Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பட்டி முதல் பட்டணம் வரை... ஆளத்துடிக்கும் அரசியல் வாரிசுகள்! ((மினி தொடர் - 1)

த்தியில் வாரிசு அரசியல் என்றால் பளிச் என நினைவுக்கு வருவது நேரு குடும்பம்தான். அதைத்தாண்டி ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா - ஃபரூக் அப்துல்லா, முஃப்தி முகமது சையத்-மெகபூபா, ஒடிசாவில் பிஜு பட்நாயக்-நவீன் பட்நாயக், பஞ்சாப்பில் பிரகாஷ்சிங் பாதல் - சுக்பிர்சிங் பாதல், மகாராஷ்ட்ராவில் பால்தாக்கரே-உத்தவ் தாக்கரே-ராஜ் தாக்கரே, கர்நாடகாவில் தேவகவுடா-குமாரசாமி, ஆந்திராவில் என்.டி.ஆர்-சந்திரபாபுநாயுடு... என ஓரிரு மாநிலங்களைத் தவிர இந்தியா முழுவதுமே வாரிசு அரசியல் பிரபலம்.  அதிலும் அல்டிமேட் தமிழ்நாடுதான். கருணாநிதி-ஸ்டாலின்-அழகிரி-கனிமொழி, எம்ஜிஆர்-ஜெயலலிதா, ராமதாஸ்-அன்புமணி, மூப்பனார்-ஜி.கே.வாசன், ப.சிதம்பரம்-கார்த்திக் சிதம்பரம், விஜயகாந்த்-பிரேமலதா-சுதீஷ்... என தொடர்கிறது வாரிசுகளின் பட்டியல்.

‘நாங்கள் தலைமுறை தலைமுறையாக மக்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறோம். அதனால்தான் வாரிசுகள் அரசியலுக்கு வருகிறோம்’ என்று சொன்னால் வரவேற்போம். ஆனால், இங்கு அரசியல் என்பதை குலத்தொழிலாக மாற்றிவிட்டனர் என்பதுதான் நம் சாபக்கேடு.

அப்படி தமிழகத்தில் நமக்காக சேவை (!) செய்ய காத்திருக்கும் வாரிசுகள் யார் யார் என்பதைப் பற்றி மாவட்ட வாரியாகப் பார்ப்போமா..?

ராமநாதபுரம்:

அ.தி.மு.க.வின் முன்னாள் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் நிறைகுளத்தான். இவர், கட்சியில் ஓரங்கட்டப்பட்டிருக்கும் நிலையிலும், தனது அரசியல் வாரிசாக மகன் சதன்குமாரை கட்சியில் பலப்படுத்தி வருகிறார். 'எம்.எல்.ஏ சீட் கிடைத்து விடும்' என்ற தைரியத்தில் மாவட்டம் முழுக்க ஓடோடி வேலை செய்து வருகிறார் சதன்குமார். வருகிற சட்டமன்ற தேர்தலில் மானாமதுரை அல்லது பரமக்குடி ஆகிய ஏதாவது ஒரு தொகுதியை கைப்பற்றுவதுதான் சதன்குமாரின் டார்கெட்.

ராமநாதபுரத்தில் தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர் மறைந்த முன்னாள் அமைச்சர் டி.ராமசாமி. இவரின் மகன் டி.ஆர்.சீனிவாசன், தற்போதைய ராமநாதபுரம் நகராட்சி உறுப்பினர். இந்தத் தேர்தலில் இவர் கட்சிப்பதவி, ராமநாதபுரம் தொகுதிக்கான சீட் இரண்டையும் பெற்றுவிட வேண்டும் என துடிக்கிறார்.

தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனின் குடும்பம்தான், ராமநாதபுரம் மாவட்டத்தில் 30 ஆண்டுகளாக கோலோச்சி வருகிறது. இவரை எதிர்த்து மாவட்டத்தில் அரசியல் செய்த பலர் ஓரங்கட்டப்பட்டனர். உடன்பிறப்புக்கள் ஒன்று திரண்டு வந்தாலும் சாய்க்க முடியாத சக்தியாக வலம் வந்தார். இந்த சமயத்தில் கட்சியில் சீனியர்கள் ஓரங்கட்டப்பட்டபோது, மகன் சுப.த.திவாகருக்கு மாவட்டச் செயலாளர் பதவியை பெற்றுக் கொடுத்தார். மூத்த மகன்  சுப.த.சம்பத், நீண்டகாலம் மாநில இளைஞரணி துணைச் செயலளாரக இருந்தவர். வருகிற சட்டமன்றத் தேர்தலில் மாவட்டத்திலுள்ள ஒரு ரிசர்வ்  தொகுதி போக, மீதியுள்ள மூன்று தொகுதிகளையும் சுப.தங்கவேலனின் குடும்பமே கைப்பற்றும் எண்ணத்தில் களமிறங்கி உள்ளது.

மதுரை:

அ.தி.மு.க.வில் அவைத்தலைவராக இருந்தவரும், முன்னாள்  சபாநாயகருமான காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை. மாணவர் அணியில் இருக்கிறார். எப்படியாவது அடுத்தடுத்த கட்டங்களை எட்டிப்பிடிக்க துடிக்கும் இவருக்கு, அனைத்து விதங்களிலும் முட்டுக்கட்டை போடுவது அமைச்சர் செல்லூர் ராஜு. செல்லூரின் ஒரே மகன் விபத்தில் மரணமடைந்து விட்டதால் தன் இளைய மகள் ரம்யாவை அரசியலில் இறக்கி விட்டுள்ளார். ரம்யாவை 'சின்னம்மா' என்ற அடைமொழியோடு அழைப்பவர்கள் அவருக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். ரம்யாவும் சுணக்கம் இல்லாமல் வலம் வருகிறார்.

தி.மு.க தரப்பில் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கத்தின் மகன் பொன்.சேது தீவிர கட்சிப்பணியாற்றி வருகிறார். இவருக்குப் போட்டியாக முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, தனது மகன் மணிமாறனை களமிறக்கிவிட்டுள்ளார்.

தேனி:

தேனி மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வத்தின் செல்வாக்கு பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. இவரது தம்பி  ஓ.ராஜா, மகன் ரவீந்திரநாத் இருவரும் நினைத்ததுதான் லோக்கல் அ.தி.மு.க.வில் அனைத்தும் நடக்கும். ஆனால், தற்போது கட்சியில் இருந்து ஓ.பி.எஸ். ஓரங்கட்டப்பட்டு உள்ளதால் அவரின் குடும்பத்துக்கும் சிக்கல். இளைஞர் பாசறையில் பொறுப்பில் இருக்கும் ரவீந்தரநாத்,  இம்முறை சீட் வாங்கி விடுவது என்ற கனவில் இருந்தார். ஆனால், தந்தையே தவிப்பதால் மகனால் என்னதான் செய்துவிட முடியும்?

திண்டுக்கல் :

தி.மு.க மாநில துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, தனது அரசியல் வாரிசாக தனது மகன் ஐ.பி.செந்தில்குமாரை களமிறக்கியுள்ளார். இளைஞர் அணியில் இருந்த செந்தில்குமார் தற்போது கிழக்கு மாவட்டச் செயலாளர். சட்டம் படித்து முடித்துவிட்டு அப்பா கலந்து கொள்ளும் கூட்டங்களில் தலைகாட்ட ஆரம்பித்தவர், அப்படியே இளைஞரணியில் சேர்ந்து,  மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர், மாவட்டச் செயலாளர் என குறுகிய காலத்திலேயே தனது செல்வாக்கை உயர்த்திக் கொண்டார். கடந்த சட்டமன்றத் தேர்தலில், பழனி தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த முறையும் பழனி தொகுதியைக் குறி வைத்திருக்கிறார். இதுவரை பழனியை கேட்டு வேறு யாரும் தி.மு.க.வில் விண்ணப்பிக்கவில்லை என்பதால் செந்திலுக்கு பழனி கன்ஃபார்ம் என்கிறார்கள்.

அ.தி.மு.க.வில் ஐவர் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு இருக்கும் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் மருமகன் கண்ணன்தான் மாவட்டத்தின் நிழல் அமைச்சர். கண்ணன், நத்தம் சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், 'திண்டுக்கல் தொகுதியில் எம்.பி சீட் வாங்கி விடலாம்' என்ற கனவில் ஒரு டீச்சரை அமர்த்தி இந்தி கற்று வந்தார். ஆனால், அவருக்கு அப்போது எம்.பி சீட் கிடைக்கவில்லை. தற்போது, திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி கேட்டு பணம் கட்டியுள்ளார், ஆனால், மின்துறை அமைச்சரான மாமாவின் ஃப்யூஸே பிடுங்கப்பட்டுள்ளதால் கலங்கிப் போய் இருக்கிறார் கண்ணன்.

திருச்சி:

தி.மு.க.வின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் 'திருச்சி' சிவாவின் மகன் சூர்யா. துடிப்பான இளைஞர். பிசினஸ் செய்து வருகிறார். மாவட்ட மாணவரணியில் பொறுப்பு வாங்கும் கனவில், முன்னாள் அமைச்சர் நேருவுடன் வலம் வந்தார். ஆனால், கிடைக்கவில்லை. அதனால், 'நேரு, தனது தந்தையை புறக்கணிக்கிறார்' என்று பிரச்னை கிளப்பி, நேருவின் வீட்டை முற்றுகையிட்டு பரபரப்பைக் கிளப்பினார். தற்போது மாணவரணி பொறுப்பை பெற்றுவிடும் கனவில் கனிமொழியின் பக்கம் சாய்ந்திருக்கிறார், சூர்யா.

கருணாநிதி - அன்பில் தர்மலிங்கம், அன்பில் பொய்யாமொழி - ஸ்டாலின், அன்பில் மகேஷ் - உதயநிதி... என தி.மு.க தலைவர் கருணாநிதி குடும்பத்துக்கும் அன்பில் தர்மலிங்கம் குடும்பத்துக்கும் மூன்று தலைமுறை நட்பு. ஸ்டாலின் மருமகன் சபரீசனும், மகேஷும்தான் ஸ்டாலினின் பிரசார யுக்திகளுக்கு செயல்வடிவம் கொடுக்கிறார்கள். தி.மு.க சீனியர் தலைகளே மிரளும் அளவுக்கு மகேஷுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு இருக்கிறது. மகேஷ்,  திருச்சி தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்திருக்கிறார். சீட் கன்ஃபர்ம்.

கோயம்புத்தூர்:

மாவட்டத்தில் தி.மு.க.வின் நிரந்தர மாவட்டச் செயலாளராக வலம் வந்தவர் 'பொங்கலூர்' பழனிச்சாமி. இப்போது தி.மு.க சொத்து பாதுகாப்புக் குழு துணைத் தலைவர். தனது அரசியல் வாரிசாக தனது ஒரே மகன் பைந்தமிழ் பாரியை களம் இறக்கியுள்ளார். மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்று மண்டலத் தலைவராக இருக்கிறார், பைந்தமிழ் பாரி. அதோடு, மாநில இளைஞரணி துணைத் தலைவராகவும் இருக்கிறார். வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சிங்காநல்லூர் தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்துள்ளார் பாரி. அதே சமயம், தனது மருமகன் டாக்டர். கோகுல் என்பவரையும் அரசியலில் இறக்கியுள்ளார் பழனிச்சாமி. மாநில மருத்துவ அணியில் முக்கியப் பொறுப்பில் உள்ள கோகுல், சூலூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸில் மூத்த தலைவர், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம். பொங்கலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய இணை அமைச்சர் என பொறுப்புக்களை வகித்திருக்கிறார். இவர், தனது தம்பி எஸ்.ஆர்.ராஜகோபால் என்பவரை களம் இறக்கியுள்ளார். த.மா.க சார்பில், சூலூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் அளித்துள்ளார் ராஜகோபால். ஏற்கெனவே ஆவின் சேர்மன், பாசன சபைத் தலைவர் என பொறுப்பு வகித்தவர், ராஜகோபால்.

மூன்று முறை எம்.எல்.ஏ, ஒரு முறை அமைச்சர், என பதவி வகித்தவர் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சி.சண்முகவேல். இவரின் மகன் ராஜ்குமார்தான் இவரின் அரிசியல் வாரிசு. மடத்துக்குளம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் விருப்பத்தில் உள்ளார் ராஜ்குமார்.

வேலூர்:

இங்கு, தி.மு.க.வில், துரைமுருகன்தான் 'ஆல் இன் ஆல்'. அறிவாலயத்தில் தனக்கு செல்வாக்கு இருக்கும்போதே மகன் கதிர் ஆனந்தை கட்சிக்குள் வளர்த்து விட முயற்சித்து வருகிறார் துரைமுருகன். அப்பா உருவாக்கிய கிங்ஸ்டன் கல்வி நிறுவனங்களை கவனித்து வருகிறார் கதிர் ஆனந்த். துரைமுருகனுக்கும், அழகிரிக்கும் இருந்த நெருக்கம் கதிர் ஆனந்தின் வளர்ச்சிக்கு தடையாய் வந்து நிற்கிறது. ஆனாலும், எம்.எல்.ஏ கனவில் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார், கதிர் ஆனந்த்.

அரக்கோணம் தொகுதி, அ.தி.மு.க.வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், கோபால். அவரது மகன் என்.ஜி.பார்த்திபன்தான் இவரின் அரசியல் வாரிசு. சட்டப் படிப்பை முடித்திருக்கும் பார்த்தி, கட்சியில் தடம் பதிக்க தீவிரமாக வேலைகளை செய்து மாவட்டச் செயலாளர் ஆனார். தற்போது மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டிருக்கும் நிலையில், எம்.எல்.ஏ சீட் கண்டிப்பாக்கக் கிடைக்கும் என்று காத்திருக்கிறார்.

(அடுத்த மாவட்ட வாரிசுகள் அடுத்தடுத்த கட்டுரைகளில்)


- விகடன் டீம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close