Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெ. சிறுதாவூர் பங்களாவில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கல்: வைகோ பரபரப்பு புகார்!

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவிற்கு கண்டெய்னரில் கட்டுக் கட்டாக பணம் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும், உடனடியாக அந்த பங்களாவில் சோதனை நடத்த வேண்டும் என்றும் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ தேர்தல் ஆணையத்திடம் பரபரப்புப் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் காவல்துறை இயக்குநருக்கு வைகோ கடிதம் அனுப்பியுள்ளார். அதில்,

" தங்களுடைய மேலான நடவடிக்கைக்காக அதி முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையைத்  தங்களது கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். கடந்த 27 ம்  தேதி இரவு முதல்வர் ஜெயலலிதா, அடிக்கடி சென்று தங்குகின்ற சிறுதாவூர் பங்களாவிற்கு மிகப் பெரிய 'கண்ட்டெய்னர்' ஒன்று எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த 'கண்ட்டெய்னர்' ஏற்றிய லாரி கிராமத்துச் சாலையைக் கடந்து சென்றபொழுது, அப்பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் லாரியின்ஓட்டுநரிடம் கண்ட்டெய்னரில் என்ன பொருள் கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு நிலக்கரியும், விறகும் ஏற்றிச் செல்கிறோம் என்று பதில் தெரிவித்திருக்கின்றார்கள்.

ஆனால், நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் ரூ.1000 மற்றும் ரூ. 500 அடங்கிய நோட்டுக் கட்டுகள் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு அந்த கண்ட்டெய்னரில் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று தெரியவருகிறது. அதைவிட மேலும் அதிர்ச்சியைத் தரக்கூடிய வகையில் முற்றிலுமாக தார்பாலின் உறையைப் போட்டு மூடிய நிலையில் பத்து லாரிகள் திங்களன்று (28.3.2016 ) காலை சிறுதாவூர் பங்களாவுக்குள் சென்றுள்ளன.

லஞ்ச ஊழலில் சேர்க்கப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய், ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக எனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் உறுதியாக நம்புகிறேன்.மேலும் உறுதி செய்யப்படாத தகவலின் அடிப்படையில் சிறுதாவூர் பங்களா வளாகத்திற்குள்ளாக மூடி மறைக்கப்பட்ட நிலவறைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் சட்ட விரோதமாக லஞ்ச லாவண்யத்தில் பெற்ற பணம் பதுக்கப்பட்டு, மறைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிய வருகிறது.

எனவே தாங்கள் உறுதியான நடவடிக்கை மூலமாக சிறுதாவூர் பங்களாவில் தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும். அதன்மூலம் தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மீண்டும் வருவதற்கும், சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்துவதற்கும் வழி வகுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்." என்று வைகோ குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நேரத்தில் இந்தப் புகார் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ