Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மோடி கை காட்டினால்தான் விஜயகாந்த்தே முதல்வர்'- தமிழிசை தடாலடி பேட்டி

மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக இணைந்ததாக இன்று (23.03.2016) காலை 11 மணிக்கு தேமுதிகவின் தலைமை நிலையத்தில் இருந்து கூட்டறிக்கை வெளியானதும், தமிழக அரசியலில் மீண்டும் புதிய பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இதற்கு முன்னர் தேமுதிக கூட்டணிக்கு முயற்சித்த திமுக தரப்பிலும், பாஜக தரப்பிலும் பல்வேறு விதமான விமர்சனங்கள் விழத் தொடங்கியிருக்கின்றன. தேமுதிகவை , பாஜக கூட்டணியில் கொண்டு வருவதற்காக கஜினிமுகம்மது கணக்காக தொடர்ந்து படையெடுத்த பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ரியாக்‌ஷன் எப்படி? விகடன் இணையத்துக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி:
 

நீங்கள் சற்றும் எதிர்பாராத முடிவாக அமைந்து விட்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

எங்களுக்கு இதில் பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை என்பதையே முதல் கருத்தாக சொல்லி விடுகிறேன். பாரதிய ஜனதா கட்சியானது, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மிகப்பெரிய தேர்தல் சக்தியாக தமிழக தேர்தல் களத்தில் இறங்கும். எங்களைப் பொறுத்தவரை எங்கள் மோடி யாரை சுட்டிக் காட்டுகிறாரோ அவர்தான் தமிழக முதல்வர்.

நான்குபுறமும் மெகா கூட்டணியாக இருக்கிறதே?

இருக்கட்டுமே... தேர்தல் களத்தில் இருக்கும் எந்த அரசியல் கட்சிகளுக்கும் பாரதிய ஜனதா குறைந்தது அல்ல. பாரதிய கட்சியின் தலைமையில் தேர்தலை சந்திக்கிறோம் என்ற பெருமையில் நாங்கள் இருக்கிறோம். 50 லட்சம் உறுப்பினர்களை தமிழ்நாட்டில் சேர்த்திருக்கிறோம். 13 மாநிலங்களில் ஆளுங்கட்சியாக எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் சொல்ல முடியாத கட்சியாக வலம் வந்து கொண்டிருக்கிறோம். மத்தியில் பெரும்பான்மையாக ஆட்சியில் இருக்கிறோம். மக்கள் நலக் கூட்டணிக்கு மாற்றம் ஏற்படப் போவதில்லை, ஏமாற்றம் தான் கிடைக்கப் போகிறது.

தேமுதிக உங்களோடு இணைந்தால் அதிக பலம் என்றுதானே தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தீர்கள்?


அவர் வரவேண்டும் என்றுதான் நினைத்தோம், பேச்சு வார்த்தை நடத்தினோம். எங்களோடு விஜயகாந்த் அவர்கள் இணைந்திருந்தால் பலம் பெற்றிருப்பார்.  இப்படி ஒரு முடிவை எடுத்ததின் மூலம் அவருடைய அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய பிழையை அவர் செய்திருக்கிறார். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. பாரதிய ஜனதாவுடன் விஜயகாந்த் வந்திருந்தால் அவர் தமிழகத்தில் ஆட்சியமைக்க வாய்ப்பு இருக்கிறது, மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கிறது. தமிழக மக்களுக்கு அவர் என்னென்ன நல்லது செய்ய முடியும் என்று நினைக்கிறாரோ அதை உடனுக்குடன் செய்ய முடியும். இதையெல்லாம் அவர் நினைக்கத் தவறி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
 

நால்வர் அணி, ஐவர் அணியாகி விட்டபின் அந்தக் கூட்டணி பலமானதாகத்தானே இருக்கும்? அந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டு விட்டாரே?

மக்கள் நலக் கூட்டணியில் மக்களின் அறிமுகம், பின்புலம் கொண்ட தலைவர்கள் என்று யாரும் கிடையாது. அங்கே மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்கள் என்று யாரும் இல்லை. அந்தக் கூட்டணியில் இடம் பிடித்திருக்கும் இரண்டு கம்யூனிஸ்ட்டுகளும் ஊழலைப் பற்றி பேச முடியாது. அவர்கள் இருவருமே ராஜ்ய சபா சீட்டுக்காக கழகங்களிடம் மாறி மாறி கதறியவர்கள்தான். அதே போல் காங்கிரஸ் தயவுடன் வென்றவர்தான்  திருமாவளவன். யாருக்கும் அங்கே தனித்த அடையாளம் என்று ஒன்றுமில்லை. இந்த கூட்டணி யாருக்கும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. யாருடன் கூட்டணி சேர்கிறோம் என்பது முக்கியம். நாங்கள் தேமுதிகவுடன் கூட்டணி சேர முயற்சித்ததுக்கும் மற்றவர்கள்  முயற்சித்ததுக்கும் வித்தியாசம் உண்டு. முதல்வர் வேட்பாளர் என்ற வெறும் அறிவிப்பிலும், கனவு வார்த்தையிலும் மயங்கி மக்களுக்காக சேவை செய்யும் வாய்ப்பை தேமுதிகவும் இழந்து விட்டது, பாமகவும் இழந்து விட்டது.

நாங்கள் புதிதாக கூட்டணிக்கு முயற்சிக்கவில்லை. கழகங்களுக்கு மாற்றாக 19.5 சதவீதம் வாக்குகளை இந்தக் கூட்டணி பெற்றது என்பது சாதாரண விஷயமில்லை. பாமகவும், தேமுதிகவும் மக்களுக்கான முக்கியத்துவம் குறித்து கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை. வெற்றியின் மூலம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டு முதலமைச்சராக வரும் எண்ணம் இல்லை. முதலமைச்சர் வேட்பாளர் என்ற பிரம்மையான அறிவிப்பு ஒன்றிற்கே அவர்கள் ஆசைப்பட்டு விழுந்திருக்கிறார்கள். வெற்றி பெற முடியுமா என்றால், முடியாது. இது அப்பட்டமான சுயநலத்தின் வெளிப்பாடு என்றுதான் சொல்ல வேண்டும்.
 

பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

வைகோ அவர்கள் நாங்கள் பஞ்சபாண்டவர்கள் என்று மக்கள் நலக் கூட்டணி மேடையில் வைத்துச் சொன்னதே எங்கள் கொள்கைகளுக்கான முதல் வெற்றி. இவர்களே இதற்கு முன்பெல்லாம் மகாபாரதத்தை, ராமாயணத்தை எவ்வளவு இழிவாக பேசியுள்ளார்கள் என்று மக்களுக்குத் தெரியும். அப்படிப்பட்டவர்கள் இப்போது எங்கள் கொள்கையை நோக்கி ஓடிவருவதே அவர்களுக்கான முதல் சறுக்கல், எங்களுக்கான முதல் வெற்றி. இந்து மதத்திலிருந்து உதாரணம் காட்டவேண்டிய நிலைக்கு அவர்கள் போயுள்ளனர். பாஜகவின் அடிப்படைக் கொள்கை வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே திமுகவில் இருப்பவரில் 80 சதவீதம் பேர் இந்துக்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறும் அவசியம் ஏற்பட்டு உள்ளது. ராகுகாலம், நல்ல நேரம் என்றெல்லாம் பார்த்து பங்குனி உத்திரம், பூரண பவுர்ணமியில் கூட்டணி அறிவிப்பை வெளியிடுகிற அளவிற்கு திராவிடக் கட்சிகளும் கம்யூனிச மேதைகளும் போயிருப்பது எங்களுக்கான வெற்றியை உறுதி செய்திருக்கிற ஒன்றாகவே இதைப் பார்க்கிறோம்.
 
திமுகவுக்குதான் இது மிகப்பெரிய ஏமாற்றம். பழம் கை நழுவிப் போயிருக்கிறது. காங்கிரசுடன், திமுக கூட்டணி சேர்ந்தும்  இன்னும் ஒரு அடி கூட முன்னே எடுத்து வைக்காமல் தேமுதிக வரவை எதிர்பார்த்து காத்திருந்தது. அவரோடு அரசியல் ஞானி குஷ்பூவும் எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தார். கதை இப்படி மாறிப் போனதில் அதிமுகவுக்குத்தான் லாபம். சில மாவட்டங்களில் மட்டும் பலம் பெற்றிருக்கும் பாமகவின் அன்புமணி, ஒரு மாநிலத்துக்கே முதல்வர் ஆக முடியாது. இன்றைக்கு ஒரு மாற்று சக்தியாக  பார்த்தால் அது பாஜகதான். இதற்கு முன்னால் பாஜக தமிழகத்தில் வெற்றி பெற்றிருக்கிறதா என்று கேள்வியை நாங்கள் புறந்தள்ளுகிறோம். அரியானாவில் மக்கள் எப்படி மாற்றத்தைக் கொடுத்தார்கள்? நாங்கள் மாநிலங்களில் வளர்ச்சியைக் கொடுத்துள்ளோம். இதுவரையில் 600க்கு மேற்பட்ட தேர்தலை எதிர் கொள்ளும் பயிற்சி முகாம்களை முடித்துள்ளோம். எங்கள் பணி எப்போதோ தொடங்கி விட்டது. தமிழ்நாட்டில் இதுவரை 50 லட்சம் உறுப்பினர்களுக்கு மேல் சேர்த்துள்ளோம்.

கூட்டணிக்காக யாரிடமும் இதுவரையில் எந்தவித சமரசமும் ஏற்படுத்திக் கொள்ளாமல் தலை நிமிர்ந்து எங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளோம். வேறு சில அமைப்புகளும், கட்சிகளும் எங்களோடு இணைப்பில் உள்ளன.  பாஜகவில் போட்டியிட இரண்டே நாட்களில் மூன்றாயிரம் பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். அதில் பெண்கள் மட்டுமே 300 பேர். ரிசர்வ் தொகுதிகளில் 5 முதல் 7 பேர் வரையில் மனு தாக்கல் செய்துள்ளனர். 1 கோடியே 40 லட்சம் பேர் அதிமுகவை விட அதிக ஆதரவு பெற்ற கட்சியாக உள்ளோம், முகநூலில் போய்ப் பாருங்கள் உண்மை தெரியும். எங்கள் வெற்றி உறுதியானது, கவுரவமானது.

-ந.பா.சேதுராமன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close