Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காங்கிரஸை கலாய்க்கும் தி.மு.க. தூண்!

தர்ச்சட்டை ஏரியாக்களில், இப்படித்தான் பேசிக் கொள்கிறார்கள்... "இந்திரா காங்கிரசின் பசுவும் கன்றும் சின்னம் வைத்த காலம் முதல்  இன்றைய இந்திய தேசிய காங்கிரசின் கை சின்னம் வரையில் காங்கிரசின்  கூட்டணி இல்லாமல் திராவிடக் கட்சிகளால் ஒன்றும் செய்யமுடியாது. நாம கேட்கற 40 தொகுதிக்கு மேலே கொஞ்சம் போட்டுக் கொடுத்தால்  வாங்கிப்போம். இல்லைன்னா, தனியாகவே நிற்போம்."

அறிவாலய ஏரியாவிலோ,  ''எந்த சத்தமும்  காட்டாம கொடுத்ததை  வாங்கிகிட்டு போகும் காங்கிரஸ், கடந்த தேர்தலில் இருந்து கொஞ்சம் ஓவரா சவுண்டு காட்டுதே'' என்ற சலிப்புக்குரல் கேட்கிறது.

காங்கிரசின் குலாம் நபி ஆசாத் கோபாலபுரத்துக்குள் நுழையும் போது இருந்த கலகலப்பான முகம், அங்கிருந்து வெளியே வந்தபோது பொலிவை இழந்திருந்தது.

அதே வேளையில் " அவங்க (காங்கிரஸ்) 65 'சீட்' டிலேயே நிக்கறாங்க... கொஞ்சங்கூட இறங்கி வரலேன்னா எப்படி ? போனமுறை 63 கொடுத்தோம்னா, அப்போது இருந்த சூழ்நிலை வேறு. அவ்வளவு சீட் வேண்டாம்னு சொல்லியும் கேட்கவில்லை. கொடுத்ததில் பாதி கூட ஜெயிக்க முடியவில்லையே. இப்போது, அதே காங்கிரஸ் இன்னமும் சுருங்கியுள்ளது. த.மா.கா.வும் மறுபடி முளைத்து விட்டது. இன்னும் இரண்டு நாள் டைம் கொடுத்துப் பார்க்கலாம். வந்தால், வரட்டும், இல்லையென்றால் நம் கையில் ஒன்றுமில்லை" என்கிற  திமுக தரப்பு எண்ணங்கள் வெளியில் கசிய ஆரம்பித்து விட்டன.

பலமுறை கூட்டணியில் கைகோத்தும் கூட,  இன்னமும் முழுமையான புரிதல் இல்லாத நிலையிலேயே காங்கிரஸ் - திமுக ஜோடி சேர்ந்திருக்கிறது என்ற கருத்தே அனைத்து மட்டத்திலும் ஓடிக் கொண்டிருக்கிறது.

சத்தியமூர்த்தி பவனின் மனம் எப்படியுள்ளது, அவர்களின் நிலைதான் என்ன ? விசாரித்தேன்.

" நாங்கள், திமுகவிடமிருந்து கவுரவமான சீட்டுகளை எதிர்பார்க்கிறோம் என்பது மட்டுமே உண்மை. 65 சீட்டிலிருந்து இறங்கவேயில்லை என்பதெல்லாம் பொய்யான தகவல். 40- ஐ திமுக தாண்டவில்லை. நாங்கள் அதிலிருந்து ஒன்றிரண்டு எண்ணிக்கை சீட்டுகளை அதிகமாகக் கேட்கிறோம், இதுதான் உண்மை. பீகாரில் லாலுவிடமே 40 சீட்டை தாண்டித்தான் நாங்கள் வாங்கியிருக்கிறோம். காங்கிரஸ் என்பது தேசியக் கட்சி. தமிழ்நாட்டை மட்டுமே மையப்படுத்தி எங்களால் அரசியல் செய்து கொண்டிருக்க முடியாது. தமிழ்நாடும் எங்களுக்கு வேண்டும், அவ்வளவுதான்.

இங்கே இளங்கோவன், தங்கபாலு, விஜயதாரணி, யசோதா, டாக்டர் செல்லக்குமார், வசந்தகுமார் என்று கோஷ்டி தலைவர்கள் அதிகம். இதுபோக, ப.சிதம்பரம் அணியும் உண்டு. தலைக்கு  அவரவர் ஆதரவாளர்களைத் தக்க வைக்க, ஐந்து முதல் பத்து சீட்டுகள் வரையில் இவர்கள் கேட்பார்கள். இது போக டெல்லி தலைமையை மட்டுமே நம்பியிருக்கும் கட்சியினரும் உண்டு. திமுகவிடம் நாங்கள் கேட்கும் எண்ணிக்கை என்பது கவுரவம் சார்ந்த விஷயமே தவிர வேறல்ல. குலாம்நபி ஆசாத் அறிவாலயத்தில் பேச்சு வார்த்தை நடத்தும் போது, அவரை நன்கறிந்த கனிமொழிதான் அங்கிருந்து கூட்டணியை வழி நடத்துகிறார். அவர்களின் டெல்லி லாபியே வேறு. 'ஆகட்டும் சார், பாத்துக்கலாம்... நான் பேசிக்கறேன், திருப்தியா பண்ணிக்குவோம்னு' அந்த ஸ்பாட்டில் கனிமொழி சொல்றாங்க. அவரும் ஓ.கே.ன்னு சந்தோஷமா தலையை ஆட்டிக்கறாரு.

அடுத்த சில நிமிடங்களில் இன்னொருத்தர் (?!) "அவ்வளவு ஷேரிங்லாம் சரியா வரும்னு எனக்குத் தோணலை, பாருங்க, பாத்துப் பேசி முடிங்க" என்கிறார். பேச்சு வார்த்தை அத்தோடு அமைதிப் பேச்சு வார்த்தை போல சைகைக்கு மாறுகிறது. வெளியே வந்தபின், குலாம் நபி ஆசாத்,  "பேசிக் கொண்டிருக்கிறோம், இன்னும் முடியவில்லை... டெல்லியில் கலந்து பேசி விட்டுச் சொல்கிறேன், இரண்டொரு நாளில் மீண்டும் வருகிறேன்" னு சொல்லிட்டு போகிறார். இதுதான் கூட்டணிப் பேச்சு வார்த்தையில் நடந்து முடிந்த விஷயம்.

காங்கிரசுக்கு குறைந்த சீட்டைத்தான் தருவோம், அதுதான் எங்களுக்கு கவுரவம் என்று திமுக நினைக்கிறது. அதற்காகத்தான் கூட்டணி லிஸ்ட்டில் பார்டரில் கூட இல்லாத த.மா.காவும்  இந்த கூட்டணியில் வரப்போகிறது, பேசிக் கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் சொல்வது. தென்மாவட்ட திமுக செயலாளர்கள் நடத்திய ஆய்வுக் கூட்டங்களில் கூட , 'காங்கிரசோடு நாம் கூட்டணி வைப்பதுதான் நமக்கு நல்லது' என்று தொண்டர்கள் அழுத்தம் கொடுத்துப் பேசியிருக்கிறார்கள். அது மாறி விட்டால் இப்போதுள்ள சூழ்நிலையில் சரியாக வராது என்ற எண்ணத்தில்தான் அழகிரி அவசர, அவசரமாக  வந்து போனதும் கூட. ஆனால், அவர் வேறு காரணத்துக்காகத்தான் வந்தார் என்பது போல அது மாற்றிச் சொல்லப்பட்டது" என்கின்றனர், அடுக்கடுக்கான காரணங்களை அடுக்கியபடி.

திமுக ஏரியாவில் பேசியதில், "காங்கிரசுக்கு 25 சீட்டே அதிகம்தான். டெல்லியில போய்க் கேட்டுட்டு வரட்டும் என்றுதான் நாங்களே காத்துக் கொண்டிருக்கிறோம்.  அதே இடத்தில் நின்றால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. அப்படியே டெல்லிக்கு ரிட்டர்ன் ஆக வேண்டியதுதான்" என்கின்றனர் கேஷூவலாக.

யாராவது ஒருவர் இறங்கி வந்தால்தான் அல்லது விட்டுக் கொடுத்தால்தான் வேலையே நடக்கும் போலிருக்கிறது...!


- ந.பா.சேதுராமன்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close