Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி இணைந்தது: பரபரப்பு பின்னணி தகவல்கள்

மிழக அரசியலில் மிக முக்கியமான காலகட்டம் இது.வரும் 2016 சட்டமன்ற தேர்தலுக்கு,  எந்தக் கட்சி யார் தலைமையில் உள்ள கூட்டணியில் இணையும் என்பது கடந்த ஒரு மாதமாக பெரும் பரபரப்புடன் கூடிய விவாதத்தை உண்டாக்கி வந்தது. அதிலும் விஜயகாந்த் எந்தக் கூட்டணிக்குச் செல்வார் என்று ஊடகங்களைக் காட்டிலும் திமுக தலைவர் கருணாநிதி அவ்வப்போது புதிய கணிப்புகளைக் கூறிவந்தார்.ஆனால் இறுதி வரை தேமுதிக அவர் பக்கம் சேராமலே மக்கள் நலக் கூட்டணி பக்கம் இணைந்துவிட்டார். கடைசியில் பழம் பாலில் விழாமல் தேனில் விழுந்துவிட்டதாக ஆர்ப்பரிக்கிறார்கள் மக்கள் நலக் கூட்டணியினர்.

கடந்த  வாரமே,விகடன்.காம் செய்திகள் இணையதளத்தில்,  தேமுதிக மக்கள் நலக் கூட்டணியில்தான்  இணையும் என்று கணித்தும்,விஜயகாந்த் தலைமையில் மெகா கூட்டணி உறுதியாகிறது என்றும் செய்திகள் வெளியாகி இருந்தது. அதன்படியே தற்போது மக்கள் நலக் கூட்டணி,  விஜயகாந்துடன் கைகோர்த்துள்ளது.  இது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


அதிமுக, திமுக அணிகள்  உண்மையிலேயே இந்தத் தேர்தலில் அதிர்ச்சி அடைந்துதான் இருக்கின்றன. முதன் முதலாக தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக , விடுதலைச் சிறுத்தைகள்,தேமுதிக ஆகியவை ஆண்ட மற்றும் ஆளும் கட்சியான திமுக, அதிமுகவை எதிர்த்து ஒரு புதிய களத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இது தமிழகத்தைப் பொறுத்த வரை  மிகப் பெரிய சாதனைதான்.

இந்தக் கூட்டணி அமைய வைகோ, ஜி.ராமகிருஷ்ணன்,முத்தரசன்,திருமாவளவன் எடுத்துக்கொண்ட முயற்சிகள் வீண் போகவில்லை. திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்று அணி உருவாக்குவதில்  வெற்றி கண்டு இருக்கிறார்கள் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இத்தோடு மட்டும் நில்லாமல், வாக்காளர்களிடம் நம்பிக்கையை உருவாக்கும் வகையிலான மாற்று பிரசாரம், பூத்  கமிட்டிகளை ஏஜெண்டுகளை அமைப்பதில் தீவிரம்,ஓட்டுக்கு பணம் கொடுப்பதைக் கண்காணிக்கும் குழுக்கள் அமைப்பது என்று பல்வேறு அதிரடிகளை மக்கள் நலக் கூட்டணி மற்றும் தேமுதிக கையாள உள்ளது.

இப்போதைக்கு தேமுதிக 124 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், மக்கள் நலக் கூட்டணி 110 தொகுதிகளில்  போட்டியிடுவது  என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த அணியில் ஜி.கே.வாசன், ஐ.ஜே.கே., புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றால்,மக்கள் நலக் கூட்டணி தங்களின் தொகுதிக் கணக்குகளை மாற்றிக் கொள்ளும் என்றும் கூறப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தைகள் இன்னமும் நடந்து கொண்டுதான் உள்ளன.

தமிழகம் முழுவதும் ஒரு கோடி இளைய தலைமுறை வாக்களர்களை இணைக்கும் பணியில் தீவிர மாகியுள்ள மக்கள்  நலக் கூட்டணி, விஜயகாந்துடன் இணைந்துள்ளதால் மேலும் உற்சாகமாகி தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.  

- தேவராஜன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ