Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இதுதான் இறுதி அதிமுக வேட்பாளர் பட்டியலா...?

மிழக சட்டப்பேரவைக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிவிட்டது. வேட்பாளர் பட்டியலில் இடம் பிடிக்க மாட்டார்கள் என்று நம்பப்பட்ட பல அமைச்சர்கள் வதந்திகளை பொய்யாக்கி, பட்டியலில் இடம்பிடித்து விட்டனர். எப்படியும் சீட் கிடைச்சிடும் என்று இறுமாப்பாக திரிந்த சில அமைச்சர்களுக்கு 'சீட்'  மறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் கடந்து,  ஒரு கேள்வி தொக்கி நிற்கிறது. ஆமாம். இது இறுதி வேட்பாளர் பட்டியல்தானா...? ஆம். வேட்பு மனுவை வாபஸ் பெற  இன்னும் ஏறத்தாழ ஒரு மாதம் இருக்கிறது. இந்த இடைவெளியில், அதிமுக எனும் அமானுஷ்ய கோட்டையில் எது வேண்டுமானாலும் நிகழலாம்.

கடந்த கால வரலாறு - 2011 :

கடந்த தேர்தலில், தொகுதி பங்கீட்டிற்காக கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை இழுபறியில் இருந்து கொண்டிருக்கும் போதே, 2011 ம் ஆண்டு, மார்ச் 17 -ம் தேதியன்று,  160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டது. கூட்டணி கட்சிகள் செய்வதறியாமல் திகைத்து நின்றன. இரும்புக் கோட்டையோ மெளனத்தையே பதிலாக தந்தது.

பின்பு, மார்ச் 19, "யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டாம். பட்டியலில் மாற்றங்கள் இருக்கிறது" என்றது. ஜெயலலிதாவிற்கு தெரியாமல் வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிட்டது என்பது இதற்கான காரணமாக உலாவியது.

அப்போதுதான் தமிழ் குடிகளுக்கு தெரியும், அதிமுகவில் ஜெயலலிதாவைவிட சக்தி வாய்ந்த நபர் யாரோ இருக்கிறார் என்று. ஆனால், துரதிருஷ்டவசமாக ஐந்து ஆண்டுகள் கடந்தும், அந்த நபர் யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை. 



ஆனால், வேட்பாளர் பட்டியலை மாற்றுவது அதிமுகவுக்கு ஒன்றும் புதிதல்ல... ஆம். 2006 லும் இது நடந்தது. முன்னாள் சபாநாயகர், காளிமுத்துவிற்கு மதுரை மத்திய தொகுதியில் வாய்ப்பு கொடுத்துவிட்டு, பின்பு பறிக்கப்பட்டது. இதற்கு சொல்லப்பட்ட காரணம், காளிமுத்துவின் உடல்நிலை. ஆனால், அதே தேர்தலில் இன்னும் நால்வருக்கு இதே நிலை ஏற்பட்டது. பேரூர் தொகுதியில் கே.பி. ராஜூவிற்கும்,  அந்தியூர் தொகுதியில் செல்வி துரைசாமிக்கும், போடி நாயக்கனூரில் பரமசிவத்திற்கும் இதே நிலைதான்.

இங்க எல்லாம் அம்மாதான்:

ஒரு வேட்பாளரை அறிவித்து விட்டு அவரை நீக்குவது, மிகுந்த மன உளைச்சலை தரும் என்பது தலைமைக்கு தெரியாதா...? சிலர் சொத்தை விற்று, வட்டிக்கு கடன் வாங்கி கூட வேலையை துவங்கி இருப்பார்கள்தானே...? ஏன் இதை எதிர்த்து யாருமே அதிமுகவில் பேசமாட்டேன் என்கிறார்கள் என்பது உங்கள்  கேள்வியா...? சாமான்யனுக்கு வேண்டுமானால், இந்த கேள்வி எழலாம். ஆனால், அதிமுக வேட்பாளருக்கு இந்த கேள்வி நிச்சயம் எழாது. ஏனெனில், வேட்பாளருக்கு தெரியும், அவருக்காக யாரும் ஒட்டு போடப் போவதில்லை என்று. அங்கு சர்வமும் அம்மா மயம்.  அமைச்சரவையையே பல முறை மாற்றுபவருக்கு இவை எல்லாம் எம்மாத்திரம்?



வரம் கொடுக்கும் தேவதை:

வரம் கொடுக்கும் தேவதைகள் வந்தபோது தூங்கினேன், வந்தபோது தூங்கிவிட்டு வாழ்க்கை யெல்லாம் ஏங்கினேன் - என்ற மு. மேத்தாவின் வரிகள் மிக பிரபலம். ஆனால், அதிமுகவை பொறுத்த வரை, இது செல்லுபடியாகாது.  நீங்கள் தூங்கி கொண்டிருந்தாலும், உங்களுக்கு வலுக்கட்டாயமாக வரம் கொடுக்கப்படும், நீங்கள் விழித்திருந்தாலும் உங்களுக்கு அளிக்கப்பட்ட வரம் எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்படும். ஆம். இங்கு மட்டும்தான் வரமே சாபமாகும்.


- மு. நியாஸ் அகமது
படங்கள்: ப.சரவணக்குமார்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ