Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அடிமையாக இருந்தது போதும், விழித்தெழுங்கள்- அன்புமணி

பணத்தையும், பொருட்களையும் வாங்கி ஐந்து வருடம் அடிமையாக இருந்தது போதும், விழித்தெழுங்கள் என்று தமிழக மக்களுக்கு  பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'உங்கள் ஊர் உங்கள் அன்புமணி' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து வருகிறார் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி. அரியலூர்- பெரம்பலூர் மாவட்ட பிரச்னைகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி, அதிமுக, திமுக ஆட்சியை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. வெளிநாடுகளில், முதலமைச்சர் அல்லது ஜனாதிபதியை தேர்வு செய்கிறார்கள் என்றால் அதில் அவர்களுடைய முதல் தகுதியே உடல்நிலைதான். இதன் முதல் நிலையிலேயே அடிபட்டு போகிறார்கள். தமிழ்நாட்டில் நான்கு முதலமைச்சர் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். ஒருவர் எழுந்திருக்க முடியாதவர் (கருணாநிதி), மற்றொருவர் நடக்க முடியாதவர் (ஜெயலலிதா), மற்றொருவர் தானாக நிற்க முடியாதவர் (விஜயகாந்த்). இன்னொருவர் உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன். அவர்களை பற்றி தவறாக சொல்லவில்லை. அவர்கள் வேலையையே அவர்கள் செய்ய முடியவில்லை. உங்களது பிரச்னைகளை எப்படி தெரிய போகிறது, செய்ய முடியும். யோசிக்க வேண்டும். அவர்கள் ஆட்சி தொடர வேண்டுமா?

முதலமைச்சராகும் அத்தனை தகுதியும் என்னிடம் உள்ளது.  முதலமைச்சர் ஜெயலலிதாவை நீங்கள் பார்த்துள்ளீர்களா, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்து கொண்டு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். ஆனால் மக்கள் பிரச்னை பற்றி அவர் கவலை படுவதில்லை. அதிகாரிகள் முதல் மக்கள் வரை யாரும் முதலமைச்சரை சந்திக்க முடியாத சூழல்தான் தமிழகத்தில் உள்ளது. இப்படிபட்ட முதலமைச்சர் தேவையா என நான் உங்களிடம் கேட்கிறேன். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட மத்திய அமைச்சர் ஒருவர், கடந்த 2 ஆண்டு காலமாக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக காத்து கிடந்தும் சந்திக்க முடியவில்லை என்று தெரிவித்து இருப்பது ஒரு சான்றாக உள்ளது. ஒரு மத்திய அமைச்சருக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களுக்கு என்ன நிலை யோசியுங்கள் மக்களே.

தமிழ்நாட்டை ஆளும் அரசியல்வாதிகளை நினைத்தால் மிகுந்த வேதனை அளிக்கிறது. இலவசத்தை வாங்கி ஐந்து வருடம் ஏமாந்தது போதும். நான் ஆட்சிக்கு வந்தால் யாருக்கும் இலவசம் கொடுக்கமாட்டேன். நல்ல கல்வி, இலவசமாக மருத்துவம் கொடுப்போன். பணத்தையும், பொருட்களையும் வாங்கி ஐந்து வருடம் அடிமையாக இருந்தது போதும் விழித்தெழுங்கள். தமிழகத்தில் உள்ள கட்சிகள் ஒன்று சேராமல் இருப்பதால் உரிமை இழக்கபட்டு வருகிறது. ஈகோ, கெளரவம் பார்க்கின்றார்கள். தமிழகத்தில் முதலில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த படவேண்டும். கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் ஒரு பிரச்னை என்னால் கட்சிபாகுபாடு இன்றி தங்களது பிரச்னை நிறைவேற்றி கொள்கிறார்கள். தமிழகத்தில் அப்படி இல்லை. மதுவால் வரும் வருமானத்தை வைத்துதான் அரசே செயல்படுகிறது. பெண்கள், இளைஞர்கள், குடிப்பது ஃபேஸ்புக்கில் வலம்வந்தது. இப்போது சிறு பிள்ளைகள், குழந்தைகள் குடிப்பது வாட்ஸ் அப்பில் பரவுகிறது. இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள் தமிழ்நாடு எவ்வளவு சீரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதற்கு ஒரே கையெழுத்தில் முற்றுபுள்ளி வைப்போம்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் ஆலைகளால் வெளியிடும் புகையால் நுரையீரல் பிரச்னை, ஆஸ்துமா, கேன்சர் போன்ற கொடிய நோய்களில் பலர் இறந்துள்ளனர். இந்த நிலைக்கு தீர்வு காணபடும். மக்களுக்கு எதிராக இருக்கும் எந்த நிறுவனமாக இருந்தாலும் இழுத்து மூடுவேன். இப்பகுதியில் வாழ்வாதாரத்தை நிலைநாட்டுவேன். பெரம்பலூர் கல்லாறு, சின்னமுட்டுலு நீர் தேக்கம் அணை கட்டப்படும். சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படும். மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சியில் 2,434 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஜெயலலிதாவிற்கு விவசாயம் தெரியாது என்பதாலே விவசாயிகளின் வேதனை அவருக்கு புரிவதில்லை. நானும் விவசாயி குடும்பத்திலிருந்து வந்தவன்தான். விவசாயி நம்நாட்டின் கடவுள்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் கெளரவமாக நடத்தப்படுவார்கள். என்னை ஆட்சியில் அமர வைத்தால் தமிழ்நாட்டையே வளம் மிகு மாநிலமாக மாற்றுவேன்" என்று முடித்தார்.

-எம்.திலீபன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ