Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வேட்பாளர் தகுதி: பிட் நோட்டீஸ் முதல் தேர்தல் ஆணைய கணக்கு வரை...!

மிழக சட்டமன்றத் தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியின் வேட்பாளராய், புதிதாய் களம் காணப் போகிற அறிமுக வேட்பாளர்கள் ஓட்டு வேட்டைக்கு எந்த அளவுக்கு கரன்சியை கரைத்தால் கரை சேரவோ அல்லது குறைந்தபட்சம் டெபாசிட்டையாவது வாங்க முடியும் என்பதற்கான பட்டியல் இது....

இவர்தான் வேட்பாளர்

சலவைக்குப் போட்டு வாங்கிய வேட்டி- சட்டை சகிதமாய் காலையில் பிரச்சாரத்துக்கு தயாராகும் போதே வீதி, வீதியாக புழுதிக் காற்றில் அலைந்து திரிந்துதான் வாக்குகளை கேட்க வேண்டும் என்ற முடிவுக்கு அனுபவமிக்க அந்த  வேட்பாளர் வந்து விடுகிறார். வேட்டியும், சட்டையும் பளிச் என்று இருந்தாக வேண்டியது அவசியம் என்பது அனுபவம் காரணமாக அவருக்குத் தெரியும்.

பயணங்களும், ஆடைகளும்

ஒரு நாளில் பத்து தெருக்களில் மட்டும் பிரச்சாரம் என்றால் பத்து வேட்டி, பத்து சட்டைகள் தயார் நிலையில் கைவசம் இருந்தால்தான் மரியாதையாக தெரியும். குறைந்த பட்சம் இரண்டிலும் ஐந்து என்றாலும் பரவாயில்லை. அடுத்தது, வேட்பாளர் நடந்து செல்கிறாரா, சைக்கிளில் செல்கிறாரா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். (சைக்கிள்  என்பது ஏதாவது கட்சியின் சின்னமாக இருந்தால், அதற்கு யாரேனும் ஆட்சேபனை தெரிவிக்கலாம் ?!)

டீசல், டிரைவர் பேட்டா

திறந்த வெளி ஜீப்பை பயன்படுத்துகிறார் என்றால்  2016- ஜனவரி கணக்குப்படி, அதற்கு அன்றாட வாடகை மட்டும் 2 ஆயிரத்து ஐநூறு ரூபாய். டீசல், பெட்ரோல், டிரைவருக்கான சம்பளம், பேட்டா கணக்கு தனி. (இதற்கெல்லாம் அன்றாடம் கணக்கு எழுதி கையில் வைத்துக் கொள்வது அவசியம். இல்லையென்றால் அது தனி சிக்கலைக் கொண்டு வந்து விடும்)

வாத்திய கோஷ்டிக்கு ரூ. 2 லட்சம்

வேட்பாளர் தெருவில் வருகிறார் என்றால், ஏதாவது அலப்பறையை எழுப்பிக் காட்டினால் கொஞ்சம் நன்றாக இருக்குமே என்று யோசிப்பவர்கள் இசை வாத்தியக் கலைஞர்களை காலையில் கிளம்பும் போதே வீட்டு வாசலுக்கு வரவழைத்து விடலாம்.

மொத்தமாக 2 லட்ச ரூபாயைக் (இதுதான் வடசென்னையின் குறைந்தபட்ச வாத்தியக் குழுவின் நிர்ணய கட்டணம்) கையில் கொடுத்து விட்டால் 25 முதல் முப்பது நாளைக்கு காலைமுதல் வேட்பாளர் பிரச்சாரத்தை முடிக்கிற நேரம் வரை வாசித்துக் கொண்டும், டிரம்ஸ்களை தட்டிக் கொண்டும் கூடவே இருப்பார்கள். இதுபோக, அவர்களுக்கான தேநீர், மூன்று வேளை உணவிற்கான ஏற்பாடுகளை வேட்பாளர் பொறுப்பில்தான் ஏற்கவேண்டும்.

பிட் நோட்டீஸ் கணக்கும், பிரிண்டிங் ஆர்டரும்!

தொகுதியில் வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சம் என்றால், குறைந்த பட்சம் 6 லட்சம் துண்டுப் பிரசுரங்களை போட்டே ஆக வேண்டும். அதிகபட்சமாக 10 முதல் 20 லட்சம் பிரசுரங்களை போடுகிறவர்களும் உண்டு. கையடக்க நோட்டீஸ் என்றால் ஒரு நோட்டீசின் விலை 1 ரூபாய்க்குள் அடங்கும். நோட்டீஸ் அளவுக்கேற்ப விலையும் கூடும்.
ஒரு சிலர் சுவற்றில் ஒட்டுகிற சிங்கிள் பிட் போஸ்டர் அளவிற்கே பிட் நோட்டீஸ்களை தயார் செய்து விடுவார்கள். அவரவர் வசதிக்கு ஏற்றபடி போஸ்டர்களின் சைஸ் மாறும். எது எந்த கணக்குப்படி என்றாலும் அத்தனையையும் மறக்காமல் (பிரிண்டிங் ஆர்டர் உள்பட) கணக்கு வைத்துக் கொள்ளவேண்டும்.

சுவர் விளம்பரத்துக்கும் கணக்கு

தேர்தல் பிரச்சாரங்களில் சுவரெழுத்து விளம்பரங்கள் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கவனிக்கப்படுகிறது. வீட்டின் உரிமையாளர் அனுமதியைப் பெற்று சுவர்களில் சின்னம், வேட்பாளர் குறித்த பதிவுகளை செய்து கொள்வது தொகுதியில்  வேட்பாளரின் செல்வாக்கைப் பொறுத்தது. எத்தனை சுவர்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது. அந்த விளம்பரத்தின் அளவு போன்ற விவரங்களை வேட்பாளர் மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். விளம்பரங்களை படமும் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

வேட்பாளர் செலவு வரம்பு

கடந்த தேர்தலின் போது ஒரு வேட்பாளர் ரூ.16 லட்சம் வரையில் செலவு செய்யலாம் என்று 'வரம்பு குறித்த அளவீடு' இருந்தது போல் இப்போது இல்லை. அது, சரேலென  28 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

கொடி, தோரணம், வினைல் ஃபோர்டு !

கட் -அவுட்கள் , வினைல் ஃபோர்டுகள்,  ஸ்டேண்டிங்க் ஸ்லைடு (ரோட்- சைட்) ஃபோர்டுகள் ஆகியன தொகுதியில் எத்தனை வைக்கப்படுகிறது, எங்கெங்கு வைக்கப்படுகிறது? எத்தனை கொடிகள் இரும்புக் கம்பிகளில் பொருத்தி வைக்கப்பட்டிருக்கிறது? சின்னம் அல்லது அடையாளத்துடன் கூடிய  தோரணக் கொடிகள் எத்தனை கிலோ மீட்டருக்கு தொகுதியில் இருக்கிறது? என்பதும் கணக்கில் கொள்ளப்படும்.

ஆரத்தியிலும் பிரச்னைதான்

வேட்பாளருக்கு எங்கெங்கு ஆரத்தி தட்டு எடுத்து திருஷ்டி கழிக்கப்படுகிறது? எப்போதெல்லாம் அந்த தட்டில் வேட்பாளர் பணத்தைப் போடுகிறார், எவ்வளவு போடுகிறார் என்றெல்லாம் கணக்கில் வைத்துக் கொள்ளவேண்டும். இல்லையென்றால், தேர்தல் ஆணையம் சொல்கிற கணக்கில் மாட்டிக் கொள்ள நேரிடும். உதாரணமாக ஒரு தெருவில் ஆரத்தித் தட்டில் ஐம்பது ரூபாய் போட்டு விட்டு மற்ற அனைத்து தெருவிலும் பத்து ரூபாய்தான் வேட்பாளர் போடுகிறார் என்றால், அதைக் கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டும்.வீடியோ அல்லது போட்டோ ஆதாரம் இருந்தால் மிகவும் நல்லது.

இதை கவனிக்காமல் இருந்து,  50 ரூபாய் விவகாரம் தேர்தல் ஆணையத்தின் பார்வைக்கு படத்துடன் போய் விட்டால் தொகுதியில் இருக்கும் அத்தனை தெருக்களுக்கும் வீட்டுக்கு 50 ரூபாய் ஆரத்தித் தட்டில் வேட்பாளர் போட்டதாகவே கணக்கில்  கொள்ளப்பட்டுவிடும்.

எப்போது பிரச்சாரம் ?

வேட்புமனு தாக்கல் செய்து அந்த மனு, ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு,  சின்னமும் கைக்கு வந்து விட்டால் அந்தத் தேதியில் இருந்தே பிரச்சாரத்தை அனைவருக்கும் முன்னதாகக் கூட தொடங்கி விடலாம். மெழுகுவர்த்தி சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு நாம் தமிழர் கட்சியின் சீமான் அந்த அடிப்படையில்தான் பிரச்சாரக் களத்தில் முதல் ஆளாக சுழன்று கொண்டிருக்கிறார்.

ஆணையத்துக்குப் போகணும்

அன்றாட செலவினங்களை மிகச் சரியாக, எந்த இடத்திலும் எகிறல் தன்மையில்லாத அளவில் குறித்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். அதைவிட அவசியம் அன்றாட கணக்கு வழக்கை தேர்தல் ஆணையத்தால் தொகுதிக்கென்றே நியமிக்கப்பட்ட அதிகாரியிடம், ஒவ்வொரு நாளும் மாலை 6 மணியளவில் ஒப்படைத்து விட வேண்டும். கணக்கு வழக்கில் அந்த அதிகாரிக்கு எழும் சந்தேகங்களுக்கு உரிய விளக்கத்தைக் கொடுத்து அன்றைய ஃபைலை குளோஸ் செய்தால்தான் அன்றைய தேர்தல் பிரச்சாரப் பணியின் கணக்கு முடிவுக்கு வரும்.

பூத் ஏஜெண்ட் கணக்கு என்ன ?

பலமுறை பூத் ஏஜெண்ட்டாக இருந்த அனுபவசாலிகளிடம் பேசியதில், ''சென்னையில் சின்ன தொகுதின்னு எழும்பூர் தொகுதியை சொல்வாங்க... அதுக்கே  181 பூத்துங்க (வாக்குச் சாவடி) வருது. ஒரு பூத்துல உட்கார்ற ஆளுக்கு 10 ஆயிரம் ரூபாயை எடுத்து வெச்சுட்டுதான் மத்த வேலையைப் பார்க்க முடியும். இல்லைன்னா, பூத்துல உட்கார ஆள் கிடைக்கறது கஷ்டம். அதுவும், கட்சிக்காரனா கிடைக்கறது அதை விட கஷ்டம். முதலில் ஒரு தவணைன்னு 10 ஆயிரம் ரூபாய் போயிடும், இரண்டாவதா ஒரு தவணை  அதே மாதிரி இன்னொரு 10 ஆயிரம் ரூபாய் போய்ச் சேர்ந்திடும். இது போக, சரக்கு, பிரியாணி பொட்டலம்னு போய்ச் சேர்ந்தால்தான் பூத் கமிட்டி வேலையே நடக்கும்'' என்றனர்

சுயேச்சையின் அனுபவம் இது...

சென்னை ஐ.சி.எஃப். பகுதியைச் சேர்ந்தவர் விகடகவி கந்தசாமி. சுயேட்சையாக பலமுறை தேர்தலைச் சந்தித்திருக்கிறார். அவரிடம் பேசியபோது, "கவுன்சிலர் தேர்தலில் (2006)தான் முதன்முதலில் போட்டியிட்டேன், மேசை விளக்கு சின்னம் கொடுத்தாங்க. அடுத்து, கொளத்தூர் தொகுதியில் எம்.எல்.ஏ.வுக்காக (2011) போட்டியிட்டேன். அதே மேசை விளக்கு சின்னம் கிடைத்தது. அதற்கடுத்து சில மாதங்களில் வந்த மேயர் தேர்தலில் போட்டியிட்டு 2,080 வாக்குகள் பெற்றேன். இப்போது (2016) வில்லிவாக்கம் தொகுதியை குறிவைத்து மனுதாக்கல் செய்திருக்கிறேன்.

ஆதரவற்ற நிலையில் சாலையோரம் இறந்து கிடக்கிற மனித உடல்களை கொண்டு போய் நல்லடக்கம் செய்யும் பணியை 'விழி' என்கிற இயக்கத்துடன் இணைந்து செய்து வருகிறேன். நாலு பேரு நல்லா இருக்கணும்னா என்னை ஆதரியுங்கள் என்பதே என் பிரச்சார வாசகம். வாக்கு சேகரிக்க எல்லா இடத்துக்கும் நடந்துதான் போவேன். நண்பர்கள் போட்டுத் தருகிற துண்டுப் பிரசுரத்தை பெரியவங்களா பார்த்து அவங்க கையில் கொடுத்துட்டுப் போவேன். கையில் எந்தக் கொடியும் இருக்காது, பேனரும் இருக்காது.

எந்த எலக்‌ஷன் கமிஷன் என்கிட்டே கணக்குக் கேட்டாலும் அவங்களே பரிதாபப்பட்டு எனக்கு ஏதாவது செய்யணும்னு நினைப்பாங்க" என்கிறார்.

- ந.பா.சேதுராமன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close