Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கூட்டணி கட்சிகள் என்ன மாப்பிள்ளை தோழனா? கருணாநிதியை விளாசும் தா.பாண்டியன்

சென்னை: திமுகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளை மாப்பிள்ளை தோழனாகவே பார்ப்பது அக்கட்சியின் தலைவர் கருணாநிதியின் வழக்கம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காட்டமாக சாடியுள்ளார்.

சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், அக்கட்சியின் முன்னாள் செயலாளரும், மூத்த தலைவருமான தா.பாண்டியன் ஆகியோர் தியாகராயர் நகரில் உள்ள  தலைமை  அலுவலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.

அப்போது தா.பாண்டியன், "மக்கள் நலக்கூட்டணியை உடைத்து புதிய கூட்டணி அமைப்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் என்னுடன் ரகசிய பேச்சு நடத்தியதாகவும், அதிமுகவுடன் கூட்டணிக்கு நான் முயற்சி செய்வதாகவும் செய்தி வெளியாகி இருக்கிறது. அது முற்றிலும் தவறானது.

அதிமுகவை  பொறுத்தவரை இந்தத்  தேர்தலில் எங்களுக்கு எதிரிகளே இல்லை என்று கூறிவிட்டு 234 தொகுதியிலும் தனித்தே போட்டியிட  திட்டமிட்டுள்ளனர். 234 தொகுதிகளிலும் வெல்வோம் என்று கூறி வருகிறார்கள். எனவே அதிமுகவுடன் எந்த ரகசிய பேச்சும் நடைபெறவில்லை.

தமிழகத்தைப்  பொறுத்தவரை அதிமுகவும், திமுகவும் 1967 ல் இருந்து மாறி மாறி ஆட்சி செய்து கொண்டு இருக்கின்றன. தேர்தல் முடிந்ததும்,  'திருமணத்திற்கு வந்துள்ள மாப்பிள்ளை தோழன் விருந்து சாப்பிட்டு விட்டு சென்று விடலாம்' என்று திமுக  தலைவர் கருணாநிதி கூறுவார். கூட்டணி கட்சிகளை மாப்பிள்ளை தோழனாகவே பார்ப்பது அவரது வழக்கம்.

 மக்கள் நலக் கூட்டணியை உடைப்பதற்கு திமுக சதி செய்து வருகிறது. பழம் நழுவி பாலில் விழும் என்று அவர்கள் காத்திருந்தனர். இதே போல் மக்கள் நலக்கூட்டணியும் உடையும் என கனவு காண்கிறார்கள். அவர்களது கனவே உடைந்து போகும். மாற்றத்தை விரும்புபவர்கள்  மக்கள் நலக்கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வார்கள். தேர்தலுக்கு பின்னரும் இந்த கூட்டணி தொடரும். 2 ஜி ஊழல் வழக்கில் திமுக  மீது மக்கள் அதிருப்தியிலேயே உள்ளனர். இது தேர்தலில் எதிரொலிக்கும்" என்று கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்,‘‘திமுக  கூட்டணிக்கு விஜயகாந்த் எப்படியும் வந்து விடுவார் என்று கருணாநிதி எதிர்பார்த்தார். மக்கள் நலக்கூட்டணியும் உடைந்து வைகோ, திருமாவளவன் வருவார்கள் என்று நினைத்து இருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. எனவே எப்படியாவது மக்கள் நலக்கூட்டணியை உடைத்து விட வேண்டும் என்கிற நோக்கில் இது போன்ற செய்திகளை திமுக பரப்பி வருகிறது. மக்கள் நலக்கூட்டணியை உடைக்கும் திமுகவின் எண்ணம் நிறைவேறாது’’ என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ