Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேமுதிக கூட்டணி எதிரொலி: நேர்காணலை தள்ளிவைத்த ஜெயலலிதா!

க்கள் நலக் கூட்டணியோடு தேமுதிக ஐக்கியமானதால்,  தேமுதிகவோடு கூட்டணி என்ற முனைப்பில் இருந்த பாஜக, திமுக போன்ற கட்சிகளின் ஏரியாவிலிருந்து ரியாக்‌ஷன்கள் விதவிதமாய் வந்து கொண்டிருக்கின்றன.

அதிமுக தரப்பில் அது பற்றி எந்த ' டாக்'கும் ஓடவில்லை.  அக்கட்சியின் சி.ஆர். சரஸ்வதி மட்டும் " அதிமுகவின் வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஒன்று" என்று  தெரிவித்தார்.


அதையும் தாண்டி என்பார்களே, அதுபோல விஜயகாந்தின் இந்த ' கூட்டணி முடிவு'  வெளியான பின், அதிமுக ஏரியாவில் ஒரு விஷயம் சைலண்ட் ரியாக்‌ஷனாக வெளிப்பட்டிருக்கிறது. இன்று நடப்பதாக இருந்த  தேனி, சிவகங்கை, மதுரை மாவட்டங்களுக்கான வேட்பாளர் நேர்காணல்,  தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.


குறிப்பிட்ட மூன்று மாவட்டங்களில் இருந்து சென்னை நேர்காணலுக்கு வந்திருந்த ர.ர.க்கள் , இந்த திடீர் ஒத்திவைப்பு ஏன் என்று புரியாமல் குழப்பமான மனநிலையோடு,  தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல்களுக்கே திரும்பப் போய் விட்டனர்.

'தேமுதிக, திமுகவோடு போகக்கூடாது என்பதுதானே உங்கள் நிலைப்பாடு? பிறகு ஏன் நேர்காணலை கேன்சல் செய்யும் அளவிற்கு குழப்பநிலை?'-  கட்சி ஏரியாவில் கேள்வியைப் போட்டேன்.

" இன்று கார்டனில், முதல்வரை சந்திக்க  மூன்று பேருக்குத்தான் அப்பாய்ன்ட்மென்ட்டே கொடுக்கப் பட்டிருந்தது. ஐ.டி. விங்கில் மாநிலச் செயலாளராக போஸ்டிங் போடப்பட்ட ராமச்சந்திரன், தர்மபுரி மாவட்டச் செயலாளர்  பொறுப்பில் போடப்பட்டிருக்கும் கே.பி.அன்பழகன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் ஆகியோர்தான் அந்த மூவர்.

சொன்னபடி அந்த மூவரையும் முதல்வர் பார்த்து விட்டார்.  இன்று நடப்பதாக இருந்த  தேனி, மதுரை, சிவகங்கை மாவட்டத்துக்கான நேர்காணல் திடீரென்று தள்ளி வைக்கப்பட்டு விட்டது உண்மைதான்.  கார்டனில் நேரில் வந்து அம்மாவை (ஜெ.வை)ப் பார்த்து ஆதரவு தெரிவிப்பதாக சொல்லியிருந்த 50 அமைப்புகளையும், கட்சியின் தலைமை நிலையத்தில் வைத்து நிர்வாகிகளை சந்திக்க சொல்லி அனுப்பி வைத்து விட்டார்கள்.

இது, விஜயகாந்தின் கூட்டணி  அறிவிப்பால் ஏற்பட்ட பாதிப்பு இல்லை.

அடுத்தக்கட்ட  தேர்தல் வேலையை  எப்படிக் கொண்டு போய் வேகப்படுத்துவது என்பதை திட்டமிடவே கொஞ்சம்  இடைவெளி. மற்றபடி நாங்கள் நினைத்ததுதான் நடந்திருக்கிறது. திமுகவுடன் விஜயகாந்த் போயிருந்தால் மட்டுமே  கொஞ்சம் பாதிக்கப்பட்டிருப்போம், ஆனாலும் பெரிய இழப்பு  ஒன்றும் ஏற்பட்டு விடப் போவதில்லை.

சரத்குமாருடைய சமத்துவ மக்கள் கட்சி கோபித்துக் கொண்டு போயும் இங்கேதான் வெற்றி கிடைக்கும் என்று திரும்பி விட்டதால் அவருக்கு ஒரு சீட் உறுதி. அதேபோல் அம்மாவுக்காக சில பல தியாகங்களை செய்த எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.ஏ.வின் சமத்துவ மக்கள் கழகத்துக்கும் ஒரு சீட் உறுதி. சரத்குமார் திரும்ப வராமல் போயிருந்தால் இன்னொரு சீட் எர்ணாவூர் நாராயணனுக்குப் போயிருக்கும் "என்றனர்.

கார்டனின்  அழைப்பை எதிர்பார்த்து,  ஏக்கத்துடன் அந்த பகுதியில் அடிக்கடி தென்படும் தலைகளில் ஒன்று, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவரான வேட்டவலம் மணிகண்டன்தான்.

விவசாயிகளின் போராளி நாராயணசாமிக்கு கோவையில் மணிமண்டபம், குண்டுகளுக்கும், அடக்கு முறைக்கும்  உயிரிழந்த  விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா 5 லட்சரூபாய் இழப்பீடு என்று ஜெயலலிதா விடம் கோரிக்கை மேல் கோரிக்கைகளாக வைத்து அதை சாதித்துக்கொண்டவர் வேட்டவலம் மணி கண்டன். 1991 முதல் அவர் ஜெ.விடம் விடாமல்  வைத்து வரும்  எம்.எல்.ஏ. சீட் கோரிக்கை மட்டும் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறதாம்.

வருகிற 25-ம் தேதி  நேரில் வரும்படி ஜி.கே.வாசன், ஜான்பாண்டியன், ஜெகன்மூர்த்தி, ஶ்ரீதர் வாண்டையார் உள்ளிட்ட  சில கட்சித் தலைவர்களுக்கு மட்டும் கார்டனில் இருந்து அழைப்பு போய் இருக்கிறது என்கிறார்கள்.

- ந.பா.சேதுராமன்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ