Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அம்மாவை ஏமாற்றுகிறார் தளவாய் சுந்தரம்... குமுறும் குமரி அ.தி.மு.க.வினர்!

ன்னியாகுமரி மாவட்ட அரசியலை வைத்து தமிழ்நாடு அரசியலை கணித்துவிடலாம். மாநில கட்சிகளுக்கு நிகராக தேசிய கட்சிகளின் பலம் பொருந்திய மாவட்டம் குமரி. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் எந்த கட்சி வெற்றிப் பெறுகிறதோ அந்த கட்சி தான் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும். அதுபோலவே கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் எந்த கட்சி ஜெயிக்கிறதோ அதுவே மத்தியில் ஆட்சி அமைக்கும் என்கிற சென்டிமெண்ட் காலங்காலமாக நடந்து வருகிறது.

அ.தி.மு.க.வில் அதிரடிகள் சில வாரங்களாக தொடர்கிறது. அதன் தொடர்ச்சியாக ஓ.பி.எஸ்., நத்தம் விசுவநாதன் என இரண்டாம் கட்ட தலைவர்களாக வலம் வந்தவர்களும் ஓரங்கட்ட பட்டுவிட்டனர். இதேபோல், பல ஆண்டுகளுக்கு முன் அமைப்பு செயலாளர், அமைச்சர், குமரி மாவட்ட செயலாளர் என அ.தி.மு.க.வில் வலம் வந்தவர் தளவாய்சுந்தரம். பின்னர், ஜெயலலிதாவால் ஓரங்கட்டபட்டு பதவிகளை இழந்தார். அதன் பின் சென்னையிலேயே தங்கி இருந்தவர், கட்சி நிகழ்வுகளில்கூட பெரும்பாலும் கலந்துக்கொள்ளாமல் இருந்தார்.

இதை தொடர்ந்து, குமரி அ.தி.மு.க. பச்சைமால் வசமானது. அவரும் சில காலங்களில் பதவிகளில் இருந்து ஜெயலலிதாவால் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கிள்ளியூர் தொகுதிக்கு பொறுப்பாளராக மீண்டும் ரீஎன்ட்டீரி ஆனார் தளவாய்சுந்தரம். அடுத்து ஓ,பி.எஸ்-ன் துணையோடு குமரி மாவட்ட செயலாளர் பதவிக்கும் வந்தார். பதவி பெற்ற தொடக்கத்தில் அதிரடியாக செயல்பட தொடங்கியவர், பச்சைமாலின் கூடாரத்தையும் காலி செய்ய தொடங்கினார். வரும் சட்டமன்ற தேர்தலுக்கு சீட் பேரம் நடத்தி பல கோடிகளை ஓ.பி.எஸ். அணியிடம் கைமாற்றியுள்ளார் தளவாய்சுந்தரம் என அ.தி.மு.க. வட்டாரத்தில் பரவலாக பேச்சு அடிப்படுகிறது.

தற்போது, அ.தி.மு.க. நேர்காணலில் ஐ.டி.விங் செயலாளர் சாமிநாதன் கொடுத்த பட்டியலில் குமரிக்கு தளவாய்சுந்தரம் சொன்ன பெயர்களே இருந்தாக சொல்லப்படுகிறது. குமரியில் உள்ள ஆறு தொகுதிகளில், கன்னியாகுமரியை தவிர்த்து மீதமுள்ள ஐந்து தொகுதிக்கு மட்டும் நேர்காணலுக்கு அ.தி.மு.க.வினர் அழைக்கப்பட்டனர்.

தற்போது கன்னியாகுமரி தொகுதிக்கு ஒன்றிய செயலாளர் தம்பி தங்கம், பாலஜனாதிபதி, பி.சி.அன்பழகன் என மூவர் அழைக்கப் பட்டுள்ளனர். தம்பிதங்கத்தின் உறவினர்கள் கன்னியாகுமரியில் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து வளைத்து போடுட்டு கட்டடம் கட்டுவதாகவும், இதற்கு தம்பிதங்கமும் உடந்தையாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குமுறுகிறார்கள்.

பாலஜனாதிபதி, ''சில மாதங்களுக்கு முன்பே, அம்மா என்னிடம் பேசிட்டாங்க. குமரியில ஆறு தொகுதியில ஒன்னு நீங்க நில்லுங்க, மிச்சம் ஐந்துக்கும் ஆள் பாருங்க என சொன்னாங்க" என்று தனக்கு நெருக்கமான அ.தி.மு.க.வினரிடம் சொல்லி வந்துள்ளாராம். பி.சி.அன்பழகனின் தந்தை குமரி மாவட்ட தி.மு.க.வின் பொருளாளராக இருந்தவர். பி.சி.அன்பழகன் மீது செக் மோசடி புகார்கள் பல உள்ளன. இவர், சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பலரை ஏமாற்றியதாகவும் அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர்.

இவர்கள் தான் தற்போது நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்கள். இதுவரை தனக்கு தான் கன்னியாகுமரி தொகுதி என தேர்தல் பணிகளை தொடங்கிய தளவாய்சுந்தரத்திற்கு இது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. தனக்கு சீட் இல்லை என புரிந்து கொண்ட தளவாய்சுந்தரம், அடுத்த மூவ்வாக பா.ஜ.க. சார்பில் போட்டியிட விருப்பமனு கொடுத்திருக்கும் நகர்மன்ற தலைவர் மீனாதேவுக்கு ரகசிய ஆதரவு கொடுப்பார் என்று அ.தி.மு.க.வினராலேயே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் மீனாதேவ், தளவாய்க்கு உறவினராம்.

தனக்கு கீழ் உதவியாளராக இருந்தவர்கள் ஜெயித்து பதவிக்கு வருவதை தளவாய்சுந்தரம் விரும்பமாட்டார். அவர், தான் மட்டுமே ஜெயிக்க வேண்டும், மற்றவர்கள் தோற்க வேண்டும் என நினைக்கிறாரோ, இல்லை தி.மு.க.வின் வெற்றிக்கு குமரியில் வழிவகுக்கிறாரோ என்னவோ தெரியவில்லை. ஆனால், அம்மாவை தளவாய்சுந்தரம் ஏமாற்றத் தொடங்கிவிட்டார். இனி குமரி மாவட்டத்தில் அ.தி.மு.க. ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறுவது மிகவும் கடினம்தான். மொத்தத்தில் தி.மு.க. வெற்றியை தளவாய்சுந்தரம் உறுதி செய்துவிட்டார் என இப்போதே புலம்பத் தொடங்கிவிட்டனர் குமரி அ.தி.மு.க.வினர்.

- த.ராம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ