Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்துக்கு இப்படி ஒரு பிரச்னை!

தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு தொண்டையில் ஏற்பட்ட 'டான்சில்' பிரச்னை காரணமாகவே அவரால் பேச முடியவில்லை என்று கூறப்படுகிறது. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 2-ம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்க உள்ள நிலையில், டான்சில் பிரச்னையால் பிரச்சாரத்தை விஜயகாந்த்தால் தொடங்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

எதையும் எழுதி வைக்காமல் மனதில் தோன்றியதை மேடைகளில் பேசுவது தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு வழக்கம். மற்ற தலைவர்களை கடுமையாகவும், கிண்டலாகவும் பேசுவார் என்பதற்காகவே விஜயகாந்த்தின் பேச்சை கேட்க,  அவரது தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அதிகமாக திரள்வதால், அவரது கூட்டங்களில் கூட்டம் நிரம்பி வழியும்.
 

கடந்த காலங்களில் பேச்சை தொடங்கினால் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசிதான் பேச்சை முடிப்பார். இப்போது, பத்து நிமிடம் பேசுவதற்கே விஜயகாந்த் தடுமாறுகிறார். இதனால், அவரது பேச்சு பல்வேறு தரப்பினர் மத்தியிலும், சமூகவலைதளங்களிலும் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜயகாந்த், தொண்டை வலியால் பாதிக்கப்பட்டார். இதனால், தனது பிரச்சாரத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டார். இதற்கு, விஜயகாந்த்தின் தொண்டையில் ஏற்பட்ட டான்சில் பிரச்னையே காரணம் என்று அவரது மனைவி பிரேமலதா விளக்கம் அளித்தார்.

அடி நாக்கின் இருபுறமும் உள்ள உமிழ்நீர் சுரக்கும் சதையை டான்சில் என்கின்றனர். பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகளால் மூச்சுக்குழல் மற்றும் உணவுக்குழல் போன்றவற்றில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க இது உதவுகிறது. இந்த டான்சிலில் நுண்கிருமிகள் தங்கிவிட்டால் இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இந்த பிரச்னையால்தான் விஜயகாந்த் அவதிப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 2ம் தேதி முதல் பிரச்சாரத்தை விஜயகாந்த் தொடங்க உள்ளார். கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் மேலும் அவருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. டான்சில் பிரச்னையால் பிரச்சாரத்தை அவர் தொடர முடியுமா என்பதும் சந்தேகமாகத்தான் இருக்கிறது.
 

எடிட்டர் சாய்ஸ்