Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரேமலதா தங்கியிருந்த ஹோட்டலில் ரகளை செய்த அதிமுகவினர்:மார்க்சிஸ்ட் கடும் கண்டனம்!

சென்னை: சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் தங்கியிருந்த ஹோட்டலில்  புகுந்து அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்ட சம்பவத்திற்கு   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

" சேலத்தில் தேமுதிகவின் முன்னணி தலைவரும், திரு. விஜயகாந்த் அவர்களின் துணைவியாருமான திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்குள் புகுந்து அஇஅதிமுகவினர் இன்று (3.4.2016) அராஜகமான முறையில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தமிழகத்தின் மாநகரங்களில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் நேற்று (2.4.2016) தாதகாப்பட்டி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அஇஅதிமுக, திமுக ஆட்சி காலத்து செயல்பாடுகளை விமர்சித்து பேசியுள்ளார். இதனை சகித்துக் கொள்ள முடியாமல் பொறுமை இழந்த அஇஅதிமுகவினர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்குள் புகுந்து அராஜகம் புரிந்துள்ளனர். இது ஜனநாயக அரசியலுக்கும், தேர்தல் நடைமுறை விதிகளுக்கும் எதிரானதாகும். எதிர்கட்சிகளின் பிரச்சாரத்தை தடுக்க முனையும் வன்முறை செயலாகும். தலைவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் இத்தகைய இழிசெயலில் ஈடுபட்ட வன்முறையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக தேர்தல் ஆணையத்தையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது.

இதுபோன்ற வன்முறை நிகழ்வுகளை தடுத்த நிறுத்த தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ