Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஓ.பி.எஸ் சீடரின் சொத்துக்களை பறிமுதல் செய்வாரா அம்மா?' -கார்டனுக்குப் பறக்கும் பகீர் கடிதங்கள்

கொங்குமண்டலத்தில் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக கார்டனுக்குப் பறக்கும் கடிதங்களால் அதிர்ந்து கிடக்கிறது அமைச்சரின் கூடாரம். அதிலும், 'கடந்த ஐந்தாண்டுகளில் அமைச்சர் சேர்த்த இரண்டாயிரம் கோடி சொத்துக்கள் இவை' என மிகப் பெரிய பட்டியலையும் கார்டனுக்குத் தட்டிவிட்டிருக்கிறார்கள்.

தென்மாவட்ட கட்சிக்காரர்களிடம் வேட்பாளர் நேர்காணல் நடத்திக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. வரும் சனிக்கிழமை கொங்குமண்டல வேட்பாளர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட இருக்கிறது. இதில், உள்ளாட்சித் துறை  அமைச்சர் வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு வேட்பாளர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. அதேபோல், கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம் தொகுதிகளுக்கு வேட்பாளர் நேர்காணல் இல்லை. 'அங்கு சிட்டிங் எம்.எல்.ஏக்களாக இருப்பவர்களுக்கே சீட் உறுதியாகிவிட்டதால் மற்றவர்கள் வர வேண்டாம்' என கார்டன் உத்தரவிட்டுள்ளது என்கின்றனர். இதனால், கடும் அதிருப்தியடைந்த அமைச்சரின் எதிர்க்கோஷ்டி,  கார்டனுக்கு தினம்தினம் புகார்களைப் பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறது. இதுபற்றி நம்மிடம் விரிவாகப் பேசினார் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர்.


" உள்ளாட்சி நிர்வாகம், சட்டம், லஞ்ச ஒழிப்புத் துறை என பல துறைகளைக் கையில் வைத்திருக்கிறார் அமைச்சர் வேலுமணி. லஞ்சஒழிப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட வேண்டிய முக்கிய நபரே இவர்தான். கடந்த ஐந்தாண்டுகளில் அமைச்சரின் வளர்ச்சி எங்கோ போய்விட்டது. தொகுதி மக்கள் மட்டுமல்ல, மாவட்டத்தில் உள்ள அனைத்து கட்சிக்காரர்களும் வேலுமணியின் செயலால் கொதிப்பில் உள்ளனர். 2011 தேர்தலில் ராவணனின் ஆசியால் இவருக்கு சீட் கிடைத்தது. வெற்றி பெற்றதும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சராக ஆனார். ராவணன் கையசைவில்தான் ஓ.பி.எஸ்ஸின் நெருக்கத்திற்கும் ஆளானார் வேலுமணி. இதன்பிறகு கார்டனின் அதிருப்திக்கு ஆளானதால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் வேலுமணி. இதற்கடுத்து, கிணத்துக்கடவு தாமோதரனுக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் பதவி கொடுத்தார் ஜெயலலிதா. தாமோதரன் பற்றி ஏறுக்கு மாறாக புகார்களைத் தட்டிக் கொண்டே இருந்தது வேலுமணி குரூப். ஒருகட்டத்தில், மனஅழுத்தம் தாங்க முடியாமல் நெஞ்சுவலிக்கு ஆளானார் தாமோதரன். இதன்பிறகு, உள்ளாட்சி எனப்படும் வலுவான துறைக்கு அமைச்சரானார் வேலுமணி. இதற்கு முழுக் காரணமே ஓ.பி.எஸ்தான். பன்னீர்செல்வத்தின் அதிகாரப்பூர்வ சீடனாகவே வலம் வந்தார் வேலுமணி. அமைச்சருக்கு ஆல் இன் ஆல் கே.சி.பி எனப்படும் சந்திரபிரகாஷ் என்ற காண்ட்ராக்டர் மற்றும் மாணவரணி சந்திரசேகர் ஆகிய இருவர் மட்டும்தான். தவிர, அமைச்சரின் அண்ணன் அன்பு,  மாவட்டத்தில் ஆக்டிங் மினிஸ்டராகவே வலம் வருகிறார். மாநிலம் முழுவதும் அமைச்சருக்கு வசூல் செய்து கொடுப்பதற்கு என 65 பேர் இருக்கிறார்கள். இவர்களைத் தாண்டி உள்ளாட்சித் துறையில் எதுவும் நடக்காது. 12 மாநகராட்சி, 127 நகராட்சி, 324 பேரூராட்சி, 12 ஆயிரம் ஊராட்சிகளில் அமைச்சர் வேலுமணி வைத்ததுதான் சட்டம். உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் காண்ட்ராக்ட்டுகளில் முப்பது சதவீதம் கொடுத்தால்தான் எந்த வேலையும் நடக்கும். தேர்தல் நேரம் என்பதால் பில் கிளியர் செய்ய, கமிஷன் தொகையை 40 சதவீதமாக அதிகரித்துவிட்டார்கள். இதனால் மாநிலம் முழுவதும் காண்ட்ராக்டர்கள் கொதிப்பில் இருக்கிறார்கள்" என்றவர்,

" இதுவரையில் நான்கு கல்லூரிகளை அமைச்சர் தரப்பில் விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். கலையான பெயரிலும், கடவுள் பெயரிலும் கல்லூரிகளை வளைத்திருக்கிறார். தவிர, ஒரு தனியார் ஆஸ்பத்திரி, நீலகிரி, வால்பாறையில் எஸ்டேட், பொள்ளாச்சியில் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் என அனைத்து விவரங்களையும் அம்மாவின் கவனத்திற்குக் கொண்டு போயிருக்கிறோம். இந்தப் பட்டியல் எதையும் அமைச்சரால் மறைக்க முடியாது. இதுபோக, அமைச்சரின் செயலுக்கு மகுடி ஆடுகிறார் கோவை கலெக்டர் அர்ச்சனா பட்நாயக். தொடர்ந்து ஏழு ஆண்டுகள் கலெக்டராக இருப்பது இவர் மட்டும்தான். அந்தளவுக்கு ஆளுங்கட்சியின் அனைத்து செயல்களுக்கும் அனுசரித்துப் போகிறார். கொடநாட்டில் பட்டா இல்லாத நிலங்களை பட்டா லிஸ்டில் கொண்டு வந்த கைங்கர்யத்துக்காகத்தான் அர்ச்சனா இன்னும் நீடிக்கிறார். அதிகாரம், பணபலம், படைபலம் என தன்னை எதிர்ப்பவர்களே இல்லாத அளவுக்கு செய்துவிட்டார் வேலுமணி. அந்தளவுக்கு எல்லா பக்கமும் பணம் விளையாடுகிறது. இவரால் கட்சியின்  உண்மையான விசுவாசிகளுக்கு எந்தப் பலனும் இல்லை. எனவேதான், கார்டனுக்குப் புகார்களைத் தட்டிவிட்டோம். இனி அம்மாதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஆதங்கப்பட்டார் அவர்.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், தொண்டாமுத்தூர் தொகுதிக்கு தேர்தல் அலுவலராக ஆர்.டி.ஓ மதுராந்தகி என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அமைச்சருக்கு மிகவும் வேண்டப்பட்ட இந்த அதிகாரியை அமைச்சரின் சுகுணாபுரம் வீட்டிலோ, பண்ணை வீட்டிலோ தினந்தோறும் பார்க்கலாம். இப்படியொரு தேர்தல் அதிகாரியை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? என கொந்தளிக்கிறார்கள் தி.மு.கவினர்.

கொங்குமண்டலத்தில் ஒருகாலத்தில் கோலோச்சிய செ.ம.வேலுச்சாமி, கே.பி.ராஜூ, பொங்கலூர் தாமோதரன், கிணத்துக்கடவு தாமோதரன் ஆகியோர் இருக்கும் இடம் தெரியவில்லை. அவர்களின் சுவடையே மறைத்த வேலுமணிக்கு இந்தத் தேர்தல் எப்படி இருக்கப் போகிறது? என்பதை வருகிற நாட்களில் பார்க்கலாம்.

ஆ.விஜயானந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close