Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கருணாநிதி சந்தோஷப்படுவதற்கு இவர்தான் காரணம்- ரகசியம் உடைத்த விந்தியா!

துரை அ.தி.மு.க. நகர் கழக செயலாளர் செல்லூர் ராஜூ தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க.விற்கு ஒரு குட்டி பேச்சாளர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

ஆம் பள்ளிச் சிறுவனுக்கு பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த சிறுவன் ஜெயலலிதாவின் திட்டங்களை எடுத்துக்கூறி அடுக்கு மொழியில் அம்மாவின் புகழை அமர்க்களப்படுத்த கைதட்டலும், விசில் சத்தமும் காதை கிழித்தது.

அதனை தொடர்ந்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உறவினர் என்று ஒருவர் மேடையில் அறிமுகம் செய்யப்பட்டார். அவர், ''விஜயகாந்த் எங்களுக்கு மிகவும் நெருங்கிய உறவு. ஒரு நேரத்தில் எனது மகன் படிப்பு செலவிற்கு பண உதவி கேட்டதற்கு பணம் இல்லை என்று கையை விரித்துவிட்டார். ஆனால், ஜெயலலிதா எங்களுக்கு உதவி செய்து ஆதரவு செய்தார். அதனால், நாங்கள் எப்போதும் அம்மாவுக்கு தான் ஆதரவாக இருப்போம்" என்றார்.

இதை தொடர்ந்து, அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளர் நடிகை விந்தியா பேசும்போது, ''பேசும் இடங்களுக்கு கூட்டம் வந்தால் அது மீட்டிங். கூட்டம் இருக்கும் இடத்துக்கு பேச போனா அது செட்டிங். அப்படித்தான் 'நமக்கு நாமே' என்ற பெயரில் நாடகம் நடந்தது. அது மக்களை ஏமாற்றுவதற்கான பயணம். ஸ்டாலின் நமக்கு நாமே பயணம் மேற்கொண்டு என்னத்தை சாதித்தார்.

நான் சங்கமம் படத்தில் நடித்ததில் இருந்து சொத்து சேர்த்து பார்க்கிறேன் சேர்க்கவே முடியவில்லை. ஆனால் தி.மு.க.வினர், சென்னை சங்கமம் என்ற பெயரில் ஒரே நாளில் சம்பாதித்து விட்டார்கள். கருணாநிதி, எனக்கு இது கடைசி தேர்தல், கடைசி தேர்தல் என்று ஒப்பாரி வைக்கிறார்.

சர்க்கரை நோயாளி எப்படி இனிப்பை பார்த்ததும் பல்லை காட்டுவாரோ அதைப்போல் காங்கிரஸ் மூலம் குஷ்பு கிடைத்ததை நினைத்து கருணாநிதி சந்தோசப்படுகிறார். கருணாநிதி பச்சை தமிழன் அல்ல பச்சோந்தித் தமிழன். இந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் கருணாநிதி மற்றும் அவரது குடும்பம் மட்டுமே சந்தோஷப்படும். ஆனால், அ.தி.மு.க. வெற்றி பெற்றால் தமிழகமே சந்தோஷப்படும்.

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி துரோகக் கூட்டணி. எதிரியை நம்பலாம் துரோகியை நம்பக் கூடாது. நாட்டுக்காக சண்டை போட்ட காங்கிரசின் நிலை இன்று படுமோசமாக உள்ளது. காங்கிரஸ்சில் குஷ்பு, நக்மா இருப்பதற்கு இளங்கோவன் சந்தோசபட வேண்டாம். காரணம், சார்ஜ் இல்லாத போனுக்கு இரண்டு சிம் எப்படியோ அப்படித்தான் அவர்கள் காங்கிரஸில் இருப்பது.

விஜகாந்த், பாகுபலி படத்தில் வரும் வித்தியாசமான மொழி பேசும் வில்லனுக்குகூட ஈடு இல்லை. ஏன் என்றால், அவர்கள் பேசுவதுகூட கொஞ்சம் புரிந்தது. ஆனால், விஜயகாந்த் பேசுவது சுத்தமாக புரியவில்லை. மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தங்களை பாண்டவர்கள் என்கிறார்கள். அங்கே, தர்மர் கைகள் உதவி செய்து, உதவி செய்து சிவக்கும். ஆனால் இங்கோ, தர்மர் குடித்து குடித்து கண் தான் சிவக்கிறது" என்றார்.

விந்தியாவின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த செல்லூர் ராஜூ, அப்படியே ஷாக் ஆகிப்போய் உட்கார்ந்து இருந்தார்.

சே.சின்னதுரை

படங்கள்:
ஈ.ஜெ.நந்தகுமார், வீ.சதீஷ்குமார்

எடிட்டர் சாய்ஸ்