Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2ஜியை மிஞ்சிய 4ஜி நத்தம்!

''ராம்நாட்ல, (ராமநாதபுரம்) தாமரைக்குளம் போஸ்ட்லதான் அந்த லேடி இருக்கு. டவர் லொக்கேஷனைக் கரெக்ட்டா வைங்க. டோட்டலா ஆறுமாச டேட்டா கைக்கு வந்தாதான் மொத்த விவரத்தையும் எடுக்க முடியும்...''

- இப்படியொரு உத்தரவு யாரிடமிருந்து யாருக்கு கொடுக்கப்பட்டிருக்கும், எதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் என்பதற்குள் போவதற்கு முன், அந்தப் பெண் விளைவித்த விபரீதங்களையும், தமிழக அரசியலில் அந்தப் பெண்ணால் அலையடிக்க தொடங்கிய காட்சிகளையும் இப்போது பார்ப்போம் (சட்ட நடவடிக்கை பாயும் வரை அவர் பெயரை பதிவிட வேண்டாமே)... இப்போதைக்கு அவர் பெயர் 'ஜில்' என்று வைத்துக் கொள்வோம்

அ.தி.மு.க ஆட்சியமைத்த 2011-ன் டிசம்பர் மாத சீசன் வாக்கில் அந்த அழகுப் பெண், விஸ்வநாதன் மூலமாக பலருக்கு அறிமுகம். அதற்கு முந்தைய ஆண்டு அந்தப்பெண் விச்சுவுக்கு அறிமுகம்.  அறிமுகத்திலும் ஒரு சுவாரஸ்ய பின்னணி உண்டு. பத்து லட்ச ரூபாய் சீட்டு, நான்கு லட்சம் ரூபாய் வரை ஏலம் கேட்டால் 'தள்ளுபடி பணம்' போக ஏலம் கேட்டவருக்கு எவ்வளவு பணம் கைக்கு வரும்? மற்ற உறுப்பினர்களுக்கு 'பீஸ்' தொகை போக எவ்வளவு கைக்கு நிற்கும்? என்பதை கால்குலேட்டர் வைத்து பார்த்துச் சொல்வதற்குள் மொத்தக் கணக்கையும் போகிற போக்கில் அப்படியே சொல்லிவிட்டுப் போகிற பிரமாண்ட கணக்கறிவில் தொடங்குகிறது அந்தப் பெண்ணின்  கெட்டிக்காரத்தனம். அந்த அழகறிவில் கவிழ்ந்தவர்தான் ஏரியாவில் ஏலச்சீட்டு நடத்தி வந்த விச்சு (அமைச்சர் நத்தம் விஸ்வநாதனேதான்).

அறிவாளியாகவும், கணக்கு வழக்கில் கில்லாடியாகவும், கண்ணெதிரே தோன்றும் ஒரு பெண் அழகாகவும் இருந்து விட்டால், சபலத்திலேயே உறைந்து கிடக்கும் மனம் கொண்டவர்கள் மண் கவ்வுவது இயல்புதானே... அதுதான், அங்கே நடந்திருக்கிறது. அது மட்டுமல்ல, 'இந்தப் பொண்ணு இருக்காளே, கணக்கு வழக்குல விவரமா இருக்கா... எனக்கு அந்த விஷயத்துல பணத்துக்குப் பாதுகாப்பும் ஆகிவிட்டது. அதேபோல் எதில் முதலீடு செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், ரெய்டு வராமல் எப்படி தப்பிக்கலாம் என்பது முதல் பல விஷயங்களில் இந்தப் பெண்தான் எனக்கு ஆசான்' என்று எஞ்சியிருந்த நால்வரிடம் சொல்லி வைக்க அவர்களுக்கும் ஆலோசகராக ஆகியுள்ளார் அந்தப் பெண்.

பிரபல வர்த்தக நிறுவனமான அதானி குழுமத்தின் பொதுமேலாளர் தமிழகம் வந்திருந்த நேரம் அது. சோலார் புராஜக்ட்டுக்காக பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அவர்களுக்குத் தேவைப்பட்டது. அதை உடனே நல்லபடியாக முடித்துக் கொடுக்கும்படி துறை அமைச்சராக இருந்த விச்சுவுக்கு, மேலிருந்து உத்தரவு. அந்த உத்தரவில் ஒரு தவறும் இல்லை. தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டைப் பெருக்க ஒரு அரசு மேற்கொண்ட முயற்சியாகவே இதைப் பார்க்க வேண்டும். ஆனால், விச்சு இந்த விஷயத்தை அப்படிப் பார்க்கவில்லை. இதுபற்றி 'ஜில்'லிடம் ஆலோசித்திருக்கிறார் விச்சு. ஜில்லுவின் அசத்தல் உத்தி விச்சுவை அப்படியே கிறங்கடித்திருக்கிறது.

''உங்க கையில் அம்மா கொடுத்திருப்பது மிகப்பெரிய பொக்கிஷம்,  முதலில் அதை நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். அல்பத்தனமாக சோலார் பேனலில் அங்கே கை வைக்கலாம், இங்கே கை வைக்கலாம் என்று, கேரளா கவர்ன்மென்ட் போல மாட்டிக் கொள்ளாதீர்கள். ஒரு ஏக்கர் நிலத்தை 3 லட்சத்துக்குள் பேசியோ, மிரட்டியோ வாங்கிக் கொள்ளுங்கள். இப்படியே அவர்கள் கேட்டிருக்கும் மூவாயிரத்து சொச்சம் ஏக்கரையும் வாங்கிக் கொள்ளுங்கள்... அம்மா உங்களிடம் சொன்னது நிலத்தை வாங்கிக் கொடுக்க மட்டுமே, ரேட் குறித்து எந்த இடத்திலும் சொல்லவில்லை. 10 ஆயிரங் கோடிக்குள்ளேதான் மூவாயிரத்து ஐநூறு ஏக்கர் வரும். அதில் பத்து மடங்கு விலையை மேலே வெச்சு அதானி குரூப்புக்கு  கை மாத்திக் கொடுங்க... சோலோவா எத்தனை லட்சங்கோடி உங்களுக்கு மட்டும் நிக்கும் தெரியுமா...? இதில் எந்த இடத்திலும் சிக்கலே வராது. ஈ.பி.யில இருக்கற மேன் ஃபவரை வச்சு அதானி குரூப் சொல்ற அடுத்த கட்ட வேலைகளுக்கு ஆட்களை அனுப்புங்க. அதை அம்மா கிட்ட எடுத்துச் சொல்லுங்க. அவ்வளவுதானே?" என்று 'தெறிக்க' விட்டிருக்கிறார் அட்வைசர் ஜில்லு. அடுத்து ஜில் எதைச் சொன்னாலும் கேட்கும் முடிவுக்கு வந்த விச்சு, முதற்கட்டமாக அதானி மடியிலேயே யாருக்கும் தெரியாமல் கைவைத்த கோடிகள் டூ-ஜிக்கு பெரியப்பா ரேஞ்ச் தொகை.

விச்சுவின் மகன் அமர் மூலமாக அதானி குழுமத்தில் சம்பாதித்த பணத்தில் பிரமாண்ட ரியல் எஸ்டேட் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக (ரியல் எஸ்டேட் தொழிலேபடுத்த நிலையிலும்) கொடிகட்டிப் பறக்கிறது.

அழகு, அறிவு என்று மட்டுமே கண் முன்னே ஜொலித்த அந்த ஜில்லுக்கு இன்னொரு வித்தையும் கைவந்த கலை. அது மிமிக்ரி.    'ஆமாம், இளவரசிதான் பேசறேன், அம்மா கூடதான் இருக்கேன்... ஆமாமா... அவங்க சொல்றபடியே செய்யுங்க' என்று ஜில் ஜில் போட்ட போட்டில் பலர் மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கும், அமைச்சர் பதவிகளுக்கும் பணத்தைக் கொட்டிக் கொடுத்து விட்டு, இப்போது மாவட்டத்தில் விவகாரம் லீக் ஆன நிலையில் கையை பிசைந்து கொண்டிருக்கின்றனராம்.

சென்னையில் நுங்கம்பாக்கம், பெசன்ட்நகர் ஏரியாக்களில் பங்களா டைப்பில் ஜில்லுக்கு வீடுகள். சென்னையில் விச்சு இருந்தால் தவறாமல் ஜில் சொல்லும் வீட்டுக்கு டிஸ்கஷன் (?!) பண்ண போய் விடுவாராம். அதேபோல் ஊரில் இருந்தால் போக, வர என்று பல வீடுகளைக் கட்டிக் கொடுத்தும் ஜில்லுக்குத் திருப்தி இல்லாததால், லேட்டஸ்ட்டாக ஒரு வீட்டைக் கட்டிக் கொடுத்துள்ளாராம். சுற்றிலும் 'கண்காணிப்பு வளையம்' அமைந்துள்ள நிலையில், விச்சுவுக்கு ஜில்லிடமிருந்து அழைப்பு. 'நீதான்யா வந்து விளக்கேத்தணும்' என்று. விச்சுவோ, 'சொன்னா கேளு புள்ளே, நா எங்கியும் வர முடியாது. நீயே கிட்டே இருந்து ஆடம்பரம் இல்லாம சிம்பிளா பண்ணிக்க' என்று அங்கு போகாமல் தவிர்த்து விட, கடுங்கோபத்தில் இருக்கிறாராம் ஜில்லு.
 
ஜில் வீட்டுக்கு போனவாரம்தான் நடந்திருக்கிறது, புதுமனை புகுவிழா.

டவர் லொக்கேஷன் எங்கே காட்டுகிறது என்று இப்போது தெரிந்திருக்குமே...!

 ந.பா.சேதுராமன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close