Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தேமுதிக தொண்டர்களின் மனநிலை தி.மு.க கூட்டணிதான்...!' -அதிரடியைத் தொடங்கிய சந்திரகுமார்

சென்னை:  தே.மு.தி.க தலைமையின் செயல்பாட்டுக்கு எதிராசக்கட்சியை சேர்ந்த ஐந்து எம்.எல்.ஏக்கள் உள்பட பத்து மாவட்டச் செயலாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 'தொண்டனின் மனநிலையை பிரதிபலிக்கும் தலைவராக விஜயகாந்த் இல்லை' எனவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தே.மு.தி.க கொள்கை பரப்புச் செயலாளர் எம்.எல்.ஏ சந்திரகுமார், எம்.எல்.ஏக்கள் பார்த்திபன், சி.எச்.சேகர் ஆகியோர் இன்று மதியம் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய சந்திரகுமார், " கட்சித் தலைமை என்ன சொல்கிறதோ, அதை செயல்படுத்துவதுதான் தொண்டனின் கடமை. அந்த அடிப்படையில் கேப்டன் சொல்வதை செய்து வந்தோம். கடந்த ஐந்து ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் நாங்கள் படாத கஷ்டங்கள் இல்லை. தே.மு.தி.கவின் எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் பல வகைகளில் பிரச்னைகள் ஏற்பட்டது. என் மீது ஏராளமான வழக்குகளைப் போட்டார்கள். மேட்டூர் எம்.எல்.ஏ பார்த்திபன் மீது 11 வழக்குகளைப் போட்டார்கள். சட்டமன்றத்தில் இருந்து சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளானோம். கட்சித் தொண்டர்கள் ஒவ்வொருவரும் அ.தி.மு.க ஆட்சியால் பாதிக்கப்பட்டார்கள். இருந்தும், கிராமம், நகரம், தெரு என கட்சியை வளர்க்க கடுமையாகப் பாடுபட்டோம். பல இடங்களில் எங்கள் தொண்டர்கள் தாக்குதலுக்கு ஆளானார்கள். தமிழ்நாட்டில் நடக்கும் மோசமான ஜெயலலிதா ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் அனைவரின் நோக்கம். கேப்டனும், ஒருகட்டத்தில், ஜெயலலிதா ஆட்சியை வீழ்த்த எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன் என்றார். கடந்த 10-ம் தேதி தனித்துப் போட்டி எனச் சொன்னார். நாங்கள் அனைவரும் அவரிடம் பேசினோம். 23-ம் தேதி எங்கள் யாருக்கும் சொல்லாமல், மக்கள் நலக் கூட்டணியோடு சேருகிறேன் என அறிவித்துவிட்டார். இது எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

தே.மு.தி.கவில் நேர்காணல் நடந்தபோது, தொண்டர்களிடம் பேசிய கேப்டன், 'தி.மு.கவோடு பேசிக் கொண்டிருக்கிறேன். இவ்வளவு சீட் தருகிறேன் என்கிறார்கள். ஓ.கேவா?' எனக் கேட்டார். 95 சதவீத தொண்டர்களின் மனநிலையும் தி.மு.க கூட்டணிதான் என உறுதியாக இருந்தார்கள். அதற்குள் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வீடு, வாசல், தாலிக் கொடி என அனைத்தையும் விற்றுத்தான் கட்சியை நடத்தி வந்தோம். ஒரு எம்.எல்.ஏவான என்னுடைய நிலை ரொம்பவே மோசம் என்றால், சாதாரண தொண்டனின் நிலை எப்படியிருக்கும்? என்று நினைத்து பாருங்கள். எனவே, மக்கள் நலக் கூட்டணி வேண்டுமா என்பதை கேப்டன் மறுபரிசீலனை செய்ய வேண்டும். மக்கள் நலக் கூட்டணியை வைத்துக் கொண்டு ஜெயலலிதாவை வீழ்த்த முடியாது. இந்தக் கூட்டணியால் ஜெயலலிதா வெற்றி பெறுவார் என்ற தோற்றம் உருவாகிவிட்டது. கட்சித் தலைமை எடுக்கும் முடிவு தொண்டர்களின் மனநிலையைப் பிரதிபலிக்க வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளாக கேப்டனுக்கு விசுவாசமாகத்தான் இருந்தோம். ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதுதான் மக்களின் முடிவாக இருக்கிறது. அதற்கேற்ப எங்கள் முடிவு இருக்கும்" என்றார் அதிரடியாக.

நாங்கள்தான் உண்மையான தே.மு.தி.க என சொல்லிக் கொண்டு, தி.மு.க கூட்டணியில் போட்டியிட தயாராகிறது சந்திரகுமார் அணி.

ஆ.விஜயானந்த்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ