Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அ.தி.மு.க. ஐடி விங் அஸ்பயர் சாமிநாதன் நீக்கத்துக்கு இதுதான் காரணமா?

அ.இ.அ.தி.மு.கவின் தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு மாநிலச் செயலாளராக இருந்தவர் அஸ்பயர் சாமிநாதன். அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவால் ஓரங்கட்டபட்ட அமைச்சர்களின் ஆதரவில், ஐ.டி. விங்கிற்கு எட்டாவது பெயில் ஆகிப் போனவர்களையும் மாவட்டச் செயலாளர்களாக அஸ்பயர் சாமிநாதன் நியமித்தார்.

ஜெயலலிதாவால் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த அசைமெண்ட், சோசியல் மீடியாவிலும், பப்ளிக்கிலும் மிகவும் பாப்புலரான அ.தி.மு.க. நபர்களை தேர்வு செய்து பட்டியல் தயார் செய்வது. ஆனால் இவரோ, அதை செய்யாமல் மாவட்ட செயலாளர்களின் பி.ஏ.க்களிடம் தொடர்பு கொண்டு பரவலாக சில பெயர்களை கேட்டு அதனை பட்டியலாக தயாரித்து கார்டனில் சமர்ப்பித்துள்ளார். அதன் அடிப்படையில் போயஸ் கார்டனில் இருந்து பட்டியலில் உள்ளவர்களுக்கு நேர்காணலில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் குமரியில் இருந்து போனவர்களே சாமிநாதனின் பதவி பறிப்புக்கு அடித்தளமிட்டனர் என்று சொல்லப்படுகிறது.

நேற்று 1.30 மணிக்கு கார்டனுக்குள் நுழைந்த தென்மாவட்டத்தினர்களை ஜெயலலிதா நேர்காணல் நடத்தினார். அப்போது, நாகர்கோவில் தொகுதியில் டாரதி சாம்சனிடம் "உங்கள் வயது என்ன" என ஜெயலலிதா கேட்க, அவர் தவறாக சொல்லி இருக்கிறார். அடுத்து விஜயகுமார் என்பவரிடம், ''நீங்க என்ன பொறுப்புல இருக்கீங்க. வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்'' என ஜெயலலிதா கேட்க, 'எனக்கு கன்னியாகுமரி தந்திங்கனா கண்டிப்பா ஜெயிப்பேன். பொறுப்புல இல்ல ஆனா ஓ.பி.எஸை தெரியும்' என்று கூறி இருக்கிறார்.

அடுத்து குளச்சல் தொகுதி சேவியர் மனோகரனிடம், ''கடந்த எம்.பி. தேர்தலில் எவ்வளவு ஓட்டு அ.தி.மு.க. வாங்கியது?" என ஜெயலலிதா கேட்க, பதில் தெரியாமல் விழித்துள்ளார். சிவ.செல்வராஜனிடம், ''நீங்க எம்.பி. தேர்தல்ல என்ன பொறுப்புல இருந்தீங்க?" என ஜெயலலிதா கேட்க, மாவட்டச் செயலாளர் என்று சொல்லியுள்ளார். உடனே நீங்க போகலாம் என அனுப்பியுள்ளார். விளவங்கோடு தொகுதிக்காக போன அ.தி.மு.க. முக்கிய பிரமுகர் ஜெயலலிதாவிடம் கண்ணீர் விட்டு கதறி அழுததுடன், மாவட்டச் செயலாளர் தளவாய்சுந்தரம் மீது அடுக்கடுக்கான புகார்களை அள்ளி வீசிவிட்டு வந்துள்ளார்.

பத்மநாபபுரம் தொகுதியில் ஜெங்கீன்ஸிடம், ''என்ன பொறுப்புல இருந்தீங்க?" என ஜெயலலிதா கேட்க, 'மாவட்டச் செயலாளரா இருந்தேன், இப்போது ஒன்றிய செயலாளராக இருக்கேன்' என்று கூறி இருக்கிறார். உடனே ஜெயலலிதா, ''எதற்காக மாவட்டச்  செயலாளர் பதவியில் இருந்து உங்களை மாற்றி இருக்கிறார்கள்?" என கேட்க, ''எனக்கு தெரியாது, பிரிந்த மாவட்டத்தை ஒண்ணா சேர்த்து தளவாய்சுந்தரம் மாவட்டச் செயலாளர் ஆகிட்டாரு" என்று சொல்லி இருக்கிறார்.

இதுபோல பலரும் கட்சியில் என்ன நடக்கிறது என்று தெரியாமலே பதில் சொல்லியுள்ளனர். இதில் யாரும் சமூக வலைத்தளங்களிலோ, பொதுமக்களிடம் மதிப்பை பெற்றவர்களோ இல்லை. பலருக்கு ஃபேஸ்புக் அக்கவுண்ட் கூட இல்லை. இதனால் அப்செட் ஆன ஜெயலலிதா, தவறான நபர்களின் பட்டியலை தயாரித்துக் கொடுத்த அஸ்பயர் சாமிநாதனை அப்பதவியில் இருந்து தூக்கியெறிந்துள்ளார் என கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- த.ராம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ