Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கேப்டனிடம் சவால்விட்டதால் ஜெயலலிதா சிறைக்கு சென்றார்... ஆவேசப்பட்ட பிரேமலதா!

திருச்சி: கேப்டனிடம் சவால்விட்டதால் ஜெயலலிதா பெங்களூரு சிறைக்கு சென்றார் என்று திருச்சியில் நடந்த தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டத்தில் பிரேமலதா ஆவேசமாக பேசினார்.

திருச்சி உறையூரில், நேற்று இரவு மக்கள் நலக் கூட்டணி தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தே.மு.தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட்  கட்சி தலைவர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பேசிய பிரேமலதா விஜயகாந்த், ''தமிழகத்தில் இதுவரையில் ஆண்டு வந்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளுக்கு மாற்றாக உருவெடுத்திருப்பதுதான் மக்கள் நலக்கூட்டணி. இந்தக் கூட்டணியில் அப்பழுக்கற்றவர்கள் அங்கம் வகிக்கின்றனர். ஊழலை மட்டுமே பிரதானமாகக் கொண்டு ஆட்சி நடத்திய தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளையும் வென்று கேப்டன் தலைமையில் ஆட்சி அமைக்கப்போகிறது மக்கள் நலக்கூட்டணி.

தேர்தல் அறிவிப்பு வந்ததுமே பா.ஜ.க., தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே தே.மு.தி.க.வை கூட்டணிக்கு சேர்ப்பதில்தான் ஆர்வம் காட்டி வந்தன. ஆனால் கேப்டன் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி என்பது குறித்து ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. தி.மு.க.வுடன் ஒரு முறைகூட முறையான சந்திப்பு நடைபெறவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதிகூட, அவராகவேதான் பழம் நழுவி பாலில் விழப்போகிறது எனக்கூறி குழப்பத்தை உருவாக்கினார். அதை ஊடகங்கள் ஊதி பெருசாக்கின. உடனே அண்ணன் வைகோ ஆவேசப்பட்டார். அமைச்சர் பொன்,ராதாகிருஷ்ணன், பழம் நழுவி பாலிடாலில் விழுந்துவிட்டது என சொன்னார். பழம் நழுவி  எங்கேயும் விழவில்லை. கேப்டன்,  ஞானப்பழம். அதனால் தான் தேனில் விழுந்துள்ளது.

சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லாதபோதே வில்லனாக நடிக்க வந்த வாய்ப்புகளை விஜயகாந்த் மறுத்தவர். நம்ம கேப்டன், அம்பியாகவும் இருப்பார், அந்நியனாகவும் மாறுவார். காந்தியாகவும் இருப்பார், தவறு நடந்தால் கோட்சேவாகவும் அவர் மாறுவார். அவர் எதிலும் சிந்தித்து சரியான முடிவெடுப்பவர். அதனால்தான் தமிழகத்தை முன்னணி மாநிலமாக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையோடு மக்கள் நலக்கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டார். இப்போது மாபெரும் கூட்டணியாக உருவெடுத்துள்ளது மக்கள் நலக்கூட்டணி.

தே.மு.தி.க.வில் இருக்கும் அனைவரும் அவர் நடிகராக இருந்த காலத்தில் இருந்தே உடன் இருப்பவர்கள். எந்த கட்சியிலிருந்தும் பிரிந்து வராமல், தனது ரசிகர்களை கொண்டு கட்சியை உருவாக்கினார் கேப்டன். மாவட்டம் மற்றும் மாநில நிர்வாகிகள் அனைவருமே கேப்டன் ரசிகர் மன்றம் தொடங்கிய காலத்திலிருந்து  உடன் இருப்பவர்கள். எனவே அவர்களில் பலர் சட்டப்பேரவை உறுப்பினர்களாக, உள்ளாட்சி பிரநிதிகளாக உள்ளனர். இன்னும் அவர்களை உயர்ந்த பதவியில் உட்கார வைத்து அழகு பார்ப்பார் கேப்டன். தி.மு.க.வுடன் கூட்டு வைத்தால் ஈசியாக ஜெயித்திருக்கலாம்

ஆனால் அது, அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாகதான் ஆகியிருக்கும். இங்கிருந்து வேறு பக்கம் சென்ற 9 துரோகிகளின் கதி என்னவாகப்போகிறது என்று பொறுத்திருந்து பாருங்கள். தமிழக அரசியல் வரலாற்றில் துரோகம் செய்தவர்கள் அடையாளம் இல்லாமல் போனதுதான் வரலாறு. மக்கள் பிரச்னையை சட்டசபையில் பேசியதற்காக கேப்டனை அடக்கப் பார்த்தார்கள். அதைபொறுக்க முடியாமல், சிங்கமாக கர்ஜித்தார். ஜெயலலிதாவை பார்த்து நேரில் கர்ஜித்த ஆண்மகன் நம்ம கேப்டன்தான். கேப்டனை எதிர்த்தவர்கள் நிலைக்க முடியாது. இதை நான் தொடர்ச்சியாக கவனித்து வருகிறேன். அதனால்தான் கேப்டனிடம் சவால்விட்ட ஜெயலலிதா பெங்களூரு சிறைக்கு சென்றார். கொடநாடு நாயகியாக இருந்தாலும் சரி, காமடியனாக இருந்தாலும் சரி கேப்டனை எதிர்த்தவர்கள் வாழ்ந்தாக சரித்திரம் இல்லை.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, நான்கு வருடங்களுக்கு முன் திருச்சியில் வெட்டிக் கொல்லப்பட்டாரே முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம், அவருக்கு இன்று நினைவுநாள், ஆனால் அந்த கொலைக்கான காரணத்தைகூட இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் தமிழக போலீஸ் இருக்கிறது. தமிழக போலீஸை ஸ்காட்லாண்ட் யார்டு போலீசுக்கு சமமாக சொல்வார்கள். இப்போது எல்லாம் சீரழிந்துவிட்டது. போலீசுக்கு ரோல்மாடல் கேப்டன்தான், போலீஸ் அகாடமியில் பயிற்சியின்போது கேப்டனின் படங்களை காண்பித்துதான் கற்றுக்கொடுக்கிறார்கள்.

கேப்டன் சமூகத்தை மாற்ற ரமணாவாக உருவெடுப்பார். இதுவரை அம்மாவை நம்புனீங்க, அய்யாவை நம்புனீங்க, இந்த ஒருமுறை அண்ணனை நம்புங்க. நிச்சயம் அவர் உங்களை காப்பாற்றுவார். தமிழகத்தில் கடந்த 60 வருடங்களாக ஊழல் மயமாகிவிட்டது. காமராஜர், எம்.ஜி.ஆர். இவர்கள் இருவருமே நல்லாட்சி நடத்தியவர்கள். அதன்பின்னர் வந்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டுமே ஊழலை மட்டுமே பிரதானமாக கொண்டு ஆட்சி நடத்தியவர்கள். தமிழகத்தில் ஊழலை ஒழிக்க, நேர்மையான ஆட்சி நடத்திட, இந்த இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக, கேப்டன் தமிழகத்தை ஆள்வதற்கு நல்ல சந்தர்ப்பம் வந்துள்ளது. அந்த சந்தர்ப்பத்தை தவறவிடாமல் மக்கள் நலக்கூட்டணியை வெற்றிபெறச் செய்து தமிழகத்தை காப்பாற்றுங்கள். 

ரஜினிகாந்த் முன்பு சொன்னார், மீண்டும் இந்தம்மா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது என்று. அதையே தஞ்சையிலும் சொன்னேன், இப்போதும் சொல்கிறேன்.  மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மன்னார்குடி மாஃபியா கும்பல்கிட்ட இருந்தும், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் திருவாரூர் தீய சக்திகள்கிட்ட இருந்தும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது. அதில் இருந்து தமிழகத்தை காப்பாற்றுவது நம் ஒவ்வொருவரின் கடமை" என்று முடித்தார்.

- சி.ஆனந்தகுமார்

படங்கள்:
தே.தீட்ஷித்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ