Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பட்டி முதல் பட்டணம் வரை... ஆளத் துடிக்கும் அரசியல் வாரிசுகள்! (மினி தொடர்- 2)

ந்தியா முழுவதுமே வாரிசு அரசியல் பிரபலம். அதிலும் தமிழ்நாடுதான் அல்டிமேட். கருணாநிதி-ஸ்டாலின்-அழகிரி-கனிமொழி, எம்ஜிஆர்-ஜெயலலிதா, ராமதாஸ்-அன்புமணி, மூப்பனார்-ஜி.கே.வாசன், ப.சிதம்பரம்-கார்த்திக் சிதம்பரம், விஜயகாந்த்-பிரேமலதா-சுதீஷ்... என தொடர்கிறது வாரிசுகளின் பட்டியல்.

இப்படி தமிழகத்தில் நமக்காக சேவை (!) செய்ய காத்திருக்கும் வாரிசுகள் யார் யார் என்ற இரண்டாவது  பட்டியலில் இம்முறை தி.மு.க வாரிசுகள் மட்டும்...

சேலம்

சேலம் மாவட்டத்தை தி.மு.க.வின் கோட்டையாக வைத்திருந்த வீரபாண்டி ஆறுமுகத்துக்கு மகேஸ்வரி, செழியன், நிர்மலா, ராஜா என்கின்ற ராஜேந்திரன் ஆகிய நான்கு வாரிசுகள். தன் அரசியல் வாரிசாக செழியனை கட்சிக்குக் கொண்டு வந்தார் வீரபாண்டி ஆறுமுகம். சேலம் மாநகர இளைஞரணி அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார் செழியன். அப்போது தன் அப்பாவுக்கு இணையாக அரசியல் செல்வாக்குக்கொண்டவராக திகழ்ந்தார். அந்த சமயத்தில் திடீரென செழியன் 2011-ல் நோய்வாய்பட்டு இறந்து போனார். அந்த தருணத்தில், வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன் ராஜா என்கிற ராஜேந்திரன், கல்லூரி மாணவர். செழியன் இறந்த பிறகு, தனது அரசியல் வாரிசாக இளைய மகனை 2003-ல் கொண்டு வந்து,  மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பதவி வாங்கிக் கொடுத்தார். இந்த நிலையில் 2014-ல் வீரபாண்டியார் இறந்து விட்டார். தற்போது வீரபாண்டி ராஜாதான் சேலம் மாவட்ட தி.மு.க பொறுப்பாளர்.

தஞ்சாவூர்

முன்னாள் மாவட்டச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பழனி மாணிக்கத்தின் தம்பி எஸ்.எஸ்.ராஜ்குமார். இவர் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை. ஆனால், தஞ்சை தி.மு.க.வின் ஆல் இன் ஆளாக இருந்தார். இவரால்தான் பழனி மாணிக்கத்துக்கு எதிராக கோஷ்டிகள் உருவாகின என்று தி.மு.க.வினரே பேசினர். அப்போது தலைமைக்கு இது புகாராகப் போக,  பழனி மாணிக்கம் மாவட்டச் செயலாளர் பொறுப்பை இழந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இந்த சட்டமன்ற தேர்தலில் தன் தம்பியை களம் இறக்க நினைக்கிறார். அவருக்காக தஞ்சை, ஒரத்தநாடு இரண்டில் ஒரு தொகுதியைக் கேட்டு பழனிமாணிக்கம் கடுமையாக முயற்சி செய்து வருகிறார்.

நாகப்பட்டினம்

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகேயுள்ள சித்தமல்லி கிராமம்தான் ஏ.கே.எஸ்.விஜயனின் சொந்த ஊர். இவரின் தந்தை ஏ.கே.சுப்பையா, கம்யூனிஸ்ட் கட்சியில் சீனியர். கிராமம் கிராமமாக சைக்கிளில் சென்று கட்சியை வளர்த்தவர். தலித் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக போராடியவர். சுப்பையா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோட்டூர் தொகுதியில் நின்று தொடர்ந்து நான்கு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். அந்த சமயத்தில் திராவிட கட்சிகள் கோட்டூர் பகுதியில் நுழையவே முடியவில்லை.

அப்போது கம்யூனிஸ்ட் கட்சி,  விவசாய தொழிலாளர்கள் மாநாடு நடத்தியது. அதில் கலந்துகொண்ட தி.மு.க தலைவர் கருணாநிதி, ‘குடியிருப்போருக்கு நிலம் சொந்தம்’ என்று அறிவித்தார். ‘கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு பேனா மைத்துளியால் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றியவர்’ என்று கருணாநிதியை பாராட்டினார் ஏ.கே.சுப்பையா. பிறகு சுப்பையாவின் பிறந்த நாளுக்கு அவரை கருணாநிதி சந்தித்து வாழ்த்தும் சொன்னார். இதனால் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து சுப்பையாவை நீக்கினார்கள். அதுவரை கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொள்ளாமல் இருந்த அவருடைய மகன் விஜயனை, குறிவைத்து அரசியலுக்கு தி.மு.க. இழுத்தது.  ஒன்றிய துணைச் செயலாளர், ஒன்றிய செயலாளர் என பதவிகள் விஜயனுக்கு வழங்கப்பட்டன. மெள்ள மெள்ள ஸ்டாலினுக்கு நெருக்கமாகி,  தி.மு.க சார்பில் நாகை நாடாளுமன்ற தனித் தொகுதியில் போட்டியிட்டு மூன்று முறை வெற்றி பெற்றார். தி.மு.க.வில் மாவட்டச் செயலாளராகவும் இருக்கிறார். இப்போது திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியை குறிவைத்து சீட் கேட்டு இருக்கிறார்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட தி.மு.க செயலாளராக இருந்தவர் பூண்டி கலைச்செல்வன். மாவட்டத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட, கட்சித் தலைமை கலைச்செல்வத்தின் விசுவாசத்துக்காக அவரின் சகோதரர் பூண்டி கலைவாணனை மாவட்டச் செயலாளராக்கியது. கருணாநிதிக்கு திருவாரூர் சொந்த ஊர் என்பதால் கடந்த தேர்தலில் அவர் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். தேர்தல் வேலையாக இருக்கட்டும், அதன்பிறகு தொகுதியை பார்த்துக்கொள்வதாக இருக்கட்டும் அனைத்தையும் கலைவாணன்தான் கவனிக்கிறார். இம்முறை அவருக்கு மாவட்டத்தில் சீட் வழங்கப்படலாம்.

தி.மு.க சீனியரான டி.ஆர்.பாலுவுக்கு சொந்த ஊர் திருவாரூர் மன்னார்குடிக்கு அருகில். டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா. எம்.பி.ஏ பட்டதாரி. இவர் கிங்ஸ் பொறியியல் கல்லூரி மற்றும் குடும்பத் தொழில்களை கவனித்து வந்தார். 20011-ம் ஆண்டு தேர்தலில் ராஜாவை சொந்த ஊரான மன்னார்குடியில் களமிறக்கினார் பாலு. குறைந்த ஓட்டில் வெற்றியும் கண்டவர், எம்.எல்.ஏ ஆனார் ராஜா. இம்முறையும் மன்னார்குடி தொகுதிக்கு இவர்தான் வேட்பாளர் என்ற குரல் கேட்பதால், கட்சியின் சீனியர் நிர்வாகிகள் நொந்து போய் உள்ளனர்.

-விகடன் டீம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ