Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வைகோவுக்கு அனுப்பிய நோட்டீசை கருணாநிதி திரும்ப பெற வேண்டும்... பிரேமலதா!

நெல்லை: செய்தித்தாள்களில் வெளியான செய்தியை பேசிய வைகோவுக்கு அனுப்பிய நோட்டீசை தி.மு.க. தலைவர் கருணாநிதி திரும்ப பெற வேண்டும் என்று பிரேமலதா கூறினார்.

நெல்லை டவுனில் நேற்று இரவு தே.மு.தி.க. தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிக மகளிர் அணி தலைவர் பிரேமலதா கலந்து கொண்டு பேசும்போது, ''நெல்லையப்பர் கோவில் முன்பு தே.மு.தி.க. தேர்தல் அறிக்கை விளக்க கூட்டத்தை தொடங்கி இருப்பதால் மகிழ்ச்சி அடைகிறேன். இதுவரை நீங்கள் பல தேர்தலை பார்த்து இருக்கலாம். ஆனால், வர இருக்கும் சட்டமன்ற தேர்தல் புதுமையானது. நெல்லை அல்வாவுக்கு ஃபேமஸ். அது போல் வீரத்துக்கும் பெயர் பெற்றது.

தே.மு.தி.க. கட்சியை தொடங்கி, 2006-ம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்த் தனித்து போட்டியிட்டு 8.33 சதவீத ஓட்டுகளை வாங்கி சரித்திரம் படைத்தார். 2009 தேர்தலில் 10.3 சதவீத ஓட்டுகள் வாங்கினார். அதனால், வர இருக்கும் தேர்தலுக்கு தமிழகத்தில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளும் விஜயகாந்தை தங்களது கூட்டணியில் சேர்க்க அழைப்பு விடுத்தன. இதன் மூலம் இந்தியாவையே தே.மு.தி.க. திரும்பி பார்க்க வைத்தது.

விஜயகாந்த் குழப்பத்தில் இருக்கிறார், தெளிவான முடிவை அவரால் எடுக்க முடியவில்லை என்றெல்லாம் விமர்சனம் செய்தார்கள். 1967-ம் ஆண்டில் தமிழக அரசியலில் அறிஞர் அண்ணா திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதேபோல், காஞ்சிபுரத்தில் அரசியல் திருப்புமுனை மாநாட்டை விஜயகாந்த் நடத்தினார். தொண்டர்கள் ‘கிங்‘ ஆக இருக்க வேண்டும் என்று கூறியதால், தே.மு.தி.க. மகளிர் தின மாநாட்டில் தனித்து போட்டியிடுவோம் என்று அறிவித்தார். அவரிடம் ஒளிவுமறைவு கிடையாது. ஏனென்றால் அவர் யாரிடமும் பயப்பட தேவையில்லை.

மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள், விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க முன்வந்து சந்தித்து பேசினார்கள். நல்ல கூட்டணி தற்போது அமைந்து இருக்கிறது. தே.மு.தி.க. தேர்தல் அறிக்கையில்,  இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். கோவில் அர்ச்சகர்களுக்கு மாத ஊதியம், பொங்கல் விளையாட்டை ஒரு வார காலம் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாட நடவடிக்கை எடுப்போம்.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்றுத் தருவோம். விளையாட்டு துறையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். பேரிடர் காலங்களை திறம்பட கையாண்டு. பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்டெடுப்போம். இயற்கை வளங்கள் கொள்ளை போவதை தடுப்போம்.  வெளிநாடு, வெளிமாநிலங்களில் வேலைக்கு சென்று துயரப்படும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுப்போம் போன்ற பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவோம்.

தமிழகத்தில் லஞ்சம், ஊழல் அற்ற ஆட்சியை கொண்டு வர தே.மு.தி.க. தலைமையிலான கூட்டணி
பாடுபடும். கேப்டன் ஆட்சிக்கு வந்தால் 1 லிட்டர் பெட்ரோல் தமிழகத்தில் 35 ரூபாய்க்கு விற்கப்படும். பல கிராமங்களில் அரசு கல்லூரி இல்லாத நிலை உள்ளது, அதை மாற்றுவோம். அனைத்து தொகுதியிலும் பெண்கள் கல்லூரி தொடங்கப்படும்.

மேலும்  தி.மு.க., அதிமுக. கட்சிகளுக்கு மாற்றாக தே.மு..தி.க., திகழும். செய்தித்தாள்களில் வெளியான செய்தியை பேசிய வைகோவுக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை தி.மு.க., தலைவர் கருணாநிதி,  திரும்ப பெற வேண்டும்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close