Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

படிச்சா அதிர்ச்சியாகிடுவீங்க... தலைசுற்ற வைக்கும் தேர்தல் செலவு!

மிழக சட்டமன்ற தேர்தலை நடத்த உத்தேச செலவு தொகையை அறிவித்துள்ளது தமிழக தேர்தல் ஆணையம். அதாவது 200 கோடி ரூபாய் செலவாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒரு மாநிலத்தின் சட்டமன்ற  தேர்தலை நடத்த 200 கோடி ரூபாயா என்று  தலைசுற்றுகிறதா? ஒரு தேர்தலில் அரசியல் கட்சிகள் செலவிடும் தொகையை கணக்கிட்டால் இதெல்லாம் சர்வசாதாரணம் என நினைப்பீர்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு,  1951-ம் ஆண்டு நடந்த சென்னை மாகாண முதல் சட்டமன்ற தேர்தலின் செலவு லட்சங்களில்தான் இருந்தது. வரும் மே மாதம் நடக்க உள்ள 16-வது சட்டமன்ற தேர்தலுக்கான செலவு கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் என அறிவித்துள்ளது தேர்தல் கமிஷன். இந்த 60 ஆண்டுகளில் தேர்தல் ஆணையத்தின் செலவு கிட்டத்தட்ட 400 மடங்கு உயர்ந்துள்ளது. இது தவிர போலீஸ் பாதுகாப்பு, அரசு இயந்திரத்தின் செலவுகளை எல்லாம் கணக்கிட்டால் 400 கோடியை எட்டும்.

இதற்கேற்ப தேர்தலில், வேட்பாளர் செய்யும் செலவின் தொகையும் தாராளமாக உயர்த்தப்படுள்ளது. தமிழகத்தில் கடந்த தேர்தலில் ரூ.16 லட்சமாக இருந்த தேர்தல் செலவு கணக்கு, இப்போது ரூ.28 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இது நம் அரசியல் கட்சிகளுக்கு போதாது என்பதுதான் இப்போதைய நிலைமை. நிர்ணயிக்கப்பட்ட இந்த தொகையின் அளவை விட 10 மடங்கு முதல் 20 மடங்கு வரை கூடுதலாக தேவைப்படும் என்பதுதான் இப்போதைய சூழல். எப்படியும் ஒரு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள் என எல்லோரும் செய்யும் செலவை கூட்டினால் ஒரு எம்.எல்.ஏ.வை தேர்வு செய்ய ரூ.10 கோடி முதல் ரூ.20 கோடி வரை செலவாகும் என்று  ஒரு கணக்கு சொல்கிறார்கள். அப்படியென்றால் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தேர்தலுக்கு 2000 கோடியில் இருந்து 4000 ஆயிரம் கோடி வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.

எப்படியும் ஒரு அரசியல் கட்சி ஒரு தொகுதிக்கு குறைந்த பட்சம் 2 கோடியில் இருந்து 5 கோடி வரை செலவழிக்கும். தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள்,  'தேர்தலில் உங்களால் 3 கோடி செலவிட முடியுமா?' என வேட்பாளர்களிடமே நேரடியாக கேட்டு வருகின்றன. அப்படியென்றால் அதற்கு குறைவாகவா தேர்தலில் செலவு செய்யும். திமுக 3 கோடி, அதிமுக 3 கோடி என தொகுதிக்கு இரு கட்சிகள் 6 கோடி ரூபாயை செலவழித்தால், 234 தொகுதிகளுக்கும் சேர்த்து கிட்டத்தட்ட 1404 கோடி ரூபாய். இதோடு அரசியல் தலைவர்களின் பிரசார செலவு, தலைமை செலவிடும் தொகை என கூட்டினால் இரு கட்சிகளின் செலவே 2 ஆயிரம் கோடியை தொடும்.

ஒரு தொகுதியில் பிரசாரத்துக்கு மட்டும் இந்த இரு அரசியல் கட்சிகள் எவ்வளவு செலவு செய்யும் என தெரியுமா? தினசரி பிரசாரம், வாகன செலவு, பேனர், போஸ்டர், குவார்ட்டர், பிரியாணி, பொதுக்கூட்ட செலவு, ஓட்டுக்கு பணம், தேர்தல் நாள் செலவு என ஒரு தொகுதியில்  சர்வ சாதரணமாக 3 கோடியை செலவழிப்பார்கள். இதில் பெரும் செலவு பிடிப்பது ஓட்டுக்கு பணம் கொடுப்பதுதான். 2 லட்சம் பேரில் இருந்து 4 லட்சம் பேர் வரை இரு தொகுதியில் வாக்காளர் உள்ள நிலையில், குறைந்த பட்சமாக எடுத்துக் கொண்டால் கூட, 25 ஆயிரம் பேரில் இருந்து 50 ஆயிரம் பேருக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பார்கள். ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் என கணக்கிட்டால் கூட ரூ.1.25 கோடியில் இருந்து ரூ.2.50 கோடி வரை செலவாகும்.

இதற்கு அடுத்து பெரிய செலவு என எடுத்துக்கொண்டால் அது பிரசார செலவு. ஒரு தொகுதியில் ஒரு நாளைக்கு 10 இடங்களில் பிரசாரம் செய்வார்கள் என எடுத்துக்கொண்டால், ஒரு இடத்துக்கு குறைந்த பட்சம் 10 ஆயிரம் செலவாகும் என்றால் கூட ஒரு நாளைக்கு ஒரு லட்சம் செலவாகும். அப்படியென்றால் 30 நாள் பிரசாரம் என எடுத்துகொண்டால் கூட 30 லட்சம் செலவாகும்.

இதில் வாகன செலவு அடங்காது. வாகன செலவுக்கு தினமும் 50 ஆயிரம் செலவாகும். 30 நாளைக்கு 15 லட்சம் செலவாகும். இது தவிர ஒரு பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்றால் உங்களுக்கு குறைந்த பட்சம் ஒரு லட்சம் செலவாகும். 10 பொதுக்கூட்டங்களை நடத்தினால் கூட 10 லட்சம் செலவாகும்.

இதில் மிகப்பெரிய செலவு கட்சி நிர்வாகிகளுக்கு செலவழிப்பது. ஒரு தொகுதியில் குறைந்தபட்சம் 100 வாக்குச்சாவடி என்றால், 100 சாவடிகளிலும் உள்ள கட்சி பொறுப்பாளர்கள் சுமார் 100 பேருக்காவது தினமும் செலவிட வேண்டியிருக்கும். ஒருவருக்கு பிரியாணி, குவார்ட்டர் போன்ற வசதிகளோடு பணத்தை செலவிட்டால் எப்படியும் ஒரு நபருக்கு 500 ரூபாயாவது செலவாகும். அப்படியென்றால் ஒரு நாளைக்கு 50 லட்சம். குறைந்த பட்சம் கடைசி 3 நாள் இப்படி செலவிட்டால் கூட 1.50 கோடி ரூபாய் தேவைப்படும். இது தவிர தேர்தல் நாளன்றும்  சில லட்சங்கள் தேவைப்படும்.

ஆக... ஒரு தொகுதியில் சர்வ சாதாரணமாக 3 கோடி ரூபாயில் இருந்து செலவிடுகிறார்கள். ஆனால் தேர்தல் நடந்து முடிந்து தேர்தல் ஆணையத்துக்கு செலவு செய்ததாக ஒரு கணக்கு காட்டுவார்கள் பாருங்கள். சில லட்சங்கள் மட்டுமே தேர்தலுக்காக செலவிட்டதாக கணக்கு காட்டுவார்கள். கடந்த தேர்தலில் 16 லட்சம் வரை செலவு செய்யலாம் என இருந்த போது, வேட்பாளர்கள் காட்டிய செலவு அதில் 50 முதல் 75 சதவீதம் வரைதான். பலர் 10 லட்சத்துக்குள்தான் கணக்கு காட்டியிருந்தார்கள்.

இவர்களாவது நமக்கு சேவையாற்ற மாட்டார்களா என்ற எண்ணத்தில்தான் நாம் ஒவ்வொரு முறையும் வாக்களித்து வருகிறோம். இத்தனை செலவு செய்து எம்.எல்.ஏ.வாகி இவர்கள் என்ன சேவையா செய்யப்போகிறார்கள்?

- ச.ஜெ.ரவி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close