Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமைச்சர்கள் மீது நடவடிக்கை ஜெ.வின் வழக்கமான நாடகங்களே: கருணாநிதி

சென்னை: ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது தற்போது வெளிப்படையாக எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் ஜெயலலிதா வழக்கமாக நடத்தும் கபட நாடகங்கள்தான் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசில் என்னதான் நடக்கிறது? கடந்த ஐந்தாண்டு காலமாக ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் மீதெல்லாம் அவ்வப்போது பல்வேறு புகார்கள் வெளிவந்தன. குறிப்பாக மின்துறை அமைச்சர் மீது பல கோடி ரூபாய் ஊழல் புகார்கள் எல்லாம் பூர்வாங்க ஆதாரங்களுடன் கூறப்பட்டன. அப்போதெல்லாம் முதல்வர் ஜெயலலிதா கண்டு கொள்ளாமல் பாராமுகமாகவே இருந்தார். தற்போது என்ன நிலைமை?

அன்றாடம் நாளேடுகளைப் பிரித்தால் வருகின்ற செய்திகள் எத்தகையவை? அமைச்சரவையில் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில், ஏன் இரண்டு முறை நீதிமன்ற நடவடிக்கைகளால் ஜெயலலிதா பதவியிலிருந்து இறங்க வேண்டிய நேரத்தில் முதல்வராகவே இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். இன்றும் அவர்தான் நிதியமைச்சர். ஆனால் அவருடைய கதி என்ன? அவருடைய நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஜெயலலிதா வாய்மொழி உத்தரவு உளவுத் துறைக்குப் பிறப்பித்து, அவர்கள் பன்னீர்செல்வத்திற்கு எங்கெங்கே எவ்வளவு சொத்து, என்னென்ன முறைகேடுகளைச் செய்திருக்கிறார், எம்.எல்.ஏ. சீட் வாங்கித் தருவதாக அவருடைய ஆதரவாளர்கள் வசூலித்த பணம் எத்தனை கோடி என்ற விவரங்களையெல்லாம் திரட்டியிருக்கிறார்களாம்.

ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி செய்த தவறால் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த நாகமுத்து என்ற பூசாரி கடிதம் எழுதி விட்டு உயிர் துறந்தது பற்றி எதிர்க்கட்சிகள் குறைகூறிய போது அந்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? கிடையாது. இன்று அதே ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் செய்கின்ற தவறுகள் பற்றி புலனாய்வுத் துறை ஆராய்ந்து அறிக்கை கொடுக்கிறதாம்.

இன்னும் சொல்லப்போனால் ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டி, சென்னையில் முடக்கி வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள். அவருடைய நெருங்கிய நண்பர் செல்லமுத்து, கடமலை மயிலை ஒன்றியத் தலைவர் முருக்கோடை ராமர் இல்லத் திருமணங்கள் எல்லாம் அவருடைய தலைமையிலேதான் நடைபெறுவதாக இருந்தாலுங்கூட, கலந்து கொள்ளவில்லையாம். அந்த அழைப்பிதழ்களில் கூட வழக்கமாக இடம் பெறும் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம் பெறவில்லையாம். திருமணத்தில் கலந்துகொள்ள பயணம் புறப்பட்ட பிறகு, ரத்தாகி விட்டதாம்.

நத்தம் விசுவநாதனின் ஆதரவாளர்களான திண்டுக்கல் தகவல் தொழில் நுட்பப் பிரிவுச் செயலாளர் தர்மலிங்கம், சாணார்பட்டி ஒன்றிய ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் மணி என்கிற சுப்பிரமணி, நத்தம் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் மேட்டுக்கடை செல்வராஜ் ஆகியோரது பதவிகள் பின்னர் பறிக்கப்பட்டன. இதில் மேட்டுக்கடை செல்வராஜ், நத்தம் விசுவநாதனின் மருமகனும், மாவட்டப் பொறுப்பாளருமான கண்ணனின் நெருங்கிய நண்பர். கண்ணனின் பினாமி என்று அழைக்கப்படுபவர்.

தூத்துக்குடியில் அமைச்சர் சண்முகநாதனின் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தியை தூத்துக்குடி போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சிப் பதவிகள் முதல் வேலைவாய்ப்பு, டிரான்ஸ்பர் ஆகிய பணிகளுக்கு கிருஷ்ணமூர்த்தி பணம் வாங்கிக் கொண்டு செயல்படுவதாகத் தரப்பட்ட புகாரின் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் ஓ.பி.எஸ்.சின் பினாமியாகச் செயல்பட்ட அரசு ஒப்பந்தக்காரர், ஆர்.எஸ்.முருகன் மீது பாளை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். அவர் தலைமறைவாக உள்ளார்.

இந்தச் செய்திகள் பற்றி அரசின் விளக்கம் என்ன? இதே அமைச்சர்கள், மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் மீதும் எதிர்க்கட்சிகள் கடந்த ஐந்தாண்டு காலமாக புகார்களையெல்லாம் அடுக்கடுக்காக எடுத்துக் கூறிய போது அதைப் பற்றி முதல்வர் காதில் போட்டுக் கொண்டாரா? தற்போது அந்தப் புகார்கள் எல்லாம் உண்மை என்று ஆகி விட்ட நிலையில், இதற்காக இந்த அரசாங்கம் மக்களுக்குத் தருகின்ற விளக்கம் என்ன? தற்போது வெளிப்படையாக எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் ஜெயலலிதா வழக்கமாக நடத்தும் கபட நாடகங்கள்தானா? நாட்டு மக்களை ஏமாற்றித் திசை திருப்புவதற்காக போடுகின்ற நய வஞ்சகக் கூத்துகளா?

ஆனால் ஜெயலலிதாவின் இந்த நாடகங்களைக் கண்டு ஏமாறுவதற்கு நாட்டு மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல! ஜெயலலிதா நடத்திய இதுபோன்ற பழைய நாடகத்தை ஏற்கனவே கண்டு பின்னணிக் கதைகளைப் புரிந்து கொண்டவர்கள். ஏன் தற்போது ஜெயலலிதா உடன் வாழ்கின்ற சசிகலா பற்றியே ஜெயலலிதா என்ன சொன்னார்? எப்படி நடந்து கொண்டார்? நாட்டிற்குத் தெரியாதா? சசிகலா வெளியேற்றம், மீண்டும் அடைக்கலம் என்பனவெல்லாம் நாடகத்தின் காட்சிகள் என்பது புரியாதா?

இவையெல்லாம் ஜெயலலிதாவுக்கு பழகிப் போன சம்பவங்கள்; ஏனென்றால் அனைத்தும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட காட்சிகள்! அவற்றை நினைவூட்டும் நிகழ்வுகள்தான் தற்போது மீண்டும் தேர்தலையொட்டி காட்சிப்படுத்தப்படுகின்றனவா?

ஓர் அரசில் அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்பு. அமைச்சர்கள் தவறு செய்தால், அந்தத் தவறுகளுக்கு முதல்வர்தான் பொறுப்பேற்க வேண்டும். அதிமுக ஆட்சியில் இந்த ஐந்தாண்டு காலத்தில் எத்தனை முறை அமைச்சர்கள் மாற்றப்பட்டார்கள்? அமைச்சர்கள் மாற்றப்பட்டார்கள் என்றால், அமைச்சர்கள் தவறுகளும் முறைகேடுகளும் செய்த காரணத்தால்தான் மாற்றப்பட்டார்கள். அப்படி மாற்றப்பட்ட அமைச்சர்கள் சிலரே பிறகு மீண்டும் அமைச்சர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். அப்படியென்றால் அவர்கள் ஏற்கனவே செய்த தவறு என்ன ஆயிற்று? முறைகேடுகள் செய்த அமைச்சர்களை நீக்குவதும், பின்னர் அந்த முறைகேடுகள் மக்களுக்கு மறந்து போனதும் மீண்டும் சேர்த்துக் கொள்வதும் தொடர்ந்து நடந்ததுதானே?

பொதுமக்களின் நினைவாற்றல் குறைவானது என்பதை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார்கள்? ஓர் அமைச்சரவையில் தவறு செய்த அமைச்சர்களே இத்தனை பேர் என்றால், அந்தக் கட்சியின் செயல்பாடு எத்தகையது? அந்தக் கட்சியை ஆட்சிக்கு வரவிடலாமா? ஓர் ஆட்சியிலே உள்ள அமைச்சர்களைப் பற்றி எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவது என்பது ஆச்சர்யமல்ல. ஒரு அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர்களைப் பற்றி, ஆட்சியினரே அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைக்கின்ற நேரத்தில், அந்த அரசைப் பற்றி தனியே விளக்கம் வேறு கூறிட வேண்டுமா? தொடர்ச்சியாக நடக்கும் நாடகங்களைப் பற்றியும் இந்த வேடிக்கை வினோதங்களைப் பற்றியெல்லாம் பொதுமக்களிடம் விளக்கம் அளித்து நினைவூட்டிட வேண்டியது கடமை அல்லவா?'' என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close