Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போடி தொகுதியை குறிவைக்கிறார் ஜெயலலிதா...? -ஓ.பி.எஸ்ஸை சீண்டும் எதிர் கோஷ்டி!

'யானை இளைச்சா, எறும்புகூட எட்டிப் பார்க்குமாம்' என்ற டயலாக் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ரொம்பவே பொருந்தும். சொந்த தொகுதிக்குள் அவரால் தலைகாட்ட முடியாத அளவுக்கு எதிர் கோஷ்டிகள் செய்யும் அரசியலால் நொந்து போயிருக்கிறார் ஓ.பிஎஸ்.

தேனி மாவட்டம், போடியில் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி கட்சி சார்பில் இலவச திருமணங்களை நடத்தி வைத்தார் ஓ.பி.எஸ். அதன்பின்னர் அவருக்கு ஏற்பட்ட நெருக்கடிகளால் கார்டனைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார். அவரது ஆதரவாளர்கள் நான்கு பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது சென்னை, மத்திய குற்றப் பிரிவு போலீஸ். அதிகாரத்தில் இருந்தபோது, சொந்த மாவட்டத்தில் தனக்கு எதிரான அணியை ரொம்பவே மட்டம் தட்டி வைத்திருந்தார் ஓ.பி.எஸ். இதில் மிக முக்கியமானவர் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ தங்க.தமிழ்செல்வன்.

'வருகிற 23ம் தேதி தேனி மாவட்ட அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பி.எஸ் பங்கேற்பார்' என அறிக்கை வெளியிட்டார் தமிழ்ச்செல்வன். அதற்கு முதல்நாள்தான் கார்டனில் ஜெயலலிதாவைச் சந்தித்து தன்னிலை விளக்கம் கொடுத்துவிட்டு வந்திருந்தார் ஓ.பி.எஸ். 'இந்த அறிக்கையே ஓ.பி.எஸ்ஸை கலாய்க்கத்தான் கொடுத்தார் தமிழ்ச்செல்வன். என்ன ஆட்டம் போட்டாங்க அந்த குரூப். இப்படி திரும்புவாங்களாம், அப்படி குனிவாங்களாம், மண்ல புரண்டு அங்கப் பிரதட்சனம் பண்ணுவாங்களாம். முடியலைடா சாமி' என ஆதங்கப்படுகின்றனர் போடி அ.தி.மு.கவினர்.


தேனி மாவட்ட கூட்டத்தில் பங்கேற்றால், 'கட்டாயம் அவமானப்படுத்துவார்கள்' என்பதால் கூட்டத்தைத் தவிர்க்கும் முடிவில் இருந்தார் ஓ.பி.எஸ். ' தேர்தல் நேரத்தில் நடக்கும் முக்கியமான ஆலோசனைக் கூட்டம் இது. கட்டாயம் ஓ.பி.எஸ் பங்கேற்பார்' என அவரது ஆதரவாளர்கள் கூறிவந்தனர். இதில், முதல்கட்டமாக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில், ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமாரின் பெயரை சிறிய அளவில் அச்சிட்டிருந்தனர். மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறையின் செயலாளர் பெயரை இந்தளவுக்குத்தான் அச்சிட வேண்டுமா? என ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கொந்தளித்தாலும், எதிர்த்துக் கேள்வி கேட்க முடியவில்லை. நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர் உதயகுமார், தேனி எம்.பி பார்த்திபன், மாவட்டச் செயலாளர் சிவக்குமார், ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் ஓ.பி.எஸ் மகனை பெயரளவுக்குக்கூட ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. சால்வை அணிவிப்பு நிகழ்வுகளில் இருந்து தள்ளியே வைக்கப்பட்டார் ரவீந்திரநாத் குமார். நேற்று முன்தினம் மதியம் பெரியகுளம் பாலசுப்ரமணியசாமி கோவில் தேரோட்டத்தில் கலந்து கொண்ட ஓ.பி.எஸ், அன்று இரவே அவசரம், அவசரமாக சென்னை திரும்பிவிட்டார். தங்க.தமிழ்ச்செல்வன் கூட்டத்தையும் ஓ.பி.எஸ் புறக்கணித்தார்.

இதுபற்றி நம்மிடம் பேசிய தேனி மாவட்ட அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், " அம்மாவின் குட்புக்கில் இருந்து மட்டுமல்ல, போடி தொகுதி மக்களும் ஓ.பி.எஸ் மீது கடும்கோபத்தில் இருக்கிறார்கள். ரங்கநாதபுரம், கரட்டுப்பட்டியில் ஓ.பி.எஸ் பெயரைச் சொன்னாலே மக்கள் கொந்தளிப்பார்கள். தொகுதிக்கென்று எதையுமே அவர் செய்யவில்லை. பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பி.எஸ் பங்கேற்றால் சண்டை போடுவதற்குத் தயாராக இருந்தோம். அதைத் தெரிந்து கொண்டு திட்டமிட்டு கூட்டத்தைப் புறக்கணித்தார் ஓ.பி.எஸ். தொகுதிக்குள், சாலைகளை பளபளப்பாக்குவேன், குடிநீர் வசதிகளை சீர்படுத்துவேன் என அவர் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஓ.பி.எஸ் குடும்பத்தின் ஆதிக்கம் இப்போதுதான் குறைந்திருக்கிறது. இதனால் பெரும்பாலான கட்சிக்காரர்கள் நிம்மதியாக இருக்கிறோம். இதில், சொல்ல வேண்டிய முக்கிய விஷயம் ஒன்றும் இருக்கிறது.

இந்தமுறை போடி தொகுதியில் முதலமைச்சர் அம்மா போட்டியிட வேண்டும் என்பதை கட்சி நிர்வாகிகள் அனைவரும் விரும்புகிறோம். 1989-ம் ஆண்டு போடி தொகுதியில் அம்மா போட்டியிட்டார். அதன்பிறகு, 2002 மற்றும் 2006-ம் ஆண்டு ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டார். அவருக்கு மிகவும் ராசியான தொகுதி இதுதான். சமீபத்தில், போடி தொகுதிக்குட்பட்ட பழனிசெட்டிப்பட்டியில் அ.தி.மு.க தலைமை அலுவலகம் திறந்தோம். அதிக பொருட்செலவில் நவீன வசதிகளுடன் இந்த கட்டடம் இருக்கிறது. அம்மா தங்குவதற்கு ஏற்ற வகையில் அனைத்து வசதிகளுடன் இந்த பங்களா இருக்கிறது. இந்தமுறை போடி தொகுதியில் அம்மா போட்டியிடுவார் என உறுதியாக நம்புகிறோம்" என்றார்.

தேர்தல் முடிவதற்குள் இன்னும் எத்தனை அக்னிக் குண்டங்களை ஓ.பி.எஸ் தாண்ட வேண்டியிருக்குமோ? என பதைபதைக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

-ஆ.விஜயானந்த்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close