Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பறிபோன வெற்றி வாய்ப்பு: கூடைக்கு 'தடா' கேட்கும் தே.மு.தி.க.!

2011 - சட்டசபைத் தேர்தலில்,  கூடை சின்னம் ஏற்படுத்திய குழப்பத்தால் தே.மு.தி.க. வேட்பாளர்கள் 2 தொகுதிகளில் தோற்றுப் போனார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வேப்பனஹள்ளி தொகுதியில் தி.மு.க. மாவட்டச் செயலாளர் செங்குட்டுவன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. வேட்பாளராக கந்தன் என்கிற முருகேசன் களமிறங்கினார். செங்குட்டுவன் 7,604 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் உழைப்பாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட ரங்கநாதன் 8,943 ஓட்டுகள் பெற்றார். ரங்கநாதனுக்கு கூடை சின்னம் ஒதுக்கபட்டிருந்தது.  இந்த சின்னம், தே.மு.தி.க.வின் முரசு சின்னம் போவே இருந்ததால் வாக்காளர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இதனால்  தே.மு.தி.க.வின் முரசு சின்னத்துக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுகள் கூடைக்குள் விழுந்தன. இதனால் தே.மு.தி.க.வின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.

உழைப்பாளி மக்கள் கட்சிக்கு பெரிய செல்வாக்கு எல்லாம் இல்லை. வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட்ட பி.ஜே.பி. வேட்பாளரைவிட உழைப்பாளி மக்கள் கட்சி வேட்பாளருக்கு சுமார் 4 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் கிடைத்தன. ஒரு சுயேச்சை வேட்பாளர் இவ்வளவு வாக்குகள் பெற முடியாது. வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் செங்குட்டுவனுக்கும், தே.மு.தி.க. வேட்பாளர் முருகேசனுக்கும் உள்ள வாக்கு வித்தியாசமான 7,604 ஓட்டுகளைவிட, கூடை சின்னத்தில் போட்டியிட்ட உழைப்பாளி மக்கள் கட்சி வேட்பாளர் ரங்கநாதனுக்கு அதிகமாக, அதாவது 8,943 வாக்குகள் கிடைத்தன. இப்படிப்பட்ட நிலையில்தான் தே.மு.தி.க.வின் வெற்றி பறிபோனது.

வேப்பனஹள்ளியை போலவே செஞ்சி தொகுதியிலும் இதே குழப்பம்தான். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் ஆர்.சிவலிங்கம் 1,811 ஓட்டுக்கள் வித்தியாசத்தில்,  பா.ம.க. வேட்பாளர் கணேஷ்குமாரிடம் தோற்றுப் போனார். இங்கே சுயேச்சையாக போட்டியிட்ட சிவக்குமாருக்கு கூடை சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் 8,627 வாக்குகள் வாங்கினார். இந்த கூடை சின்னமும் தே.மு.தி.க.வின் முரசு போலவே இருக்க.. முரசுக்கு  விழ வேண்டிய ஓட்டுகள் கூடை சின்னத்துக்கு போனது.

விருதுநகர் தொகுதியிலுமணி இதே பிரச்னை உருவானது. விருதுநகர் தொகுதியில் முரசு சின்னத்தில் தே.மு.தி.க. வேட்பாளராக பாண்டியராஜன் போட்டியிட்டார். கூடை சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக கற்குவேல் மாரிச்செல்வம் நின்றார். பாண்டியராஜன் 21 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதே நேரத்தில் கூடை சின்னத்தில் போட்டியிட்ட கற்குவேல் மாரிச்செல்வத்திற்கு 5,620 ஓட்டுக்கள் கிடைத்தன. சின்னத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் சுயேட்சை வேட்பாளர் கற்குவேல் மாரிச்செல்வத்திற்கு சுமார் 5 ஆயிரம் ஓட்டுக்கள் வரை கூடுதலாக கிடைத்தது.

விஜயகாந்த் போட்டியிட்ட ரிஷிவந்தியம்கூட இதில் தப்பவில்லை. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 91 ஆயிரத்து 164 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். இங்கே கூடை சின்னத்தில் எம்.விஜயகாந்த் என்ற சுயேட்சை களமிறங்கியிருந்தார். அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்த விஜயகாந்த்தை தோற்கடிக்க அப்போது தி.மு.க. செய்த ஏற்பாடு என பேச்சுக்கள் அப்போது கிளம்பின. பெயரும், சின்னமும் குழப்பத்தை ஏற்படுத்த.. சுயேட்சை வேட்பாளர் எம்.விஜயகாந்த்துக்கு 7,355 ஓட்டுக்கள் கிடைத்தன. திருக்கோவிலூர் தொகுதியில் கூடை சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் வெங்கடேசன் 6,029 ஓட்டுக்கள் பெற்றதால் தே.மு.தி.க. வேட்பாளர் வெங்கடேசன் வெற்றி பெற்ற போதிலும் அவரது வாக்கு வித்தியாசம் குறைந்து போனது.

தே.மு.தி.க.விற்கு தேர்தல் கமிஷன் அளித்த முரசு சின்னத்தை போலவே சுயேட்சைகளுக்கு ஒதுக்கப்பட்ட கூடைச் சின்னம் இருந்தததால் முதியவர்களும் கிராமப்புற மக்களும் குழம்பி போனார்கள். இதே மாதிரியான குழப்பம் இப்போதும் ஏற்பட்டுவிடக் கூடாது என உஷாராக இருக்கிறது தே.மு.தி.க.. அதனால் கூடை சின்னத்தை நீக்க வேண்டும். அல்லது வேறு யாருக்கும் ஒதுக்க கூடாது என தேர்தல் கமிஷனை அனுக முடிவு எடுத்திருக்கிறார்கள்.

-எஸ்.ஏ.எம். பரக்கத் அலி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ