Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாஜக, பாமகவில் இந்த தொந்தரவே கிடையாது!

திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் தலைமையில் கூட்டணி அமைந்துள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு விவகாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், பாஜக, பாமக ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுவதால் இப்படிப்பட்ட தொந்தரவே இல்லை என்று ஜாலியாக சொல்கின்றனர் அக்கட்சியினர்.

அதிமுக கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி, செ.கு.தமிழரசன் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. தற்போது இந்த கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியும் இணைய வாய்ப்புள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் சமகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தற்போது, அந்த கட்சியில் எம்எல்ஏவாக இருந்த எர்ணாவூர் நாராயணன் கட்சியை உடைத்து சமத்துவ மக்கள் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிவிட்டார். அவரும் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறார். இதனால் இவர்களுக்கு தொகுதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிகிறது. வேல்முருகன், செ.கு.தமிழரசன் பற்றி அதிமுகவுக்கு கவலையில்லை.

அதிமுக கூட்டணியில் இடம்பெற காத்திருக்கும் தமாகா 24 இடங்களை கேட்டு வருகிறது. ஆனால், 17 தொகுதிகளை ஒதுக்க அதிமுக தலைமை முன்வந்துள்ளது. அதிலும், எந்தெந்த தொகுதிகள் என்பதில் ஏற்க முடியாத நிபந்தனைகள் விதிக்கப்படுவதால் தமாகா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனிடையே, சென்னையில் நேற்று நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் ஜி.கே.வாசனை மக்கள் நலக்கூட்டணி தலைவர்களான வைகோ, தொல்.திருமாவளவன் ஆகியோர் சந்தித்து பேசியதோடு, தங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக தெரிகிறது.
 

திமுக கூட்டணியில் பெரிய கட்சியாக உள்ள காங்கிரஸ் 33 தொகுதிகளை கேட்கிறது. ஆனால், 25 இடங்கள் மட்டுமே வழங்க முடியும் என்கிறது திமுக தலைமை. இரு தரப்புக்கும் இடையே நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டதால் பேச்சுவார்த்தை,  தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் திமுக மீது காங்கிரஸ் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிகவுக்கு 124 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணிக்கு வரும் கட்சிக்கு எங்கிருந்து தொகுதி ஒதுக்குவது, யார் கொடுப்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. விஜயகாந்த்தான் கொடுக்க வேண்டும் என்று மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் கூறுவதை கேட்டு தேமுதிக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. அதில், உடன்பாடு ஏற்படாமல் போனால் கூட்டணிக்குள் சலசலப்புதான். இது ஒரு புறமிருக்க, மக்கள் நலக்கூட்டணி கட்சிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 110 தொகுதிகளை எவ்வாறு பிரிப்பது என்பதிலும் அந்த கட்சிகளுக்கு இடையே பிரச்னை வெடித்துள்ளது.

மிகுந்த சிரமப்பட்டு அமைக்கப்பட்ட அதிமுக, திமுக, தேமுதிக என மூன்று கூட்டணிகளிலும் தொகுதிகளை பங்கிட்டு கொள்வதில் இழுபறி ஏற்பட்டு இருப்பதை பார்த்து பா.ஜனதாவும், பாமகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளன. தனித்து போட்டியிடுவதால் இப்படிப்பட்ட பிரச்னைகள் எங்களுக்கு இல்லை என்று இரண்டு கட்சியினரும் ஜாலியாக சொல்கின்றனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ