Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தொகுதிப்பங்கீடு: கறார் காட்டும் கருணாநிதி... கையைப் பிசையும் காங்கிரஸ்!

ட்டமன்றத் தேர்தலை கோஷ்டிப்பூசல் இல்லாமல் வழிநடத்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஒருபக்கம் திணறிக்கொண்டிருக்க, சீட் ஒதுக்கீட்டில் தி.மு.க தலைமை காட்டும் 'திடீர்' கறார் அணுகுமுறையால் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறது அக்கட்சி. 

தேர்தல் சீட் பங்கீடு தொடர்பாக, பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இன்று காலை கோபாலபுரத்திற்கு வருகை தந்தனர் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும், முகுல் வாஸ்னிக்கும். கருணாநிதி, ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். ஆரம்பக்கட்ட விசாரிப்புகளுக்குப் பிறகு, தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு எழுந்தது.

கறார் காட்டிய கருணாநிதி

' கடந்த தேர்தலில் 63 இடங்களை ஒதுக்கினீர்கள். இந்தமுறை நாற்பது இடங்களுக்குக் குறையாமல் சீட் ஒதுக்க வேண்டும். அப்போதுதான் கவுரமாக இருக்கும்' எனக் கூறியுள்ளனர்.

இதற்குப் பதில் கூறிய கருணாநிதி, "கடந்த முறையைப் போல் சீட் ஒதுக்குவது சாத்தியமில்லை. முப்பது சீட் ஒதுக்கும் முடிவில் இருக்கிறோம். நீங்கள் பழைய நினைப்பிலேயே இருக்கிறீர்கள். காங்கிரஸ் வாசன் கையிலும் இருக்கு தெரியுமல்லவா?" என்று கேட்டுள்ளார்.

அதற்கு குலாம் நபி ஆசாத், "அது சரிங்க.. நீங்க என்ன சொன்னீர்கள்?  தேமுதிக வருது குறைச்சுக்கங்கன்னு சொன்னீங்க,  இப்பதான் தேமுதிக இல்லைன்னு ஆயிடுச்சே... இப்ப அதிகம் தரவேண்டியது தானே?'  என்று கேட்டுள்ளனர்.

"இல்லையில்லை இன்னும் சில சிறிய கட்சிகள் வர உள்ளன"  என்று கூறியுள்ளார் கருணாநிதி.

அதற்கு காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள், சட்டமன்றத் தேர்தலைவிடவும், நமக்கு நாடாளுமன்றத் தேர்தல் மிக முக்கியமானது. அப்போது விரிவாகப் பேசிக் கொள்ளலாம். இப்போது குறைந்தபட்சம் நாற்பது இடங்கள் வேண்டும்' என  வலியுறுத்தினர். இதற்கு, தி.மு.க தலைமை ஒத்துக் கொள்ளவில்லை.

இதையடுத்து, 'அப்ப நாங்க வெயிட் பண்றோம். அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில் முடிவு செய்து கொள்ளலாம் எனச் சொல்லிவிட்டு'  காங்கிரஸ் தலைவர்கள் கிளம்பி வந்துவிட்டார்கள். 

இழுபறியால் கையை பிசையும் காங்கிரஸ்

சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், தமிழக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் குறித்து ஆலோசித்தோம். தொகுதிப் பங்கீடு தொடர்பாக எங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். திமுக,  தங்கள் தலைமையிலான கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் கூட்டணியில் இணையும் என எதிர்பார்த்திருக்கிறது. திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட இன்னும் சில காலம் ஆகும்" என்றார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர், " இன்றைக்கு பேச்சுவார்த்தையில் எந்த சலசலப்பும் கிளம்பவில்லை. அவர்கள் முப்பது இடம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். கடைசிக்கட்டமாக, 33 இடங்கள் வரையில் தி.மு.க எங்களுக்கு ஒதுக்கும் என்று நம்புகிறோம். அதிக இடங்களைப் பெறுவது குறித்து சோனியாவிடம் பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்பதுதான் மேலிடத் தலைவர்களின் விருப்பமாக இருந்தது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வந்துவிடும்" என்றார்.

கடந்த முறையாவது 2ஜி வழக்கை காரணம் காட்டி, காங்கிரஸால் 63 தொகுதிகளை பெற முடிந்தது. தற்போது  மத்தியிலும் ஆட்சியில் இல்லாத நிலையில்,  ஜி.கே. வாசன் ஒருபக்கம் கட்சியில் கணிசமானோரை தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.  இந்த  பலவீனமான நிலையை மனதில்கொண்டு  திமுக குறைச்சலான தொகுதிகளை தர முன்வருவதை கண்டு முறுக்கிக்கொள்ளவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் கையை பிசைந்துகொண்டு நிற்கிறது காங்கிரஸ்.

எது எப்படியோ சத்யமூர்த்தி பவனில் களேபரம் அரங்கேறாமல் இருந்தால் சரிதான்...!

-ஆ.விஜயானந்த்

படங்கள்: சு. குமரேசன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close