Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திமுக- தேமுதிக கூட்டணி அமையாததற்கு இந்த கட்சிதான் காரணமா?

"தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி ஏற்படாமல் போனதற்கு பா.ஜ.க. காரணம் என்று கூறுபவர்கள் காய்ச்சல் வந்தவர்களாகதான் இருப்பார்கள். ஏனென்றால் காய்ச்சல் வந்தவர்கள்தான் இப்படி உளறுவார்கள்" என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேசத்துடன் கூறினார்.
 

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல்,  சென்னை உள்பட 13 மண்டலங்களில் நேற்று நடைபெற்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிக்கான நேர்காணல் கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்தது. இந்த நேர்காணலை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நடத்தினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், "தமிழகத்தை கடந்த 50 ஆண்டு காலமாக அ.தி.மு.க. வும், தி.மு.க.வும் மாறி, மாறி ஆட்சி செய்து வருகின்றனர். எனவே இவர்களுக்கு மாற்று வேண்டும் என்று 70 சதவீத வாக்காளர்கள் விரும்புகின்றனர். இந்த வாக்குகளை சிந்தாமல் பெற வேண்டும் என்பதற்காக தான் பா.ஜ.க., கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க விரும்புகிறது.

அதேநேரத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தனித்து போட்டியிட தயார் என்றால் பா.ஜ.க.வும் தயார் தான்.  தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் இருப்பதால், கூட்டணி அமைப்பதில் அவசரம் காட்ட தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி 100 சதவீதம் முடிந்துள்ளது. விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்" என்று கூறினார்.

தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி ஏற்படாமல் போனதற்கு பா.ஜ.க. தான் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறதே? என்ற கேள்விக்கு பதில் அளித்த பொன்.ராதாகிருஷ்ணன், தே.மு.தி.கவுடன் கூட்டணி குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒரு கருத்தை சொன்னார். அந்த கருத்தின் அடிப்படையில் ஒவ்வொரு தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். ஆனால் இதனை மறுக்கும் வகையில் விஜயகாந்த், தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது என்று தனது நிலைப்பாட்டினை தெரிவித்தார். வேறு கட்சியின் வாய்ப்பை பா.ஜ.க. என்றைக்கும் தட்டி பறிக்காது. தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி ஏற்படாமல் போனதற்கு பா.ஜ.க. காரணம் என்று கூறுபவர்கள் காய்ச்சல் வந்தவர்களாக தான் இருப்பார்கள். ஏனென்றால் காய்ச்சல் வந்தவர்கள் தான் இப்படி உளறுவார்கள்" என்று பதில் அளித்தார்.

தொடர்ந்து தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்பு குறித்த கேள்விக்கு, ‘எங்களுடைய கூட்டணி தான் வெற்றி கூட்டணி’ என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ