Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு... குஷியில் குமரி தி.மு.க.!

மிழக சட்டப்பேரவை தொகுதிகளுக்கான அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பட்டியலை நேற்று தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்தார். அதில், கூட்டணி கட்சிகளும் அ.தி.மு.க. சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், குமரி மாவட்ட அ.தி.மு.க. கூடாரம் சோகத்தின் உச்சத்தில் உள்ளது. ஆனால், அதற்கு நேர்மாறாக தி.மு.க. கூடாரம் பட்டாசு வெடிக்காத குறையாக கொண்டாடி வருகிறது.

என்னவென்று விசாரித்தால், கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் குமரியில் உள்ள 6 தொகுதியையும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியே கைப்பற்றியது. அதுபோல, வருகின்ற 2016 சட்டமன்ற தேர்தலிலும் 6 தொகுதியையும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியே பெறும். அதற்கு வழிவகுத்த ஜெயலலிதாவுக்கு நன்றி என்கிறார்கள் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள்.

இது குறித்து தி.மு.க.வின் முக்கிய புள்ளிகள் சிலரிடம் பேசியபோது, ''கன்னியாகுமரி தொகுதிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பவர் தளவாய்சுந்தரம். வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த இவர், அ.தி.மு.க. கட்சிகாரங்ககிட்ட கூட சாதி ரீதியா தான் செயல்படுறாரு. நாடார்களை அவருக்கு பிடிப்பது இல்லை.

அவங்க கட்சிக்குள்ளேயே அவருக்கு அதிருப்தி அதிகமா இருக்கு. பா.ஜ.க. வேட்பாளர் மீனாதேவ். இவரும் வெள்ளாளர் சமூகம். அவங்க கணவர் இந்து நாடார். இவங்க ரெண்டு பேரும் வெள்ளாளர்-இந்து நாடார் ஓட்டை பிரிப்பாங்க. அதனால தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.பி.,எம்.எல்.ஏ, ஆஸ்டின் இறங்கி ஜெயிப்பார்.

அதேபோல், நாகர்கோவில் தொகுதிக்கு அ.தி.மு.க. டாரதிசாம்சனை நிறுத்திருக்காங்க. இவங்க நாகர்கோவில் கவுன்சிலர் எலெக்‌ஷனில்கூட கஷ்டபட்டு தான் டெப்பாசிடே வாங்குனாங்க. அதுபோல, நகர்மன்ற தலைவர் தேர்தலில் தோற்றவங்க, சீட் கிடைக்காத கோபத்தில் இருக்கும் அ.தி.மு.க.காரங்களே இவங்க தோல்வியை நிர்ணயிச்சிடுவாங்க. பா.ஜ.க. எம்.ஆர்.காந்தியும் ஓட்டை பிரிப்பாரு. தி.மு.க. மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் ஈசியா ஜெயிச்சிட்டு மீண்டும் அமைச்சராக வலம் வருவார்.

குளச்சல் தொகுதிக்கு அ.தி.மு.க. சார்பில் பச்சைமால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், இந்து நாடார். பா.ஜ.க. வேட்பாளர் ரமேஷ் இந்து கிருஷ்ணன் வகை சமூகம். இருவரும் ஓட்டை இந்துகள் ஓட்டை பிரிப்பார்கள். குளச்சல் பிரின்ஸ் மீது ஏற்கனவே அதிருப்தியில் காங்கிரஸ் இருக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் மட்டுமே தி.மு.க. கொடுத்திருப்பதால், இங்கே தி.மு.க. சார்பில் ஒரு கிறிஸ்தவ நாடார் வேட்பாளராக நிறுத்தப்பட்டு அவர் கோட்டைக்கு போவார். அந்த வாய்ப்பு, ஒருவேளை முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சனுக்கு கூட கிடைக்கலாம்.

கிள்ளியூர் தொகுதியில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. டெப்பாசிட்கூட  வாங்கவில்லை. தற்போது, மேரிகமலா பாய் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். காங்கிரஸில் இந்த முறை கண்டிப்பாக மேற்கு மாவட்ட தலைவர் அசோகன் சாலமனுக்கு, இளங்கோவன் சீட் வாங்கி கொடுத்திடுவார். இரண்டு பேரும் அவ்வளவு நெருக்கம். அசோகன் சாலமன், இளங்கோவன் பதவியில் இல்லாத போதும் அவர் விசுவாசியாக இருந்தவர்

அதனால், இளங்கோவன் அவருக்காக 'ஸ்பெஷல் கேர்' எடுத்து பிரசாரம் செய்வார். அத்தோடு தா.ம.கா. போட்டியிடுமா என்கிற கேள்வி இருக்கிறதும், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அசோகன் சாலமனை காப்பாற்றி அவரது எம்.எல்.ஏ. கனவை நிறைவேற்றும். பா.ஜ.க.வின் பொன்.விஜயராகவனும் கணிசமான ஓட்டை பிரிக்கலாம். அதனால், அ.தி.மு.க. மூனாவது இடத்திற்கு வரும்.

விளங்கோடு தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ. விஜயதரணி மீண்டும் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க. வேட்பாளர் நாஞ்சில் டொமினிக்கும், பா.ஜ.க. வேட்பாளர் தர்மராஜூம் டெப்பாசிட் கூட வாங்குவது இங்கு கொஞ்சம் சிரமம் தான்.

கம்யூனிஸ்ட் சார்பில் லீமாரோஸ் போட்டியிடலாம். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அலையில் விஜயதரணி மீண்டும் எம்.எல்.ஏ.ஆவார். அ.தி.மு.க.வை இங்கும் மூன்றாவது அல்லது நான்காவது இடத்திற்கு இவர்கள் தள்ளலாம்.

பத்பநாபபுரம் தொகுதிக்கு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பிரசாத் போட்டியிடுகிறார். சமகாலத்தில் அ.தி.மு.க.வின் பலம் அங்கு குறைந்து விட்டது. பா.ஜ.க. சார்பில் ஷீபாபிரசாத் போட்டியிடுகிறார். அவர் கணிசமான இந்து ஓட்டுகளை பிரிப்பார். தி.மு.க. சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் மனோ தங்கராஜ் அல்லது சிட்டிங் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன் போட்டியிட்டு வெற்றி பெறுவார்கள்.

அதனால், கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு குமரி மாவட்டத்தில் கிடைத்த வெற்றி, மீண்டும் 2016-ல் கண்டிப்பாக கிடைக்கும். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்கு தற்போதே அச்சாரமிட்டுள்ள ஜெயலலிதாவுக்கு நன்றி" என்று குஷியாக உள்ளனர் குமரி மாவட்ட உடன்பிறப்புகள்.

- த.ராம்

படங்கள்:
ரா.ராம்குமார்

எடிட்டர் சாய்ஸ்