Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரசியல் கட்சியினர் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை- தேர்தல் ஆணையம் சொல்வது இதுதான்!

தேர்தல் நன்னடத்தை விதி, தேர்தல் செலவின கண்காணிப்பு செயல்பாடுகள் தலைமை தேர்தல் அதிகாரியால், அரசியல் கட்சியினருக்கு விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தலையொட்டி, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (26.03.2016) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
 

தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,  தேர்தல் நன்னடத்தை விதிகள் மற்றும் தேர்தல் செலவு கண்காணிப்பு தொடர்பான விளக்கங்கள், அரசியல் கட்சியினர் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை, தேர்தல் ஊர்வலங்கள், வாக்குப் பதிவு நாளன்று செய்ய வேண்டிய முறைகள் தேர்தல் பார்வையாளர்கள், நன்னடத்தை விதிகள், வாகனங்களை பயன்படுத்துதல், தேர்தல் குற்றங்கள் போன்றவை குறித்து விளக்கமாக எடுத்து கூறப்பட்டன.

மேலும், தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் கம்பிவட ஊடகங்கள் மூலம் அரசியல் சார்ந்த விளம்பரங்கள் அளித்தல், சான்றிதழ் கோருதல் தொடர்பான விண்ணப்பங்கள், செலவு கண்காணிக்கும் அமைப்பு அதன் செயல்பாடுகள் பறக்கும் படை வாகனங்களை GPS முறையில் கண்காணிக்கப்படுவது, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை விடுவிக்கும் முறை வங்கி பணபரிவர்த்தனை, வாக்குசாவடி அளவில் விழிப்புணர்வு குழுக்களின் செயல்பாடுகள், தேர்தல் கணக்கு விவரம் தயாரித்தல் மற்றும் ஆய்வு செய்தல், மாவட்ட செலவின கண்காணிப்புக்குழு செயல்பாடுகள் போன்ற விவரங்கள் விளக்கமாக அரசியல் கட்சியினருக்கு எடுத்து கூறப்பட்டது.

தமிழ்நாடு பொதுத்தேர்தலில் புது முயற்சியாக ஒற்றைச் சாளர முறையில் மனுக்களை பரிசீலித்தல், தேர்தல் படிவங்களை இணையவழி (On line) முறையில் சமர்ப்பித்தல், புகார் மற்றும் அறிக்கைகளை புதிய தகவல் தொழில்நுட்பத்தின் மென்பொருள் மூலம் பெறுதல் போன்றவை குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விளக்கமாக எடுத்துரைத்தார்.

இந்த அனைத்துகட்சி ஆலோசனைக் கூட்டத்தில், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி கிர்லோஷ்குமார், இணை தலைமைத் தேர்தல் அதிகாரி சிவஞானம் ஆகியோர் உடன் தேர்தல் நடைமுறைகளை விளக்கினர். இக்கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் ஜி.பி.சாரதி, எம்.அபுபக்கர் ஆகியோரும், இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்) கட்சி சார்பில் சண்முகம், ஏ.பாக்கியம், அதிமுக சார்பில் பொள்ளாச்சி வி.ஜெயராமன், திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், பாரதிய ஜனதா கட்சி சார்பில் கே.டி.ராகவன், வி.பாலசந்திரன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஜெ.பாரதிதாசன், எஸ்.ரஜினிகாந்த், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் எம்.ஜோதி, தேமுதிக சார்பில் கான்ஸ்டன்ட் ரவீந்திரன், வழக்கறிஞர் சந்தோஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.எம்.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். அரசியல் கட்சி பிரதிநிதிகள் கேட்ட சந்தேகங்களுக்கு கூட்டத்தில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ