Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எல்லா கேள்விக்கும் சிரிப்பே பதில்- ஓபிஎஸ் மவுனத்தின் மர்மம் இதுதான்!

திமுக ஐவர் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்... வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்... என ஓ.பன்னீர்செல்வத்தை சுற்றித்தான் தமிழகத்தின் அண்மைகால செய்திகள் இருந்து வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட சட்டமன்ற தேர்தல் பரபரப்பையும் மீறி,  பெரும் முக்கியத்துவத்தை பெரும் அளவுக்கு டாக் ஆப் தி ஸ்டேட்டாக இருந்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.
 

ஆனால் இத்தனை பரபரப்புக்கும் மத்தியில், எந்த சலனமும் இல்லாமல், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தனது அம்மாவை (பெற்றெடுத்த அம்மாவை சொல்கிறோம்)  மருத்துவமனையில் அனுமதித்து அவரை கவனித்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். இவரது தாயார் பழனியம்மாளுக்கு வயது 86. பித்தப்பையில் கற்கள் இருந்ததால் கணையத்தில் அலர்ஜி ஏற்பட்டு, தீவிர வயிற்று வலியில் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 16-ம் தேதி தனது தாயாரை அனுமதித்தார் ஓ.பன்னீர்செல்வம்.

இந்த திடீர் வருகை, பெரும் சந்தேகத்தை கிளப்பியது. பொள்ளாச்சி வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. ஆனால் மறுபுறம் அமைதியாய் மருத்துவமனைக்கு அவ்வப்போது சென்று,  தனது அம்மாவை கவனித்து வந்தார் ஓ.பன்னீர்செல்வம். பழனியம்மாளுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், அவருக்கு ஏற்கனவே நுரையீரல், இருதயத்தில் சில பிரச்னைகள் உள்ளதால், மருத்துவ கவனிப்பில் ஓரிரு நாள் வைத்து பின்னர் அறுவை சிகிச்சை செய்யலாம் என மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து மீண்டும் சென்னை சென்றார் ஓ.பன்னீர்செல்வம்.
 

இந்நிலையில் நேற்று பழனியம்மாளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பித்தப்பை கற்கள் அகற்றப்பட்டன. இதையடுத்து இன்று காலை கோவை வந்த பன்னீர்செல்வம், மருத்துவமனை சென்று தனது அம்மாவை சந்தித்தார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இன்னும் ஒரு நாள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து நாளை பழனியம்மாள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். நாளை தனது அம்மாவை பன்னீர்செல்வம் விமானம் மூலம் சென்னை அழைத்து செல்ல உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இன்று கோவை வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் கட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் கேள்வி கேட்க, அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் சிரித்தபடியே சென்றார் ஓபிஎஸ். கட்சியின் தற்போதைய நிலை, அம்மாவின் உடல்நிலை என செய்தியாளர்களின் எந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை. புன்னகை மாறாமல் நடந்து சென்று, காரில் ஏறி புறப்பட்டார்.

-ச.ஜெ.ரவி

படங்கள்: தி.விஜய்

எடிட்டர் சாய்ஸ்