Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐயா, சின்ன ஐயாவை தொடர்ந்து சின்னம்மா...! -தேர்தலில் களம் இறங்கும் செளமியா அன்புமணி?

தனித்துப்போட்டி, பவர்பாயிண்ட் பிரசாரம் என 2016 தேர்தலுக்காக  பா.ம.க பயணித்துக் கொண்டிருக்கும் பாதை யாரும் எதிர்பார்க்காதது.  இதுவரை தி.மு.க,  அ.தி.மு.க முதுகில் மட்டுமே சவாரி செய்துகொண்டிருந்த பா.ம.க.வினர், திடீரென தனித்து ஓடுகிறார்கள். தாங்கள் செய்த தவறை மறந்து விடுமாறு மன்னிப்பு கோருகிறார்கள். மாற்றம் நாங்கள்தான் என்கிறார்கள்.

முதல் கையெழுத்து, மாற்றம் முன்னேற்றம் அன்புமணி, அன்புமணி ஆகிய நான்...,  உங்கள் ஊர் உங்கள் அன்புமணி, என அரசியல் அரங்கில் வெரைட்டி காட்டிக்கொண்டிருக்கும் பா.ம.க.வில் அடுத்த அதிரடி அன்புமணியின் மனைவி செளமியா.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் செளமியா போட்டியிடப்போகிறார் என்று பரபரக்கிறது ஹாட் நியூஸ். இந்த செய்தி பலமாதங்களாகவே றெக்கை கட்டி வந்தாலும்,  'அதெல்லாம் கிடையாது 'என மறுத்துவிட்டார் அன்புமணி. ஆனாலும், அந்த செய்தி ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. காரணம், சில வாரங்களுக்கு முன்பு தருமபுரி மாவட்டம், நத்தமேடு என்கிற கிராமத்திற்கு கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு வந்திருந்திருந்தார் செளமியா. அப்போது,   'பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் வேட்பாளர் செளமியா அன்புமணி அவர்களே...' என்று ஒருவர் மைக்கில் வரவேற்க,  ஒரே ஆரவாரம்.  அதற்கு செளமியாவும் எதுவும் சொல்லாமல் சிரித்துவிட்டு போக... அந்த சிரிப்புதான் இப்போது பா.ம.க.வினரை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

தே.மு.தி.க.வில் பிரேமலதா இருக்காங்க, தி.மு.க.வில் கனிமொழி இருக்காங்க, பி.ஜே.பி.யில் தமிழிசை இருக்காங்க, அ.தி.மு.க.வுல  சொல்லவே வேண்டாம் அங்கு முழுக்க அந்த அம்மாவின் ராஜ்ஜியம்தான். தமிழக அரசியல்ல கட்சிகளுக்கும், பெண்களுக்கும் இருக்கும் பிணைப்பை யாராலும் பிரிக்க முடியாது. மக்களும் பெண்களைத்தான் விரும்புறாங்க. நாம் முன்வைத்திருக்கும் மதுவிலக்கு கொள்கை பெண்களின் நலன் சார்ந்ததாக இருக்கும்போது,  நமக்கும் ஒரு பெண் தலைவர் கண்டிப்பாக தேவை என்று அன்புமணியிடம் சொல்கிறார்களாம் பா.ம.க.வினர். அதற்கு அன்புமணி பார்ப்போம் என்பதுபோல சைலண்ட் ஆகிவிடுகிறாராம்.

கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில்தான் முதன்முதலில் பொதுவெளிக்கு வந்தார் செளமியா. முதன்முதலாக பிரசாரத்திற்கு வந்தாலும்,  தருமபுரி கிராமங்கள் முழுக்க செளமியாவின் பிரசாரம் நல்ல ரீச் ஆனது. அதனைத் தொடர்ந்து, அன்புமணி வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக ஆனபிறகு நடத்திய மதுவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் மைக் பிடித்து பேசும் அளவுக்கு புரோமோஷன் ஆனார். தருமபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்கு அருகில் நடந்த அந்த ஆர்ப்பாட்டத்தில் அன்புமணியும், செளமியாவும் ஒன்றாக பேசியது பா.ம.க.வினரிடத்தில் பலத்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. அந்த ஆர்ப்பாட்டத்தில் செளமியாவின் பேச்சைக் கேட்ட அன்புமணி,  'என்னை விட நல்லா பேசிட்டியே...' என அசந்துபோனாராம். இப்படி படிப்படியாக வளர்ந்து வரும் செளமியா,  தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் அதிகம்  என்கிறார்கள்.

இப்போது பசுமைத்தாயகத்தின் தலைவராக இருக்கும் செளமியாவுக்கு, கட்சியில் எந்த பதவியும் இல்லை. ஆனால், நன்கு அரசியல்  தெரிந்தவர். அன்புமணியின் பிரசார உடைகளை செலெக்ட் செய்வதில் ஆரம்பித்து, அன்புமணி கொடுக்க போகும் பேட்டிக்கு கரெக்‌ஷன் சொல்வது வரை எல்லாமே செளமியாதானாம். வெளிநாட்டில் இருக்கும் தகவல்களை படித்து புதுப்புது ஐடியாக்கள் கொடுப்பதும் செளமியாதான் என்கிறார்கள்.

அதிமுகவுல அம்மா, சின்னம்மா என இரண்டு பேர் இருக்கிறார்கள், பிரேமலதாவை அண்ணினு கூப்பிடுகிறார்கள், தமிழிசையை அக்காவாக்கிவிட்டார்கள். ஒருவேளை செளமியாவை முன்னிறுத்தப்பட்டால் எப்படி அழைப்பீர்கள்.? என்று கேட்டால்,  மேடம், சின்னம்மா, அண்ணினு நாங்க மூணுவிதமா கூப்பிடுவோம் என்கிறார்கள் பா.ம.க.வினர்.

செளமியா போட்டியிடுகிறாரா... அந்த செய்தி உண்மைதானா? என்று தருமபுரி மாவட்டத்தின் மாநில துணைப்பொதுச்செயலாளர் சரவணிடம் கேட்டோம்.

"அதெல்லாம் இல்லை என அன்புமணி மறுத்துவிட்டார். தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதுதான் எங்கள் முடிவு. ஒரு வேளை செளமியாவை நிறுத்தினார்கள் என்றால் கட்டாயமாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைப்போம். அவர் பிறந்த இடமும் சரி, புகுந்த இடமும் சரி, இரண்டுமே அரசியல் பாரம்பர்யம் கொண்ட குடும்பம். எனவே அவருக்கு குழந்தையிலிருந்து அரசியல் தெரியும். அவரெல்லாம் தீவிர அரசியலில் நுழைந்தால் தமிழகத்துல குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு தலைவராக வந்துவிடுவார்" என்றார்.

-எம்.புண்ணியமூர்த்தி 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close