Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2011ல் கருணாநிதிக்காக செய்த தவறை, 2016ல் மீண்டும் செய்வாரா ஜெயலலிதா?

மிழகத்தின் மிகப்பெரிய தேர்தல் திருவிழாவான சட்டப் பேரவை தேர்தல், வரும் மே 16-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காக ஜெயலலிதாவும், எப்படியாவது அதிகாரத்தை கைப்பற்றியாக வேண்டும் என்று கருணாநிதியும் காய் நகர்த்தி வருகின்றனர். ஆனால், 2011-ல் கருணாநிதிக்காக செய்த தவறை, 2016-ல் ஜெயலலிதா மீண்டும் செய்வாரா என்பது தெரியவில்லை. அப்படி அவர் என்ன தவறு செய்தார் என்பதை பார்ப்போம்.

இலவச அரசியல்

2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க இரண்டு ஏக்கர் நிலம், 2 ரூபாய்க்கு ஒரு கிலோ ரேசன் அரிசி, இலவச டிவி என இலவசங்களை அள்ளித் தெளித்து தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஆழ்த்தி வெற்றி பெற்றது. 2006-ல் தோற்றதைப்போல், 2011-ல் தோற்றுவிடக்கூடாது என்பதற்காகவே தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் என தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, வெற்றி பெற்றார் ஜெயலலிதா.

மிக்ஸி, கிரைண்டர் போன்ற இலவசங்களால் ஏழை, நடுத்தர பெண்கள் ஏராளமானோர் பயன் அடைந்துள்ளனர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. கடந்த 2011-ல் அ.தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து,  மக்களை கவர பல்வேறு திட்டங்கள் அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தது ஒருபக்கம் இருந்தாலும், மறுபக்கம் கடந்த நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக இதுபோன்ற திட்டத்திற்கு அரசு செலவும் அதிகரித்துள்ளதால் கடனில் சிக்கித்தவித்து வருகிறது தமிழகம்.

மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காக கருணாநிதியோ அல்லது ஜெயலலிதாவோ இலவச ஸ்மார்ட்போன், வாஷிங்மெசின், ப்ரிட்ஜ் என்று ஏதாவது இலவசமாக வழங்குவோம் என்று அறிவித்தால்? பிறகு கஷ்டம் தான்.

பொதுமக்கள் திருந்தணும்!

தமிழகத்தின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு யார் காரணம்? எதனால் இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டது என்பது குறித்து பொருளாதார நிபுணர் எம்.ஆர்.வெங்கடேஷிடம் பேசினோம்.

"ஒரு நாணயத்தின் இரண்டு முகங்கள்தான் ஜெயலலிதாவும், கருணாநிதியும். என்ன... தி.மு.க வேட்டி கொடுத்தால், அ.தி.மு.க சேலை கொடுப்பார்கள் அவ்வளவுதான் வித்தியாசம். இரண்டு பேருக்குமே பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும், ஆட்சி நடத்த வேண்டும் என்ற எண்ணம்  இல்லை. இதில் பெரும் குறையாக பொதுமக்களையும் கூறலாம்.

ஜெயலலிதா படுதோல்வி

ஏனெனில் 2001லிருந்து 2004 வரை சீர்திருத்தங்கள் (அரசு ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கை) எல்லாம் ஜெயலலிதா கொண்டு வந்தார். ஆனால், 2004-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா படுதோல்வி அடைந்தார். இதற்கடுத்து பொருளாதாரத்தை மீட்பது என்பது முட்டாள்தனம் என்று ஜெயலலிதாவிற்கு தெள்ளத் தெளிவாக தெரிந்துவிட்டது. அதனால் அவரும் இதுபோன்ற போக்கத்த மலிவான பாதையை பின்பற்ற ஆரம்பித்துவிட்டார், இதுவரை கையாண்டும் வருகிறார்.

மக்களுக்கு அவர்களுடைய சொந்தக் காலிலேயே நிற்பதற்கு முதலில் கற்றுத் தர வேண்டும். பொருளாதாரத்தின் அடிப்படை தத்துவமே, 'பசியில் வாடுகின்ற ஒருவனுக்கு மீனைக் கொடுக்காதே, மீன் பிடிக்க கற்றுத்தா' என்பதுதான். ஆனால், நமது அரசாங்கமோ ரேஷன் கடைகளில் இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, விலை இல்லா அரிசி என்று சலுகை விலையிலும், இலவசமாகவும் வழங்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புங்க

மாநிலத்தின் மொத்த வருவாயில் கிட்டத்தட்ட 50%லிருந்து 60% ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்கே செலவிடப்படுகிறது. 100 சதவிகித மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரிப்பணத்தை,  வெறும் 2% மக்களுக்கு (அரசு ஊழியர்கள்) மட்டுமே அதிகளவில் செலவிடுகிறது. இதுதான் முக்கிய பிரச்னை. இதற்குமேல் ஊதாரித்தனமான செலவும், மானியமும், இலவசமும் வழங்கப்படுவது.
தமிழகத்தைவிட உத்தரபிரதேசத்தில் மக்கள் தொகை இரண்டு மடங்கு அதிகம். அங்கும் கிட்டத்தட்ட 10 முதல் 12 லட்சம் ஊழியர்கள்தான் இருக்கிறார்கள். ஆனால், அவ்வளவு பெரிய மாநிலத்தையே 12 லட்சம் ஊழியர்கள் வைத்து நடத்துகிறார்கள். உத்தரபிரதேசத்தைவிட சிறிய மாநிலமான தமிழகத்தையும் அதே அளவில் ஊழியர்கள் வைத்து நடத்தினால் எப்படி?

செவுடன் காதில் சங்கு

தமிழகத்தில் சுயவிருப்பு ஓய்வு திட்டம் கொண்டு வந்து,  அரசாங்க ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். ஆட்சேர்ப்பு நடவடிக்கையை அடுத்த 10 ஆண்டுக்கு இல்லை என்று அறிவிக்க வேண்டும். இன்றும் ஒரு பட்டாவோ அல்லது சிட்டாவோ வாங்க வேண்டும் என்றால் சிரமமாக உள்ளது. அரசு அலுவலகங்கள் கணினி மயமாக்கப்பட வேண்டும். ஆக இதை எல்லாம் குறைத்தால்தான் தமிழகத்தின் பொருளாதார நிலைமை நன்றாக இருக்கும். இது எல்லாம் ஒன்றுக்கு ஒன்று பிணைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மொத்த வருவாயில் இலவசம், ஊதியம், ஒய்வூதியம், மானியம் என்றே அளித்தால் வளர்ச்சி திட்டங்கள் எல்லாம் ஒன்றுமே இருக்காதே. இதுதான் தமிழகத்தின் தற்போதைய நிலைமை. இதில் ஜெயலலிதாவையும், கருணாநிதியும் குறை சொல்ல முடியாது. அரசுதான் எல்லாமே செய்யணும் என்ற பிற்போக்குத்தனமான சிந்தனையை மக்களும் கைவிட வேண்டும். ஆனால், தமிழக மக்கள் மாறுவார்களா? செவுடன் காதில் சங்கு ஊதுன கதைதான் இது" என்றார்.

ஜெயலலிதாவா... கருணாநிதியா? 

தமிழகத்தின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு யார் காரணம்? இலவச அரசியலுக்கு யார் காரணம்? எதனால் இப்படி ஆனது? யார் பொறுப்பு? என்ற எல்லா கேள்விகளையும் தற்போதைக்கு தவிர்த்து விடுவோம். இனிமேலாவது ஆளும் அரசு எதுவாக இருந்தாலும் நல்ல நிர்வாகத்தையும், இலவசம் இல்லாத வளர்ச்சிக்கான திட்டங்களையும் தரவேண்டும் என்பது அனைவருடைய விருப்பமாக இருக்கும். 2011-ல்  செய்த தவறை, 2016-ல் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காக ஜெயலலிதா செய்யக்கூடாது என்பதே நம்முடைய விருப்பம். அதேசமயத்தில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக கருணாநிதியும் இலவச அரசியலை தவிர்க்க வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பமாக இருக்கும்.

அண்மையில் சென்னையில் பெய்த கனமழையால்,  இவர்கள் அளித்த இலவச டிவி, மிக்ஸி, கிரைண்டர் போன்றவை குப்பையோடு, குப்பையாக சில இடங்களில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. சென்னையில் குடிசையில் வாழும் பெரும்பாலான பொதுமக்கள்,  'நமக்குத் தேவை இலவசங்கள் அல்ல, நல்ல திட்டங்களும், நல்ல நிர்வாகமும்தான்' என்பதை இப்பொழுது உணர்ந்துள்ளனர்.

அதேசமயத்தில் ஜெயலலிதாவும், கருணாநிதியும் இதை உணருவார்களா?

-சோ.கார்த்திகேயன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close