Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேசிய மதுபானமாக 'கள்ளு'... சீமானின் தேர்தல் பிரச்சாரம்!

ராமேஸ்வரம்: பனம்பாலை (கள்) தேசிய மது பானமாக அறிவிக்க எங்களை தேர்ந்தெடுங்கள் என்று ராமேஸ்வரத்தில் சீமான் கூறினார்.

ராமநாதபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சட்டமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் ராமேஸ்வரத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் டாக்டர் சிவக்குமாரை அறிமுகபடுத்தி உரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ''நாம் தமிழர் கட்சியை நானாக தொடங்கவில்லை. வரலாறும், காலத்தின் சூழலும் சேர்ந்து தான் என் கையில் கட்சியை கொடுத்தது.

தமிழக மக்களை, இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்கள் கையேந்தி நிற்கும் மானங்கெட்ட நிலைக்கு தள்ளிவிட்டனர். இதனால் தமிழக மக்கள் திருவோடு ஏந்தி தெருவோடு நிற்கின்றனர். இந்த நிலைக்கு காரணம் யார்? மண்ணின் வளங்கள் எல்லாம் தனிபெரும் முதலாளிகளின் சொத்தாக மாறிவிட்டது. நிலத்தடி நீரை உறிஞ்சி அதை பாட்டில்களில் அடைத்து விற்பதன் மூலம் தண்ணீரையும் காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு உருவாக்கி விட்டனர். தற்போதைய ஆட்சியாளர்கள், அரசியலை லாபம் பார்க்கும் தொழிலாக மாற்றிவிட்டனர்.

எங்கள் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் சிவக்குமார், குழந்தைகள் நல மருத்துவர், கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியர். பணியை விட்டு விட்டு சமூகத்திற்கு மருத்துவம் செய்ய வந்திருக்கிறார். மற்றவர்களை போல, நாங்கள் ஒன்றும் தெரியாத 'கூ முட்டை'களை வேட்பாளராக நிறுத்தவில்லை. கூட்டணிக்காக சில அடிமைகளை போல, அள்ளக் கைகளை போல யாரையும் எதிர்பார்த்து நிற்கவில்லை. கொள்கை தெளிவுடன் களத்தில் நிற்கிறோம்.

கருப்பாய் இருப்பவன் எல்லாம் தமிழன் என மக்கள் நினைக்கிறார்கள். அப்படியானால் எருமை மாடுகூட கருப்பாகத்தான் இருக்கிறது. விஜயகாந்த் என்ன தமிழனா?. விஜயகாந்திற்கு பதிலாக சுதந்திர போராட்ட தியாகி நல்லகண்ணுவை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருந்தால் ஏற்று கொள்ளலாம். அப்படி செய்யாமல் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவிச்சிட்டு இப்ப அவர் எங்கிருக்கார்னு தேடிகிட்டு இருக்குறாங்க. அந்த கூட்டணியில் துணை முதல்வர் இருக்கிறார், கல்வி அமைச்சர் இருக்கிறார், உள்ளாட்சி அமைச்சர் இருக்கிறார், நிதி அமைச்சர் இருக்கிறார் ஆனால் முதலமைச்சரை மட்டும் காணலை.

தேசிய கட்சி என சொல்லி கொள்ளும் பா.ஜ.க., கச்சதீவு மீட்பு மாநாடு போட்டது. கடல் தாமரை மாநாடு போட்டது. ஆனால், நாடாளுமன்றத்தில் தீர்மானம் போட்டதா? இலங்கைக்கு அருகாமையில் இருந்ததால் கச்சதீவை கொடுத்துவிட்டதாக சொல்கிறார்கள். அப்படியென்றால், பாகிஸ்தானுக்கு அருகில் இருக்கும் காஷ்மீரையும், சீனாவுக்கு அருகில் இருக்கும் அருணாச்சல் பிரதேசத்தையும் கொடுத்து விடுவீர்களா? தமிழன் நிலமான கச்சதீவை நமக்கு தெரியாமல் திருடி கொடுத்துவிட்டு இப்போது கொடுத்தது கொடுத்ததுதான் திரும்ப கேட்க முடியாது என்கிறார்கள்.

94 வயதில் ஒரு மனிதன் ஆள நினைக்கிறார், அடிமைப்படுத்தி ஆள துடிக்கிறார். அவருக்கு போட்டியாக 70 வயதில் நம்மை அடிமை படுத்தி ஆள ஏங்குகிறார் அம்மையார். முகத்தை பார்த்து கும்பிடுபவர்களை ஏற்கலாம். நிழலை பார்த்து கும்பிடுபவர்களை எப்படி ஏற்பது. சில பேர் காலில் விழுந்து கும்பிடுகின்றனர். இன்னும் சில பேரில் கார் சக்கரத்தில் விழுந்து கும்பிடும் அடிமைகளாக இருக்கிறார்கள்.

ஒரு சீட்டு, இரண்டு சீட்டு, முக்கா சீட்டு, 5 அரை சீட்டுக்காக தவம் கிடக்கிறார்கள். சோவுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் ஆஸ்பத்திரிக்கே போய் பார்க்க முடியும் முதல்வருக்கு நாட்டின் முதல் குடிமகனாக இருந்த கலாமின் மறைவிற்கு நேரில் வர முடியவில்லை. அவர் நினைத்திருந்தால் விமான நிலையத்திலேயே போய் அஞ்சலி செலுத்தியிருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

சிங்களர்களால் நமது மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க, எங்கள் ஆட்சியில் 50 ஆயிரம் பேரை கொண்ட சிறப்பு காவல் படை அமைப்போம். அவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுத்து ஒவ்வொரு படகிலும் 5 பேரை பாதுகாப்புக்காக அனுப்புவோம். மீனவர்கள், பெண்களுக்கு என தனி தொகுதிகள் ஏற்படுத்துவோம். தமிழ் தேசிய வைப்பகம் (வங்கி) துவக்குவோம். அதன் மூலம் அனைவருக்கும் வட்டி இல்லா கடன் கொடுப்போம். பனம்பால், தென்னம்பால் ஆகியவற்றை தேசிய மது பானமாக (மூலிகை சாறு) அறிவிப்போம். இவற்றையெல்லாம் நிறைவேற்ற எங்களை தேர்ந்தெடுங்கள்" என்றார்.

- இரா.மோகன்

படங்கள்:
உ.பாண்டி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close