Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிறுதாவூர் பங்களாவில் பணமா..? வைகோவிற்கு சவால்விடும் தா.பாண்டியன்!

திருச்சி: சிறுதாவூர் பங்களாவில் ஜெயலலிதா பணம் பதுக்கி வைத்திருப்பதாக கூறுபவர்கள், அதை பறிமுதல் செய்து தேர்தல் ஆணையத்திடம் கொடுக்க வேண்டியது தானே. அப்படி அவர்கள் ரூ.5 கோடி பிடித்தார்கள் என்றால், ரூ.1 கோடி பணத்தை கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நன்கொடையாக கொடுத்துவிட்டு ரசீது பெற்று செல்லட்டும் என்று தா.பாண்டியன் வைகோவிற்கு சவால் விட்டுள்ளார்.

திருச்சியில் நேற்று மாலை 5.30 மணியளவில் திருச்சி புத்தூர் சாலையில் உள்ள ஒரு தனியர் திருமண மன்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர், புறநகர் மாவட்டத்தின் சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தேசிய நிர்வாககுழு உறுப்பினர் தா.பாண்டியன், மணப்பாறை செயலாளர் ஜனசக்தி உசேன் சௌக்கத்அலி, திருவறும்பூர் ராஜ்குமார் செல்வராஜ்,  மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் சிவசூரியன்,  மாநகர் ஜான்பால் சுந்தர்ராஜன், மாநில நிர்வாககுழு உறுப்பினர் இந்திரஜித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''கருத்து கணிப்பு நடத்துபவர்கள் தமிழகத்தில் உள்ள 7 கோடி வாக்காளர்களையும் சந்தித்து கருத்து கேட்பது இல்லை. அதனால், இதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஊடகங்கள் கருத்து கணிப்பு என்ற பெயரில் இதுபோன்ற கருத்து திணிப்புகளை வெளியிட வேண்டாம். அதேநேரம், கருத்து கணிப்பு என்று கூறிக் கொண்டு, ஊடகங்கள் யாருக்கும் துதி பாடக்கூடாது.

தமிழர்கள், மத்தியிலும் அதிகாரத்துக்கு வந்தால் தான், தமிழக பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். 'தேர்தலில் வெற்றி பெற்றால், மாநகரப் பஸ்கள் இலவசமாக இயக்கப்படும்' என்று ஒரு தலைவர் தெரிவித்துள்ளார். கொஞ்சமாவது பொருளாதார அறிவுடன் சொல்ல வேண்டும். வாய்க்கு வந்தவற்றை வாக்குறுதியாக தரக் கூடாது" என்றார்.

மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ, சென்னை சிறுதாவூரில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கட்டுக்கட்டாக பணம், கண்டெயினர் லாரிகளில் வந்து இறங்கியிருக்கின்றன. அங்கு அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் பணம், வாக்காளர்களுக்கு லஞ்சமாக கொடுக்கவே வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த தா.பாண்டியன், ''இப்போது ஜெயலலிதா பெட்டி பெட்டியாக பணம் அடுக்கி வைத்திருக்கிறார் என்பவர்கள், நாளை அந்தம்மா, என்னிடம் பணம் கொடுத்து வைத்திருப்பதாகவும் சொல்வார்கள். ''சிறுதாவூர் பங்களாவில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக தொடர்ந்து ஆணித்தரமாக சொல்கிறவர்கள், அங்கே போய் பணத்தைப் பறிமுதல் செய்து தேர்தல் ஆணையத்திடம் கொடுக்க வேண்டியதுதானே.

அப்படி அவர்கள் ரூ.5 கோடி பறிமுதல் செய்தார்கள் என்றால், அதில் ரூ.1 கோடி பணத்தை கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நன்கொடையாக கொடுத்துவிட்டு ரசீது பெற்று செல்லட்டும்" என்றார்.

மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவின் கருத்துக்கு, அந்த கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியின் தலைவர்களில் ஒருவரே இப்படி எதிர்த்து கருத்து தெரிவித்து இருப்பது, அக்கூட்டணி கட்சி தலைவர்களுக்கிடையே நிலவி வரும் மனகசப்பை தான் வெளிப்படையாக காட்டுவதாக உள்ளது.

சி.ஆனந்தகுமார்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ