Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'வாசன் காத்திருப்பது யாருக்காக?'- கார்டன் vs அறிவாலயம்!

மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக ஐக்கியமான அடுத்தடுத்த நாட்களில் திமுகவின் தேர்தல் பணிகள் வேகமாகி உள்ளன. மாவட்ட வாரியாகவும், தொகுதி, ஒன்றியம், வார்டு வாரியாகயும் 'கட்சி வாக்காளர்' களின் வீடுகளுக்கு நேரில் சென்று வாக்குகளை சரி பார்க்கும் வேலையில்  உ.பி.க்கள் இறங்கி விட்டனர். அதிமுக சைடில் 'இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை' என்ற கெக்கலிப்புக்குரல் பலமாய்க் கேட்கிறது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரில் தொடங்கி உள்ளூர் வட்டச் செயலாளர் வரையில் ம.ந.கூ. அணிக்கு கொடுக்கப் பட்டுள்ள 110 சீட்டுகளை  குறிப்பிட்டு நக்கலடிக்கின்றனர்.

'இது அம்மாவோட ஸ்கீம்க... அம்மா பேச்சை அண்ணன் வைகோ தட்டினதே கிடையாது. அவர் கூட்டணியில் இருந்தால் அப்படி ஒரு ராசின்னு அவருக்கேத் தெரியும். அந்த ராசியைக் கொண்டுபோய் அந்த கூட்டணிக்கு நடுவுல வைச்சுட்டு வந்தீங்கன்னா போதும், மத்ததை நாங்க பாத்துக்கறோம்னு எங்க அம்மா சொல்லித்தானே அவரே போனாரு. வாழ்க எங்கள் அண்ணன் புரட்சிப்புயல்' என்கின்றனர்.

திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணியில் எத்தனை இடங்கள் என்பதோ, எந்தெந்த தொகுதிகள் என்பதோ இதுவரையில் முழுமையாக வெளியில் வரவில்லை. காங்கிரஸ் கட்சி மேலிடம் சார்பில் அறிவாலயத்துக்கு கூட்டணியை இறுதி செய்ய (25.03.2016) நேற்று  குலாம்நபி ஆசாத் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். திமுக கூட்டணியில் தேமுதிக வருகிறதா என்பதைப் பொறுத்து காங்கிரசுக்கான சீட் எண்ணிக்கையை மாற்றி (அதாவது உயர்த்தி) வைத்துக் கொள்ளலாம் என்பது காங்கிரசின் நிலைப்பாடு. திமுக கடந்த முறை காங்கிரசுக்கு தொகுதிகளை அள்ளிக் கொடுத்தும்,  அவை வீணாகி விட்டதால் இந்த முறை முப்பது தொகுதியில் இருந்து ஆரம்பித்து 35 தொகுதிகளைத் தாண்டாமல் பார்த்துக் கொள்ளலாம் என்பது திமுகவின் நிலைப்பாடு. காங்கிரசின் குலாம்நபி ஆசாத்தோ, தொடக்கத்திலேயே எங்களுக்கு 65-க்கு குறைந்தால், கூட்டணியே தேவையில்லை என்பது போல் பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறார். அதற்கு திமுக தரப்பில் பாசிட்டிவ் ரியாக் ஷன் இல்லை.

'இப்போதுள்ள நம் நிலைமை சரியில்லை, ஏற்கனவே காங்கிரசில் வாசன் கொஞ்சம் உடைத்துக் கொண்டது போக, எஞ்சிய உடைப்பாக ப.சிதம்பரம் அணியும் வெளியே நிற்பதால், திமுகவை விட்டால் 2021 வரையில் காங்கிரஸ் கொஞ்சமும் எழ வாய்ப்பில்லை... எப்படியாவது குலாம்நபி ஆசாத்தை சரிக்கட்டி கூட்டி வரப் பாருங்கள்' என்று தங்கபாலு, கிருஷ்ணசாமி, யசோதா போன்றவர்கள் ஈ.வி.கே.எஸ்.சிடம் கேட்டுக் கொள்ளவே,  தூதுவராக போயிருக்கிறார் குஷ்பு. காங்கிரஸ் லீடர்களும், கருணாநிதியும்  பேச்சுவார்த்தையை தொடங்கிய முதல் சுற்றிலிருந்தே தொடர்ந்து பாசிட்டிவ் கமெண்ட்டுகளை முன்வைத்து மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார் கனிமொழி.  ஆனால், காங்கிரசின் 65 தொகுதிகள் என்ற கணக்கை கருணாநிதியால் உடனடியாக ஏற்கமுடியாத நிலையில் நெளிந்திருக்கிறார். ஸ்டாலினோ, 'அவங்களுக்குத்தான் நாம் வேண்டும், நாமக்கு அவர்கள் தேவையல்ல' என்ற மனநிலையோடே கர்புர் என்று இருந்திருக்கிறார்.

கூட்டணியை ஒரு சுமுகமான ஒரு நிலைக்குள் கொண்டு வரவும், அதற்கேற்றார் போல் பக்குவமாக பேசி முடிவெடுக்கவும், அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யவும் இரு தரப்பிலும் குழு அமைக்கப்பட்டிருப்பதாகச் செல்கிறார்கள்.

உ.பி.க்கள் சிலரிடம் பேசியபோது, 'நமக்கு நாமே சுற்றுப் பயணத்தின் பின்னே திமுகவின் மீது மக்களுக்கு ஒரு அதிகபட்ச நம்பிக்கையை தளபதி (ஸ்டாலின்) ஏற்படுத்தி வைத்துள்ளார். இதன் மூலம் திமுகவுக்கான வாக்கு விகிதாச்சாரம் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. காங்கிரஸ் எங்களோடு இணக்கமாகப் போவது அவர்களுக்குத்தான் அதிகபட்ச லாபமாக இருக்கும். தமிழகத்தில் இன்றுள்ள சூழ்நிலையில் காங்கிரஸ் மீது மக்களுக்கு எந்தவொரு கிரேசும் தனிப்பட்ட முறையில் இல்லை. கனிமொழி மீதான ஊழல் வழக்கை காரணம் காட்டி காங்கிரஸ் செய்த கடந்த கால அட்ராசிட்டிகளை நாங்கள் இன்னும் மறக்கவில்லை. கட்சித்தலைமை முடிவெடுத்துள்ளதால் காங்கிரஸ் கூட்டணியை முழுமனதாக ஏற்றுள்ளோம். கூட்டணியும் முடியவில்லை, தொகுதியும் வரையறை செய்யப்படவில்லை என்பதுதான் இப்போது வரையில் இருக்கும் நிலை. ஆனால், அரவக்குறிச்சியில் ஜோதிமணியும், ராயபுரத்தில் ராயபுரம் மனோவும் தொகுதி எங்களுக்குத்தான் என்று சுவரெழுத்துப் பணிகளை தொடங்கி விட்டிருக்கிறார்கள். கேன்வாசும் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

காங்கிரசில் பேஸ் வேல்யூ இருக்கிற லீடர்களும் இப்போது இல்லை. மூப்பனார் இருந்த வரையில் அந்த மரியாதை இருந்தது. அவர் த.மா.கா.வை தொடங்கியபோது அந்த மரியாதை பளிச்சென்று  வெளிப்பட்டது. மக்கள் குறுகிய காலத்தில், மூப்பனார் கொண்டு வந்த சைக்கிள் சின்னத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்றனர்'.

த.மா.கா. வட்டாரத்திலோ, திமுகவின் வட்டத்துக்குள் காங்கிரஸ் வந்து விட்டால், அதற்கேற்றபடி திட்டமிடப்பட்டு,  வருகிற அடுத்தடுத்த நாட்களில் எங்கள் (த.மா.கா.) கூட்டணி அறிவிப்பும் வந்து விடும் என்கிறார்கள்.

இங்கல்ல, கார்டனில்...

-ந.பா.சேதுராமன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close