Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிறுதாவூரில் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் பதுக்கப்பட்டுள்ளது: ஜெயலலிதாவை சீண்டும் வைகோ!

பரமக்குடி: நான் ஜெயலலிதாவிடம் கேட்கிறேன், உங்களுடைய சிறுதாவூர் அரண்மனையின் பூமிக்கடியில் உள்ள நிலவறைகளில் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது என்று பரமக்குடியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் வைகோ கேள்வி எழுப்பினார்.

தே.மு.தி.க.-மக்கள் நல கூட்டணியின் 5-ம் கட்ட பிரசார கூட்டம் பரமக்குடியில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ''நாட்டின் தென் கோடி பகுதியில் உள்ள ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து, நாட்டின் உயரிய மனிதனாக உயர்ந்த அப்துல்கலாமின் இறுதி சடங்கில் பங்கேற்க எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலாமின் பெயரை முன் மொழிந்த என்னை அவரது இறுதி சடங்கில் பங்கேற்க அனுமதிக்காதது வருத்தத்தை தந்தது.

அதன் பின்னர் கலாமின் குடும்பத்தினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு என்னையும் அழைத்து சென்றனர். அப்போதும், அதிகாரிகள் என்னை அங்கே அமரவிட கூடாது என முயற்சித்தனர். ஆனால் அவர்களால் என்னை தடுக்க முடியவில்லை. கலாமின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து 300 அடி தூரத்தில் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அமர்ந்திருந்தனர். நானோ கலாமின் உடல் வைக்கப்பட்டிருந்த 50 அடி தூரத்தில் அமர்ந்திருந்தேன். இதன் மூலம் என்னை அந்த இடத்தில் ஒதுக்க நினைத்தவர்களின் எண்ணம் நிறைவேறாமல் போனது மட்டுமல்ல கலாமின் குடும்பத்தினரை சந்திக்க வந்த பிரதமர் உள்ளிட்ட அத்தனை தலைவர்களையும் கலாமின் சகோதரருக்கு அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்பும் எனக்கு ஏற்பட்டது.

அப்போது, அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் 300 அடி தூரத்தில் இருந்தார். இதிலிருந்து தெரிகிறதா சத்தியம் ஒரு நாள் வெல்லும் என்பது. அப்துலகலாம் பதவி காலம் முடிந்தபோது அப்துல்கலாமே மீண்டும் ஜனாதிபதியாக நீடிக்கட்டும் என நான் சொன்னபோது அமர்சிங், சந்திரபாபு நாயுடு போன்ற தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால், ஜெயலலிதாவிடம் சொன்னபோது எடுத்த எடுப்பில் ‘நோ.. நோ.. நெவர். அவரை ஆக்கவே கூடாது.’ என சொல்லி ஏற்க மறுத்தார். என்ன காரணம் என கேட்டபோது, ‘அவர் என்னை மதிக்கவில்லை. தனது பதவி ஏற்பு விழாவிற்கு அம்பானிக்கு அழைப்பு விடுத்த கலாம் எனக்கு தனியாக அழைப்பு அனுப்பவில்லை. அவரை எல்லாம் எப்படி ஏற்பது' என்றார்.

அவரிடம் நான், கலைஞரின் சட்டமன்ற பொன்விழாவிற்கு கலாம் வர மறுத்தார். கட்சி பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர் அவர். அப்படிபட்டவர் தொடர்ந்து ஜனாதிபதியாக இருந்தால் நல்லதுதானே என எடுத்துரைத்தேன். கலைஞரிடம் கேட்டபோது ‘மீண்டும் பதவி வகிக்க கலாமே விரும்பவில்லையே நீங்கள் ஏன் அவரை பரிந்துரை செய்கிறீர்கள்’ என சொல்லி மறுத்துவிட்டார். இப்படி தமிழர் ஒருவரை நாட்டின் உயர்ந்த பதவிக்கு வரமுடியாமல் செய்தவர்கள் இவர்கள்.

காந்தியவாதி சசிபெருமாள் மதுக்கடையை மூடவைக்க டவரில் ஏறி போராட்டம் நடத்தினார். அவரை அங்கிருந்து கயிறு கட்டி இறக்குவதாக சொல்லி அவரை கொன்றார்கள். அவர் சாகடிக்கப்பட்டபோது, 99 வயதுடைய எனது தாயார் போராட்டத்தில் ஈடுபட்டார். கலிங்கபட்டியில் மதுக்கடையை அடைக்க நடந்த போராட்டத்தில் தடியை கொண்டு தாக்கினார்கள், கண்ணீர் புகை வீசினார்கள். மதுவுக்கு எதிராக போராடிய எனது தாய் மாரியம்மாள் எனது வெற்றியை காணாமல் மறைந்துவிட்டார். அவர் உருவில் உள்ள ஆயிரக்கணக்கான தாய்மார்கள் நான் இம்முறை அடைய உள்ள வெற்றியை காண்பார்கள்.

மதுக்கடை இருப்பது கொடுமை. பெண்கள் குடிக்கிறார்கள். இது காரைக்கால் அம்மையார் பிறந்த நாடா? பத்தினி தெய்வம் கண்ணகி பிறந்த நாடா? எல்லாம் நாசமாகி போயிட்டது. பிள்ளைகள் குடிக்கிறார்கள், சின்னஞ்சிறு பிஞ்சுகள் குடிக்கிறார்கள், கல்லூரி மாணவர்கள் குடிக்கிறார்கள், தகப்பன் குடிக்கிறான், சென்னையில் பெண்கள் குடிக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் டாஸ்மாக்தான். இதனை தடுக்கத்தான் தே.மு.தி.கவும் மக்கள் நல கூட்டணியும் இணைந்திருக்கிறோம். இதுமட்டுமல்ல ஊழலை ஒழிப்போம் என முடிவெடுத்து கொண்டு போராட வந்திருக்கிறோம்.

ஜெயலலிதாவிடம் கேட்கிறேன், உங்களுடைய சிறுதாவூர் அரண்மனையின் பூமிக்கடியில் உள்ள நிலவறைகளில் எத்தனை ஆயிரம் கோடி பதுக்கி வைக்கப்பட்டிருகிறது. ரோட்டில் போகும் ஏழை விவசாயின் பணத்தை பறிக்கிறது போலீஸ். சிறு வியாபாரிகளின் பணத்தை பறிக்கிறது போலீஸ். அந்த போலீஸாரை கேட்கிறேன், ஜெயலலிதாவின் அரண்மனைக்குள் 11 கண்டெய்னர் லாரி இருக்குதுன்னு சொல்றோம். அதுல கொள்ளை பணம் இருக்குன்னு சொல்றோம். அதனை சோதனையிட தயாரா?

அண்ணன் கலைஞர் அவர்களே, உங்களுக்கோ அருமை திருமகனுக்கோ ஜெயலலிதாவின் வீட்டில் சோதனை போடுன்னு சொல்லும் தைரியும் இருக்கிறதார். அ.தி.மு.க.வுக்கு மாற்று தி.மு.க. தான் என எனது முன்னாள் குருநாதர் கருணாநிதி சொல்வதை ஏற்று கொள்கிறேன். ஊழல் செய்வதில் அ.தி.மு.க.வுக்கு மாற்று தி.மு.க. தான் என்பதை. எனவே அருமை வாக்காளார்களே உங்கள் வாக்குகளை பணத்திற்கு விற்று விடாதீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல் ஆட்சி அகற்றப்படும் என்பதும் மட்டுமல்ல ஊழல்வாதிகளின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும்.

இது இப்போதைய ஆட்சியாளர்களிடம் மட்டுமல்ல முந்தைய ஆட்சியாளர்களிடம் இருந்தும் ஊழல் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். எல்லாவற்றிற்கும் மேலாக ஆட்சியை கண்காணிக்க கூடிய கூட்டணி ஆட்சி ஏற்படுத்த ஒப்பந்தம் ஏற்படுதியுள்ளோம். மீனவர்களின் பிரச்னைகள் தீர மத்திய அரசின் குடுமியை பிடித்து உலுக்குவோம். அதனால் வாக்களர்கள், தே.மு.தி.க.-மக்கள் நல கூட்டணிக்கு உங்கள் ஆதரவை தாருங்கள்" என்றார்.

- இரா.மோகன்

படங்கள்:
உ.பாண்டி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ