Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திமுகவில் இணைந்தது ஏன்? காரணம் சொல்லும் காமராஜர் பேத்தி மயூரி!

காமராசரின்  தம்பி  அண்ணாமலை நாடார் பேத்தி  மயூரி.  பா.ஜனதாவில்  இருந்து விலகி,  கடந்த   சனிக்கிழமை அன்று   திமுக  பொருளாளர்  மு.க ஸ்டாலின்  முன்னிலையில்,  திமுகவில்  இணைந்தார்.  காமராசரின்  குடும்ப பிண்ணனியில் இருந்து  இதுவரை   அரசியலுக்கு  யாரும் வராத நிலையில்,     இவருடைய   இந்த அரசியல் பிரவேசம்  அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அவரது புதிய அரசியல் பயண உற்சாகத்திற்கிடையே அவரிடம் பேசினோம்....

திமுகவில் இணைய  காரணம்  என்ன ?

திமுகவில்  செயல்படுத்தபட்ட   நலத்திட்டங்கள்   பிடித்திருந்தது.  ஜனநாயக  முறைப்படி  நல்ல ஆட்சியை தரமுடியும்  என்றால்  அது திமுகவால் மட்டும்தான்  தர முடியும்.  காமராஜர்  கொண்டு வந்த நலத்திட்டங்கள்   ஆகட்டும்.  அவருடைய பிறந்த  நாளை  கல்வி  எழுச்சி  நாளாக  கொண்டு வந்தவர் திமுக தலைவர்  கருணாநிதி .  இதையெல்லாம்  பார்த்த பிறகுதான்  நான்  திமுகவில் இணைந்தேன்.

காமராசர்  காங்கிரசில்  இருந்தார்.  அவருடைய  கொள்கைககளை பின்பற்ற  வேண்டுமானால் அந்த கட்சியில் அல்லவா  நீஙகள் இணைந்திருக்க  வேண்டும் ?  
 
காமராசர் ஆட்சி புரிந்த  காங்கிரஸ் வேறு... இப்போதுள்ள  காங்கிரஸ் வேறு. நிறைய  வித்தியாசம்  உள்ளது . ஐயா நடைமுறைப்படுத்திய  திட்டங்கள்  அனைத்துமே  தொலைநோக்கு  பார்வையோடு    கொண்டுவரப்பட்டவை
 
காமராசரின்  கொள்கைகள் திமுகவில் பின்பற்றபடுகிறதா ?

சத்துணவு திட்டத்தை  முதன்முதலில் கொண்டு  வந்தவர்  காமராசர்தான். சிறப்புக்குரிய இந்த  திட்டத்தை அவருடைய   பெயரிலேயே   கொண்டு வந்தது  தலைவர்  கருணாநிதிதான். அந்த திட்டத்தை  எம்ஜிஆர்  கொண்டு வந்தது  போல மாற்ற  அதிமுகவினர்  முயற்சி  செய்கின்றனர்.  காமராசரின் பிறந்தநாளில் அவருடைய சிலைக்கு ஒரு மாலை மரியாதை  கூட கிடையாது . ஆனால் கருணாநிதி அவர்கள்,  ஐயாவின்  பிறந்த நாளை   கல்வி எழுச்சி நாளாக  கொண்டு  வந்து  பெருமை  சேர்த்தார்.  காமராஜரின்  புகழை மறைக்க   அதிமுக  பல்வேறு  வேலைகளை செய்து வருகிறது. விமான  நிலையத்திற்கு வைக்கப்பட்ட  காமராசரின்  பெயரை நீக்கிவிட்டு,  எம்.ஜி .ஆரின்  பெயரை   வைக்க   சட்டப்பேரவையில்   தீர்மானம்  இயற்றியுள்ளார் முதலமைச்சர் ஜெயலலிதா . அதேபோன்று   சிவகங்கையில்  காமராசரின்  சிலையை  திறக்க விடாமல் கடந்த  இரண்டரை  ஆண்டுகளாக  அதிமுகவினர்  தடுத்து வருகின்றனர். இது  தொடர்பாக  திமுக தலைவர்  கருணாநிதியை  சந்தித்து  வலியுறுத்துவேன் .

திமுக  ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து  ?

பெண்களுக்கு  சொத்துரிமை ,  உள்ளாட்சி அமைப்புகளில்   33 சதவீத இட ஒதுக்கீடு,  மகளிர்  சுய உதவி குழுக்கள்,  திருமண  உதவித் திட்டம்,   கர்ப்பிணி   பெண்களுக்கு   உதவித் தொகை,  முதியோர்  உதவி  தொகை  உள்ளிட்ட   எண்ணற்ற  திட்டங்கள்   திமுக  ஆட்சி  காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுக அரசு  கொண்டு வந்த திட்டங்களை  அப்படியே   அதிமுக  அரசு  செயல்படுத்தி  வருகிறது. அந்த  அரசால் எந்த  ஒரு திட்டமும் புதிதாக  கொண்டுவரப்படவில்லை 
 
ஜெயலலிதா  குறித்து   உங்கள் பார்வை  என்ன?
 
நிர்வாக   திறனற்ற  முதலமைச்சராக  ஜெயலலிதா காட்சி அளிக்கிறார்.  கார்டனை  விட்டு   வெளியே  வராமல் ஆட்சி  செய்து வருகிறார்.  அமைச்சர்களே  பேச  பயப்படுகின்றனர். இந்த ஆட்சியின் பயனாக   டாஸ்மாக்  பிரச்னை  மாநிலத்தில்  தலைவிரித்தாடுகிறது. தெருவுக்கு நான்கு கடைகளை  திறந்து வைக்க  இந்த  அரசு  வழிவகை செய்துள்ளது. ஒட்டு  மொத்த  பெண்களின்  கண்ணீருக்கு  காரணமாக  ஜெயலலிதா  உள்ளார். நான் வசிக்கும் ஆர்.கே.   நகரில்   "இங்கு    குறைந்த   விலைக்கு  கண்ணீர்  அஞ்சலி  போஸ்டர் அச்சடித்து    தரப்படும்"   என்று    விளம்பரம்  செய்கின்றனர். அந்த அளவுக்கு  குடியால்  ஏற்படக்கூடிய   உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது 

சட்டமன்ற  தேர்தலில்  'சீட்'  கொடுத்தால்  போட்டியிடுவீர்களா ?

தற்போதுதான்   கட்சி பணியை   தொடங்கி உள்ளேன் .    தலைமை  கொடுக்கிற  எந்த பணியையும்  செய்யவே    விரும்புகிறேன் 

சாதிய ரீதியிலான  வாக்குகளை  நீங்கள் நம்புகிறீர்களா ?
நிச்சயமாக நம்புகிறேன். நாடார்   சமூகத்தை சார்ந்த  வாக்குகள் அனைத்தும் திமுகவிற்கு  கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.  

எளிமை, நேர்மை  என  தூய்மையான  அரசியல் பின்புலத்தில் இருந்து  வந்துள்ளீர்கள். ஆனால் திமுகவின் மீது   2ஜி  வழக்கு  உள்ளது .  ஊழல் புகார் உள்ள  கட்சியில்   நீங்கள் இணைந்துள்ளீர்களே  ?

தளபதி ஸ்டாலின் மற்றும் அக்கா கனிமொழி ஆகியோர்   அடித்தட்டு   மக்களை நாள்தோறும் சந்தித்து  வருகின்றனர். அடித்தட்டு மக்களுக்கு முக்கியத்துவம்  கொடுக்கும்  கட்சியாக  திமுக  உள்ளது. 2 ஜி  வழக்கு  உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று  வருகிறது. அது  முற்றிலும் புனையப்பட்ட  வழக்கு.   அந்த வழக்கில் தீர்ப்பு வரும்போது  தெரிந்து கொள்வீர்கள்
 
-கே.புவனேஸ்வரி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close