில் மத்திய சென்னைக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளில் போட்டியிட மனு செய்திருந்த 108 பேரும், பிற்பகலில் தென்சென்னைக்கு உட்பட்ட தொகுதிக்கு மனு செய்திருந்த 73 பேரும் கலந்து கொண்டனர்.

அவர்களிடம் கட்சியில் அவர்களது பணி, தொகுதியில் கட்சியின் செல்வாக்கு, தனித்து போட்டி என்றாலும் போட்டியிடுவீர்களா? மக்களுக்காக தினமும் எவ்வளவு நேரம் செலவிட முடியும்? உள்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. மிக முக்கியமாக அனைவரிடமும் கிரிமினல் வழக்குகள் ஏதும் இருக்கிறதா? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அதாவது கட்சி ரீதியாக போடப்பட்ட வழக்குகள், குடும்ப பிரச்னை மற்றும் சொத்து சம்பந்தமான சிவில் வழக்குகள் தவிர கொலை-கொள்ளை போன்ற கிரிமினல் வழக்குகள் ஏதும் இருக்கிறதா என்று கேட்கப்படுகிறது.

ஏனென்றால், தேர்தலில் கிரிமினல் வழக்குகள் இருப்பவர்களுக்கு பா.ஜ.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கக்கூடாது என்ற உறுதியான நிலைப்பாடு எடுக்கப்பட்டு உள்ளது. அதனால் அனைவரிடமும் இந்த கேள்வி மட்டும் தவறாமல் கேட்கப்படுகிறது. அதேபோல் பிற கட்சிகளில் நடக்கும் நேர்காணலில் எவ்வளவு செலவு செய்வீர்கள் என்ற கேள்வி இருக்கும். ஆனால் பா.ஜ.க.வில் அப்படி எந்த கேள்வியும் யாரிடமும் கேட்கவில்லை என்று நேர்காணலில் பங்கேற்றவர்கள் கூறினர்.

இந்த நேர்காணலில் மயிலாப்பூர் தொகுதிக்கு நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை காயத்ரி ரகுராம், ஊடக பிரிவு மாநில தலைவர் பிரசாத்,  அண்ணா நகர் தொகுதிக்கு இளைஞர் அணியை சேர்ந்த ஜி.கே.சுரேஷ் கர்ணா, சேப்பாக்கம்-திருவல்லிகேணி தொகுதிக்கு மாநில வர்த்தக அணி செயலாளர் சேப்பாக்கம் ராஜேந்திரன் உள்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இன்று வடசென்னை மாவட்டத்திற்குட்பட்ட சட்டசபை தொகுதிகளுக்கான நேர்காணல் நடக்கிறது. அதில் பங்கேற்க 65 பேர் மனு கொடுத்துள்ளனர்.

 

- படங்கள்: பா.காளிமுத்து

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ