Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பணம் வாங்கி பலரை ஏமாற்றினாரா பிரின்ஸ் எம்.எல்.ஏ.?

நாகர்கோவில்: விளவங்கோடு எம்.எல்.ஏ.  பிரின்ஸ், பணம் வாங்கிக் கொண்டு எந்த வேலையும் முடித்து கொடுக்காமல்   பலரை ஏமாற்றி உள்ளார் என்று தொகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பிரின்ஸ். இவரது சொந்த தொகுதி விளவங்கோடு. கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக குளச்சல் தொகுதியில் களம் இறங்கி கரையேறினார். கடந்த ஐந்தாண்டில் சட்டமன்றத்தில் அதிக கேள்வி எழுப்பியவர் என்ற பெயர் பெற்றவரும் இவர்தான்.

இந்நிலையில் பிரின்ஸ், பல டெண்டர்களுக்கு கமிஷன் வாங்கி காசு பார்க்கிறார் என்ற புகார்கள் பல மட்டத்திலிருந்தும் குவியத் தொடங்கின. ஒருவருக்கு மெடிக்கல் காலேஜ் சீட் வாங்கி தருவதாக கூறி 22 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றினார் என்றும், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 9 லட்சம் ரூபாயை ஒருவரிடம் வாங்கினார் என்றும், அதற்காக அந்த நபர், தனது லாரிகளை விற்று பிரின்ஸிடம் பணம் கொடுத்தார் என்றும், டெண்டர்கள் எடுத்து தருவதாக ஒருவரிடம் ரூ.40 லட்சம் வாங்கினார் என்றும் இவர் மீது குற்றச்சாட்டு பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இதில், 40 லட்சம் ரூபாய் கொடுத்தவருக்கும், 9 லட்சம் ரூபாய் கொடுத்தவருக்கும் கொஞ்சம் பணத்தை திருப்பி செட்டில் பண்ணியதாகவும் சொல்லப்படுகிறது. இப்படி ஒரு எம்.எல்.ஏ. மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் கூறியதை தொடர்ந்து, இதுகுறித்து பிரின்ஸ் எம்.எல்.ஏ.விடமே கேட்டோம்.

அதற்கு அவர், ''என்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் யாரோ கிளப்பி விடுற வதந்திதான் இது. தமிழ்நாட்டுக்கே தெரியும் நான் ஆக்டிவாக செயல்படுகிறேன் என்று. தேர்தல் வருது இல்லையா, அதனால் இப்படி பொய்களை பரப்புகிறார்கள். மெடிக்கல் காலேஜ் சீட் வேணும், நீங்க வந்தா ரேட் குறையும் என்று சொல்லி கூப்பிட்டாங்க. ஆனால் நான், அவங்களிடம் பணம் வாங்கல.

கதிரேசன் என்கிறவர்தான் என் பெயரை சொல்லி பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றி உள்ளார். அது பின்னால்தான் எனக்கு தெரியும். அதற்கு நான் பொறுப்பாக முடியாது. மற்றபடி நீங்க சொல்லுறது போல 9 லட்சம் ரூபாய் வாங்கி நான் யாரையும் ஏமாத்துனதும் கிடையாது, 40 லட்சம் ரூபாயும் யாரும் என்கிட்ட தரவும் இல்லை. அப்படி பணம் கொடுத்திருந்தால் ரசீது, டாக்குமெண்ட் இல்லையென்றால் வேறு எதாவது ஆதாரம் இருந்தால் அவர்கள் சொல்லட்டும்" என்றார்.

இதுகுறித்து தொகுதியில் விசாரித்தபோது, ''பணம் கொடுத்த மூன்று பேரும் காங்கிரஸ்காரர்கள்தான். அதுவும், அவரது சொந்த தொகுதியான விளவங்கோட்டுகாரர்கள்தான். மேலும், எம்.எல்.ஏ. சொல்வது போல் காலேஜ் சீட் வாங்கவோ, டெண்டர் வேலைக்காகவோ யாராவது பணம் கொடுத்தால், அதற்கு எந்த எம்.எல்.ஏ. சார் ரசீதோ, டாக்குமெண்டோ தருகிறார்கள். இதெல்லாம் திரைமறைவில் நடக்கும் வேலைகள்" என்று கூறி நக்கலாக நம்மை பார்த்து சிலர் சிரித்தனர்.

- த.ராம்

படம்.
ரா.ராம்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ