Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெ.வுக்கு கார்டனில் நடந்த ஆப்ரேஷன்- புயலை கிளப்பும் பிரேமலதா!

இன்னைக்கு எங்களுக்கு வந்த ஒரு தகவலை சொல்றேன், பத்து நாட்களுக்கு முன் போயஸ்கார்டன் வீட்டிலேயே ஆப்ரேஷன் தியேட்டர் ரெடி பண்ணி ஜெயலலிதாவுக்கு ஆப்ரேஷன் நடந்திருக்கு. வெளியில் வர முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருக்காங்க என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா.
 

தஞ்சாவூர் ஆபிரஹாம் பண்டிதர் சாலையில் நேற்று நடைபெற்ற தேமுதிக தேர்தல் அறிக்கை விளக்க பொது கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த கட்சியின் மகளிர் அணித் தலைவி பிரேமலதாவின் கார் மேடை வரைக்கும் வர வாழும் அன்னை தெரசாவே என அவரை புகழ்ந்து கோஷமிட்டனர் நிர்வாகிகள். பிரேமலதா வருவதற்கு முன் விஜயகாந்த் வேடமிட்ட ஒருவர் அவரின் பட பாடல்களுக்கு நடனமாடி கொண்டிருக்க பிரேமலதா வந்ததும் அவரை காணவில்லை. பிறகு பேச ஆரம்பித்த பிரேமலதா முதலில் தஞ்சையின் புகழை பற்றி பேசி பிறகு அரசியல் வட்டத்துக்குள் வந்தார்.

"கேப்டன் அந்த கூட்டணிக்கு போகிறார், இந்த கூட்டணிக்கு போகிறார் என பத்திரிகைகள்தான் எழுதி வந்தன. ஆனால், அவர் மிக தெளிவாக இருந்ததுடன் மக்களுக்காக அவர் மக்கள் நல கூட்டணியில் இணைந்தார். கேப்டன் மக்களுக்காக வாழ்ந்தார் வாழ்வார். கேப்டன் சிகிச்சைக்காக சிங்கப்பூர் போய்விட்டார் என சில பத்திரிகைகள் பொய்யை எழுதுகிறது. அவர் கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் இருந்து தேர்தல் பிரச்சாரம் குறித்த திட்டங்களை வகுத்து வருகிறார். இவர்கள் இப்படி எழுதுகிறார்கள், நான் இல்லாமல் கேப்டன் பக்கத்து ஊருக்கு கூட சென்றதில்லை. தேமுதிகவின் உண்மையான கூட்டணி யார் என்று தெரியுமா தமிழக மக்கள்தான் உண்மையான கூட்டணி.
 

தேமுதிக நிர்வாகிகளையும் தொண்டர்களையும் யாரும் விலைபேச முடியாது. எட்டு துரோகிகள் நம் கட்சியை விட்டு சென்று விட்டனர். அவர்கள் அரசியல் எதிர்காலம் சூனியாமாக்கபடும் என அரசியல் வரலாறுகள் கூறுகிறது. இன்னைக்கு அதிமுகவில் நேர்காணல் நடந்து கிட்டு இருக்கு. யாராவது கவனிச்சிங்களா தினந்தோறும் அங்கு ஒரு கூட்டம் சாலையில் நடந்து போய்கிட்டு இருக்காங்க அவ்வளுவுதான். அங்கு செல்பவர்கள் யாரை சந்திக்கிறார்கள் என யாருக்காவது தெரியுமா? இதுவரைக்கு ஒரு போட்டாவாவது பத்திரிகைகள்ல வந்து இருக்கா. நேர்காணலை ஏன் அவர்கள் போயஸ்கார்டனில் நடத்த வேண்டும். ஜெயலலிதா உட்கார்ந்து அத்தனை பேருகிட்டேயும் நேரடியாக பேச வேண்டும். அதுக்கு பேர்தான் நேர்காணல். அது அங்கு நடக்கவில்லை.

திமுகவில் நேர்காணல் நடந்துச்சு. கலைஞர், ஸ்டாலின் எல்லாம் உட்கார்ந்து பண்ணினாங்க. அதுதான் உண்மையான நேர்காணல் அது போல் தேமுதிகவில் நடந்த நேர்காணலிலும் கேப்டன் உட்கார்ந்து நேர்காணல் செய்தார்கள். தினமும் அத்தனை படமும் செய்திதாள்களில் வந்துச்சு. அதிமுகவுக்கு போறவங்க சுவத்த பார்த்து பேசுகிறார்களா இல்லை ஜெயலலிதாவை பார்த்து பேசுகிறார்களா என யாருக்கு தெரியும். ஒரு படமாவது வெளியில் வந்துச்சா. இன்னைக்கு எங்களுக்கு வந்த ஒரு தகவலை சொல்றேன், பத்து நாட்களுக்கு முன் போயஸ்கார்டன் வீட்டிலேயே ஆப்ரேஷன் தியேட்டர் ரெடி பண்ணி ஜெயலலிதாவுக்கு ஆப்ரேஷன் நடந்திருக்கு. வெளியில் வர முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருக்காங்க. பத்திரிகைகாரர்கள் இதை எழுத தைரியமிருக்கா.

குண்டடிபட்ட பிறகு எம்ஜிஆர் வந்து பொது கூட்டத்தில் பேசினாரே, யாருக்காவது புரிஞ்சதா. விஜயகாந்துக்கு என்ன தெரியும், இவர் முதல்வர் வேட்பாளரா என கேட்கிறார்கள். பேசவே தெரியாத, பேசுறதும் புரியாத எம்ஜிஆரும், ஒன்னுமே படிக்காத காமராஜரும் தான் ஆட்சியில் அமர்ந்து மக்கள் மனதில் நின்றவர்கள். அதே போல் நமது கருப்பு எம்ஜிஆரும் ஆட்சியில் அமர்ந்து ஒட்டு மொத்த மக்கள் மனதையும் வெல்வார். முன்பு ரஜினிகாந்த சொன்னார், மீண்டும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று. அதையேதான் இப்போது நான் சொல்கிறேன், மீண்டும் அதிமுக, திமுக ஆட்சிக்கு வந்தால் மன்னார்குடி மாபியா கும்பல் கிட்ட இருந்தும், திருவாரூர் தீய சக்திகள்கிட்ட இருந்தும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது. அதில் இருந்து தமிழகத்தை காப்பாற்றுவது நம் ஒவ்வொருவரின் கடமை" என பேசி முடிக்க கூட்டத்தில் ஆராவராம்.

-கே.குணசீலன்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ